இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிமை நிறை மறையுண்மைகள்.

1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,

இன்றைய ஞாயிறு திருப்பலி முதல் வாசகம் எடுக்கப்பட்ட குறிப்பேடு இரண்டில், “ஆண்டவர் தம் மக்களின்மீதும், தம் உறைவிடத்தின்மீதும் இரக்கம் கொண்டு, தம் தூதர்களை மீண்டும் மீண்டும் அவர்களிடம் அனுப்பினார். ஆனால் அவர்கள் கடவுளின் தூதர்களை ஏளனம் செய்து, அவர்தம் வார்த்தைகளைப் புறக்கணித்து, அவர்தம் இறைவாக்கினர்களை இழித்துரைத்தனர்.” என வாசிக்கின்றோம்.

நாம் தொடர்ந்து பாவம் செய்யும் போது நாம் திருந்துவதற்கு நமக்கு பலமுறை ஆண்டவர் வாய்ப்புகளை வழங்குகின்றார். யார் மூலமாகவோ அல்லது நடக்கும் நிகழ்வுகளின் மூலமோ நாம் செய்வது தவறு என்று நமக்கு அறிவுறுத்துகின்றார். நம்மைப்பற்றிய நமது தந்தையின் திருஉள்ளத்தை அறிய வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி இரண்டாம் வாசகத்தில்,

“நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கிறோம். இவ்வாறு நற்செயல்கள் புரிந்து வாழும்படி கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார்.” என புனித பவுலடியார் கூறுகிறார்.

இத்தவக்காலத்தில் கடவுள் விரும்பும் நற்செயல்கள் செய்வதை நாம் இன்னும் அதிகரிப்பதற்கு இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,

“உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்.”

நாம் வாழ்க்கையில் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் கடவுளின் விருப்பம் அறிந்து எடுத்தல் வேண்டும். ஒளியில் கடவுளோடு இணைந்து இருந்தாலே கடவுளின் விருப்பத்தை நாம் அறிய முடியும். இருளில் இருந்து விலகி ஒளியில் கடவுளோடு இணைந்து இருக்க வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,

இந்த வாரம் முழுவதும் நமக்குத் தூய ஆவியானவரின் வழி நடத்துதல் நன்கு கிடைக்கப் பெறவேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,

இறைவனுக்காக தங்கள் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்து இறைப்பணியில் தங்களை முற்றிலும் ஈடுபடுத்திக் கொண்ட அனைத்து குருக்கள், கன்னியர்கள் மற்றும் அருட்சகோதரர்களின் ஆன்ம, சரீர நலன்களுக்காக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.