நற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 20)

பொதுக்காலம் முப்பத்து மூன்றாம் வாரம்
புதன்கிழமை
லூக்கா 19: 11-28

பொறுப்புள்ளவர்களாக வாழ்வோம்

நிகழ்வு

ஒருசமயம் மிகச்சிறந்த நடிகரும் நகைச்சுவையாளரும் பேச்சாளருமான ஜோ.இ.ப்ரௌன், படைவீரர்கள் நடுவில் பேசுவதற்கு அழைக்கப்பட்டார். அவரும் வந்த அழைப்பினை ஏற்றுக்கொண்டு, அவர்கள் நடுவில் பேசுவதற்குச் சென்றார். அவர் சென்ற இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட படைவீரர்கள் இருந்தார்கள். பொறுமையாகப் பேசத்தொடங்கிய ஜோ, நேரம் செல்லச் செல்ல அங்கிருந்த அனைவரும் மெய்ம்மறந்து கேட்கின்ற அளவுக்குப் பேசத் தொடங்கினார்.

நடுவில் ஒரு படைவீரர், “பெரும் மதிப்பிற்குரிய ஜோ அவர்களே! இவ்வளவு நேரம் மிக அற்புதமாக உரையாற்றினீர்கள்… கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இப்பொழுது ஒருசில கெட்ட நகைச்சுவைகளைச் (Dirty Jokes) சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும்” என்றார். அவர் சொன்னதைக் கேட்டு ஜோ ஒருநிமிடம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். அவர் மட்டுமல்ல, அங்கிருந்த படைவீரர்கள்கூட அமைதியாக இருந்தார்கள். ‘இதற்கு இவர் என்ன சொல்லப்போகிறாரோ…?’ என்று எல்லாரும் நினைத்துக்கொண்டிருந்த தருணத்தில், ஜோ படைவீரர்களைத் தன்னுடைய பிள்ளைகளைப் போன்று நினைத்துப் பேசத் தொடங்கினார்:

“அன்பிற்கினியவர்களே! நான் பத்து வயதிலிருந்து மேடைகளில் பேசிவருகின்றேன்; பலதரப்பட்ட குழுக்களிடமும் மக்களிடம் பேசியிருக்கின்றேன். ஆனால், ஒருநாளும் கெட்ட நகைச்சுவைகளை என்னுடைய உரையில் பயன்படுத்தியதே இல்லை. நான் பொதுமேடைகளில் பேசத் தொடங்குவதற்கு முன்னம் ஒரு முடிவெடுத்தான். நான் எடுத்த முடிவு இதுதான்: ‘எனக்கென்று ஒரு பொறுப்பு இருக்கின்றது. அந்தப் பொறுப்பினால் என்னைப் பெற்றெடுத்த என் தாய்க்குப் பெருமை சேர்ப்பேனே ஒழிய, எந்தச் சூழ்நிலையிலும், ‘இப்படிப்பட்ட ஒருபிள்ளையைப் பெற்றெடுத்திருக்கிறாளே இவள்?’ என்று என்னுடைய தாய்க்கு அவப்பெயரைக் கொண்டுவரமாட்டேன்.’ இதனை நான் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றேன்.”

ஜோ இவ்வாறு சொன்னதைக் கேட்டு அங்கிருந்த படைவீரர்கள் அனைவரும், ‘கெட்ட நகைச்சுவைகளைச் சொல்லுங்கள்’ என்று சொன்ன படைவீரர் உட்பட, தங்களுடைய கைகளைத் தட்டி அவரை வாழ்த்தினார்கள். இதைவிடவும் இன்னொரு முக்கியமானதொரு செயலைச் செய்தார்கள். அது என்னவெனில், அவர்கள் அனைவரும் சேர்ந்து ஜோவின் தாயார்க்கு ஒரு கடிதம் எழுதினார்கள். அந்தக் கடிதத்தில், “அம்மா! ஜோவைப் போன்று ஒரு பொறுப்புள்ள பிள்ளையை – மகனைப் – பெற்றெடுத்ததற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம்” என்று அனுப்பிவைத்தார்கள். அந்தக் கடிதத்தைப் படித்துப் பார்த்து ஜோவின் அம்மா மிகவும் மகிழ்ச்சியடைத்தார்.

