உத்தரிக்கிற ஆண்மாக்கள் வணக்கம் மாதம்m 26.11.2019
உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிற நாலாம் வழி திருச்சபையின் பலன்களை அடைதலாம்
தியானம்
கடன்பட்ட மனுஷனொருவன் தன் கடனைச்செலுத்த ஒரு தர்மவானுடைய பொக்கிஷத்திலேயிருந்து தேவையான பணங்களை எடுக்கக்கூடுமேயானால் தன் கடனைச் செலுத்தாமலிருப்பானோ? அவன் அப்போது தன் கடனைச் செலுத்தாதிருந்தால் அவனுக்கு மதியீனனென்றும், பைத்தியக்காரனென்றும் பேறுண்டாகுமல்லவோ? மனுஷனானவன் தான் செய்த பாவங்களினால் தேவ நீதிக்குக் கடனாளியாய்ப் போனானென்பது நிச்சயம். இந்தக் கடனைச் செலுத்துகிறது மகா கடினமும் பிரயாசமுமாயிருக்கிறதினாலே அது அநேகமாய் அவனால் தீர்க்கக்கூடாத காரியமாயிருக்கும். ஆயினும் இந்தக் கடனைச் செலுத்த திருச்சபையினுடைய பலன்களடங்கிய வற்றாத பொக்கிஷத்திலிருந்து நமக்கு வேண்டியமட்டும் எடுக்கக்கூடும். மீண்டும் குறையாத இந்த பொக்கிஷத்திலிருந்து உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணத்தக்கதாகத் தேவையான பலன்களை எடுத்துக் கொள்ளலாமென்பது விசுவாச சத்தியமாம்.
அதெப்படியாகுமென்றால், திருச்சபை, ஆண்டவர் தமக்குக் கொடுத்த அதிகாரத்தைக் கொண்டு சேசுநாதருடைய அளவில்லாத புண்ணிய பலன்களையும். அர்ச்சியசிஷ்டவர்களுடைய மீதியான பலன்களையும் மனுஷருக்குக் கைம்மாறாகப் பரிமாறிக்கொடுக்கிறதாமே அதைக்கொண்டு மனுஷனானவன் தன் கடனைத் தீர்க்கலாம். உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணலாம் . மெய்யான சர்வேசுரனான சேசுக்கிறிஸ்து நாதர் சகல உலகங்களை மீட்டிரட்சிக்க தம்முடைய திவ்விய இரத்தத்தின் ஒரு துளி மாத்திரம் போதுமென்பது தப்பாத
சத்தியமாம்.
ஆனால் நம்முடைய பரமநாதர் படாத பாடுபட்டு, நிந்தை வதையெல்லாம் அனுபவித்து, தம்முடைய பிராணனையும் தந்து, தமது திவ்விய இரத்தமுழுமையும் சிந்தத் திருவுளமானதினாலே, இவ்வுலக இரட்சிப்பு சம்பூரணமாய் நிறைவேறினதுமல்லாமல் அவருடைய புண்ணியபலன்கள் அளவில்லாதவிதமாய் மிஞ்சிவிட்டதென்பது உண்மை. மேலும் மாசில்லாத தேவமாதாவானவர்கள் செய்த புண்ணியங்களுக்குக் கணக்கில்லை. மீளவும் பிதாப்பிதாவாகிய அர்ச் சூசையப்பரும், அப்போஸ்தலர்களும், வேதசாட்சிகளும், தபோதனரும் முதலிய கணக்கில்லாத அர்ச்சியசிஷ்டவர்களும், தாங்கள் செய்த ஜெபதப தான் தர்மம் தவக்கிரியைகளினாலே தாங்கள் செலுத்த வேண்டிய பரிகாரக்கடன்களைத் தீர்த்ததுமல்லாமல் இந்த நற்கிரியைகளினால் வந்த பலன்கள் மீதியாயினதென்றும் சொல்லவேண்டியது.
இப்படியே சேசுநாதருடைய விலைமதிப்பற்ற புண்ணிய பலன்களும், அர்ச். தேவமாதாவாவின் எண்ணிறந்த உத்தம புண்ணியங்களும், மற்ற சகல அர்ச்சியசிஷ்டவர்களுடைய மீதியான பரிகாரப் பலன்களும், தேவ கிருபையினாலே திருச்சபைக்குச் சொந்தப் பொக்கிஷமாயிற்று. நமதாண்டவராகிய சேசு கிறிஸ்துநாதர் தாம் ஸ்தாபித்த ஏழு தேவதிரவிய அநுமானங்கள் வழியாய்த் தம்முடைய அளவற்ற பலன்களை நமக்கு அளிக்குமாப்போல, திருச்சபையானது தனக்கு முன்சொன்ன பொக்கிஷத்தி லிருக்கும் ஞானத் திரவியங்களை நமக்குக் கொடுத்துக் கொண்டு வருகிறதாமே.
இந்த பலன்களின்மூலமாய்ச் சுகிர்த முறைமை எவ்வித பலத்த நியாயங்களிலும் ஊன்றியிருக்கிறபடியினாலும், இதற்கு விரோதமாய்ப் பதிதர் பிதற்றுகிற தூஷணங்கள் எல்லாம் முழு அநியாயமும் சுத்த அபத்தமுமாய் இருக்கிறதென்று எல்லாருக்கும் விளங்குமே பக்தியுள்ள கிறிஸ்துவர்களோவென்றால், ஆண்டவரான சுவாமி நமக்குச் செய்தருளிய உபகாரங்களுக்குள்ளே இது பெரிய உபகாரமென்றெண்ணி அதற்காக அவருக்குத் தோத்திரம் பண்ணுவார்களல்லாமல் பல பலன்களை அடையவும் விரும்புவார்களாமே.
