மார்ச் 21 : நற்செய்தி வாசகம்

உங்கள் தந்தை ஆபிரகாம், நான் வரும் காலத்தைக் காண முடியும் என்பதை முன்னிட்டுப் பேருவகை கொண்டார்

உங்கள் தந்தை ஆபிரகாம், நான் வரும் காலத்தைக் காண முடியும் என்பதை முன்னிட்டுப் பேருவகை கொண்டார்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 51-59

அக்காலத்தில்

இயேசு யூதர்களிடம், “என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

யூதர்கள் அவரிடம், “நீ பேய் பிடித்தவன்தான் என்பது இப்போது தெரிந்துவிட்டது. ஆபிரகாம் இறந்தார்; இறைவாக்கினர்களும் இறந்தார்கள். ஆனால் என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார் என்கிறாயே! எங்கள் தந்தை ஆபிரகாமைவிட நீ பெரியவனோ? ஆபிரகாம் இறந்தார்; இறைவாக்கினரும் இறந்தனர். நீ யாரென்று நினைத்துக்கொண்டிருக்கிறாய்?” என்றார்கள்.

இயேசு மறுமொழியாக, “நானே என்னைப் பெருமைப்படுத்தினால், அது எனக்குப் பெருமை இல்லை. என்னைப் பெருமைப்படுத்துபவர் என் தந்தையே. அவரையே நீங்கள் உங்கள் தந்தை என்றும் சொல்கிறீர்கள். ஆனால் அவரை உங்களுக்குத் தெரியாது; எனக்குத் தெரியும். எனக்கு அவரைத் தெரியாது என நான் சொன்னால் உங்களைப் போல நானும் பொய்யனாவேன். அவரை எனக்குத் தெரியும். அவருடைய வார்த்தையையும் நான் கடைப்பிடிக்கிறேன். உங்கள் தந்தை ஆபிரகாம் நான் வரும் காலத்தைக் காண முடியும் என்பதை முன்னிட்டுப் பேருவகை கொண்டார்; அதனைக் கண்டபோது மகிழ்ச்சியும் கொண்டார்” என்றார்.

யூதர்கள் இயேசுவை நோக்கி, “உனக்கு இன்னும் ஐம்பது வயதுகூட ஆகவில்லை; நீ ஆபிரகாமைக் கண்டிருக்கிறாயா?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களிடம், “ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். இதைக் கேட்ட அவர்கள் அவர்மேல் எறியக் கற்களை எடுத்தார்கள். ஆனால் இயேசு மறைவாக நழுவிக் கோவிலிலிருந்து வெளியேறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

——————————————————————————

கடவுளின் கட்டளைகளும் அவரது ஆசிகளும்

தவக் காலத்தின் ஐந்தாம் வாரம் வியாழக்கிழமை

I தொடக்க நூல் 17: 3-9

திருப்பாடல் 105: 4-5, 6-7, 8-9 (8a)

II யோவான் 8: 51-59

கடவுளின் கட்டளைகளும் அவரது ஆசிகளும்

நிலைவாழ்வு அளிக்கும் கடவுளின் வார்த்தைகள்

கடவுளின் வார்த்தையைக் கேட்டு, அதைக் கடைப்பிடித்து வாழ்வதன் முக்கியத்துவம் திருவிவிலியத்தில் பல இடங்களில் உணர்த்தப்படுகின்றது (யாக் 1:22). இயேசுவும் தன்னுடைய போதனையின் மூலமாக இதைத் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே வருகின்றார். இன்றைய நற்செய்தியில் அவர் யூதர்களிடம், “என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள்” என்கின்றார். இயேசு சொன்னதை மேம்போக்காகப் புரிந்துகொண்டு அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றார்கள் யூதர்கள்.

இயேசுவின் வார்த்தைகள் நிலைவாழ்வளிக்கக் கூடியவை (யோவா 6: 63, 68) அப்படியிருந்தும் இயேசு சொன்னதை நம்பாமல், அவரோடு யூதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது அவர்களின் அறியாமையைக் காட்டுகின்றது.

இன்றைய முதல் வாசகம் ஆண்டவரோடு செய்துகொண்ட உடன்படிக்கைக்கேற்ப அவரது கட்டளையை ஒருவர் கடைப்பிடித்தால் அவரது ஆசிகள் கிடைக்கும் என்கின்றது. ஆண்டவருடைய கட்டளைகளை ஆபிராம் கடைப்பிடித்து வந்தார். அதனால் அவருக்கு ஆண்டவர் ஆபிரகாம் என்ற புதுப் பெயரை அளித்து, அவரை எண்ணற்ற நாடுகளுக்குத் தந்தையாக்குகின்றார். அத்தோடு ஆண்டவர் ஆபிரகாமிடம் தன்னுடைய உடன்படிக்கையின் படி நடந்தால், வளமிக்க நாட்டினை வழங்குவதாக வாக்களிக்கின்றார்.

கடவுள் ஆபிரகாமோடு செய்து கொண்ட உடன்படிக்கைக்கு உண்மையாய் இருந்தார். அதனை இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 105 நமக்கு உணர்த்துகின்றது. கடவுள் தாம் செய்துகொண்ட உடன்படிக்கைக்கு உண்மையாய் இருப்பது போல நாமும் உண்மையாய் இருக்கவேண்டும். அப்போது நாம் அவர் அளிக்கும் நிலைவாழ்வையும் எல்லா ஆசிகளையும் நிறைவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

மகளின் அன்பு

ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள் ஸ்னோசி. ஒருநாள் அவள் வெளியே சென்றுவிட்டு விட்டிற்குத் திரும்பி வந்தபோது மிகுந்த மகிழ்ச்சியோடு, “அம்மா! நான் உங்களை மிகவும் அன்பு செய்கின்றேன்” என்று சொல்லிக் கொண்டே வந்தாள்.

அந்த நேரம், அவளுடைய அம்மா, சமயலறையில் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தார். “கண்ணே! நீ என்னை மிகவும் அன்பு செய்கின்றாயா? அப்படியானால் எனக்காக ஓர் உதவி செய்வாயா?” என்றார் அவர். “சொல்லுங்கள் அம்மா! நீங்கள் என்ன உதவி கேட்டாலும் நான் செய்வேன்” என்று ஸ்னோசி சொன்னதும், அவளுடைய அம்மா, “பகல் முழுவதும் வேலை செய்து மிகவும் களைப்பாக இருக்கின்றது. அதனால் எனக்காகப் பாத்திரம் கழுவுவாயா?” என்றார்.

Comments are closed.