நம் ஒவ்வொருவர்க்கும் கடவுளால் ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கின்றது, இதில் நாம் பொறுப்புள்ளவர்களாகவும் நம்பிக்கைக்குரியவர்களாகவும் இருக்கவேண்டும் என்ற செய்தியை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகமும் இதே செய்தியைத்தான் நமக்கு கூறுகின்றது. அது குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

மினாக்கள் உவமையின் பின்னணி

இயேசு எருசலேமை நெருங்கி வந்துகொண்டிருக்கின்றார். அப்பொழுதுதான் அவர் இந்த மினாக்கள் உவமையைச் சொல்கின்றார். மினாக்கள் உவமையும் தாலந்து உவமையும் (மத் 25: 14-30 ஒன்றுபோல் இருந்தாலும், அவற்றில் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. தாலந்து உவமையில் கொடுக்கப்படும் தாலந்துகள் வேறுபடுகின்றன; வெகுமதியோ ஒன்றுபோல் இருக்கின்றது. ஆனால் மீனாக்கள் உவமையில் கொடுக்கப்படும் மினாக்கள் ஒன்றுபோல் இருக்கின்றன; வெகுமதிதான் பத்துநகர்கள், ஐந்து நகர்கள் என்று வித்தியாசமாக இருக்கின்றன. இப்படி ஒருசில வித்தியாசங்கள் அவைகளில் உண்டு.

இயேசு சொல்லும் இந்த மினாக்கள் உவமைக்குப் பின்னால் அரசியல் காரணம் ஒன்று இருக்கின்றது. அது என்னவெனில், பெரிய ஏரோது தன்னுடைய சாவு நெருங்கி வந்ததை உணர்ந்து, யூதேயாவிலிருந்து உரோமைக்குச் சென்று, தன் மகன்களில் ஒருவனான அர்க்கெலாவைத் தனக்குப் பின் அரசனாக நியமிக்குமாறு அகுஸ்து சீசரைக் கேட்டுக்கொண்டான். ஆனால் யூதர்கள் ஐம்பது பேரைச் சீசரிடம் அனுப்பி, அவனைத் தங்களுக்கு அரசனாக நியமிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். இந்த வரலாறு நிகழ்வை இயேசு உவமையில் பயன்படுத்துகின்றார். இப்பொழுது உவமையின் வழியாக இயேசு சொல்லும் செய்தியைச் சிந்தித்துப் பார்ப்போம்.

பொறுப்போடு செயல்வோர்க்கு ஆசி; பொறுப்பின்றி செயல்படுவோர்க்குத் தண்டனை

இயேசு சொல்லும் மினாக்கள் உவமையில் இருவிதமான மனிதர்கள் வருகின்றார்கள். தங்களிடம் கொடுக்கப்பட்ட மினாக்களைப் பொறுப்போடு பயன்படுத்தியவர்கள் ஒருவிதமானவர்கள். கொடுக்கப்பட்ட மினாக்களைப் பொறுப்பின்றிப் பயன்படுத்தியவர்கள் இன்னொரு விதமானவர்கள். கொடுக்கப்பட்ட மினாக்களைப் பொறுப்போடு பயன்படுத்தியவர்களை அரசர் பத்து மற்றும் ஐந்து நகர்கட்கு அதிகாரியாக நியமிக்கின்றார். கொடுக்கப்பட்ட மினாவை பொறுப்பின்றிப் பயன்படுத்தியவனை, அவன் பயன்படுத்திய சொற்கட்கு ஏற்றவாறு தண்டிக்கின்றார்.

இயேசு சொல்லும் உவமையில் வரும் இன்னொரு வகையினர், அவரை அரசராக ஏற்க விரும்பாதோர் (லூக் 19:14). இவர்கள் யாரென்றால் இயேசுவை வெறுத்தோர், அவரை உதறித்தள்ளியோர் (யோவா 1:11, 15:25) இவர்களும் தண்டிக்கப்படுவார்கள் என்கின்றார் இயேசு.

ஆகையால், நம் ஒவ்வொருவர்க்கும் ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கின்றது… இந்தப் பொறுப்புக்கு நாம் நம்பிக்கைக்குரியவர்களாய் இருந்தால், கடவுளின் ஆசியைப் பெறுவோம் என்ற உண்மையை உணர்ந்து, பொறுப்போடு வாழக் கற்றுக்கொள்வோம்.

சிந்தனை

பொறுப்பாளர்கள் நம்பிக்கைக்குரியவர்களாய்க் காணப்படவேண்டும்’ (1 கொரி 4:2) என்பார் புனித பவுல். ஆகையால், நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவர்களாய் இருந்து, இயேசுவுக்குச் சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.