கிறிஸ்துவர்களே ! திருச்சபை அளித்த பலன்களினாலே உங்களுக்கு ஞான பிரயோசனம் அதிகமதிகமாய் வரும்படியாகச் சொல்லப்போகிறதைக் கவனித்துக் கேளுங்கள்.
முதலாவது பரிபூரணப்பலன் தனிப்பலன் ஆகிய இவ்விரண்டு வகைப் பலனுண்டு . பரிபூரணப்பலன் ஏதென்றால், பாவத்தால் வருகிற அநித்திய ஆக்கினையை முழுவதும் நிவாரணமாக்குகிற பலனாம். எவனொருவன் அந்தப் பூரண பலனை முழுமையும் அடைவானேயானால், பரிசுத்தனாகி மோட்சத்தை அடைவதற்குப் பாத்திரவானாய் இருப்பான் . ஆனால் பரிபூரண பலனை அடைவது சிரமமும் அருமையுமாம். ஏனென்றால் அதற்குத் தக்க தேவசிநேகமும், உண்மையான மனஸ்தாபமும், சொற்ப பாவங்களின்மேலே முதலாய் முற்றும் வெறுப்பும் வேணுமென்கிறதினாலே இவையெல்லாம் கொண்டிருக்கிறது எளிதான காரியமல்ல. ஆனாலும் அதை முழுவதும் அடையாமற்போனாலும் அதில் ஒரு பங்காவது அடைவது தப்பாது.
தனிப்பலனோவென்றால் பாவத்துக்கு வரவேண்டிய அநித்திய ஆக்கினையில் சிலநாட்களை அல்லது சில காலத்தை மாத்திரம் நிவாரணமாக்குகிற பலனாம். ஆகையால் நாற்பதுநாள், நூறுநாள், ஏழுவருஷம், பத்துவருஷப் பலன்கள் முதலியவை தனிப்பலன்களெனப்படும். இந்தத் தனிப்பலன்களால் பூர்வீக திருச்சபையில் அந்தந்தப் பாவத் துக்கு வழங்கின ஆக்கினையில் அத்தனைநாள் அல்லது அத்தனை காலம் உத்தரிப்பு குறையும், அல்லது உத்தரிக்கிற ஸ்தலத்திலே செய்யவேண்டிய பரிகாரம் மாத்திரம் தணியும்.
இரண்டாவது பரிபூரண பலனையாவது தனிப்பலனையாவது தனக்கே பெறவேணுமானால் சாவான பாவமின்றி இஷ்டப்பிரசாதத்தோடு இருக்கவேணுமென்கிறது நிச்சயம். பரிபூரண பலன்களை அடைந்து மற்றவர்களுக்கு ஒப்புக் கொடுக்கவேனுமானாலும் அப்போது கூட சாவான பாவமில்லாமல் இஷ்டப்பிரசாதத்தோடு இருக்கவேணும். இவர்களுக்குத் தனிப்பலனை ஒப்புக்கொடுக்கிறதற்கு இஷ்டப்பிரசாதம் அவசரமில்லாதிருந்தாலும் அதுவும் இருந்தால் மெத்த நல்லது.
மூன்றாவது எந்தெந்தப் பலன்களை அடையவேணுமென்றாலும் அதற்கு கற்பிக்கப்பட்டதெல்லாம் தப்பாமல் அநுசரிக்கவேண்டியது. பரிபூரண பலனைப்பெறுவதற்குப் பாவசங்கீர்த்தனம் பண்ணவும், நன்மை வாங்கவும், அர்ச். பாப்பானவருடைய சுகிர்த கருத்துக்களைக் குறித்து வேண்டிக்கொள்ளவும் கற்பித்திருக்கிறதே வழக்கம்.
நாலாவது எந்தெந்தப் பலன்களையும் அடைய வேண்டுமானால் அதைப் பெற வேணுமென்கிற கருத்து வேண்டியதுமல்லாமல் , அதற்குக் கற்பித்த சுகிர்த முயற்சிகளையும் நிறைவேற்றுவது அவசியம் . கருத்து மட்டும் இருந்தால் , பக்தியுள்ள கிறிஸ்தவனானவன் தினந்தோறும் செய்யும் செபங்களினாலும் நற்கிரியைகளினாலும் அநேகம் பலன்களைப்பெற்றுக்கொள்ளலாமே. அநேகம்பேர் இவைகளையெல்லாம் நினைக்காதிருக்கிறதினாலே, தங்களுடைய கையில் வந்த அநேக ஞானப் பலன்களை இழந்துபோகிறார்கள் ஆனதினாலே இந்த ஜெபத்தை அல்லது நற்கிரியையைச் செய்யும் போது அவைகளுக்குக் குறிப்பிட்ட பலனைப் பெற வேணுமென்கிற கருத்தில்லாதிருந்தாலும், தினந்தோறும் காலையில் அந்தக் கருத்தை சற்றாகிலும் புதுப்பிக்கவேணும்.
Comments are closed.