இறை மக்கள் குடும்பமாக தங்கள் இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள் 01.03.2024

ஒளி நிறை மறையுண்மைகள்.

1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி முதல் வாசகம் எடுக்கப்பட்ட எரேமியா நூலில், “மனிதரில் நம்பிக்கை வைப்போர் சபிக்கப்படுவர்; ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்.” என ஆண்டவர் கூறுகிறார்.

“மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்.” (தி.பா. 118: 😎 என திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார்.

எனவே, நாம் செல்வத்தின் மீதோ, மனிதர்கள் மீதோ அல்ல, மாறாக ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்து நற்பேறு பெற்றவர்களாக வாழ இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,

“ஆண்டவராகிய நானே இதயச் சிந்தனைகளை ஆய்பவர்; உள்ளுணர்வுகளைச் சோதித்து அறிபவர். ஒவ்வொருவரின் வழிகளுக்கும் செயல்களின் விளைவுக்கும் ஏற்றவாறு நடத்துபவர்.” என முதல் வாசகம் எடுக்கப்பட்ட எரேமியா நூலில் ஆண்டவர் கூறுகிறார்.

ஒருவர் வெளிவேட நடிப்பில் மனிதர்களை ஏமாற்றலாம். ஆனால் ஒரு போதும் ஆண்டவரை அல்ல என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து

இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில், இயேசு ‘செல்வரும் இலாசரும்’ என்ற உவமையைச் சொல்கின்றார்.

“காசுக்கும் கடவுளுக்கும் ஒரேநேரத்தில் பணிவிடை செய்ய முடியாது.” (மத். 6: 24) என்ற இயேசுவின் இறை வார்த்தையை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,

இந்தத் தவக்காலத்தில் பசியுற்றோரைக் கண்டுணர்ந்து அவர்களுக்கு உணவளித்தல், எளியோருக்கு ஆதரவு அளித்தல் போன்ற பிறரன்பு செயல்களில் நாம் ஆர்வமுடன் ஈடுபட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,

குழந்தை இயேசுவுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட வியாழக் கிழமையான இன்று, நோயுற்ற குழந்தைகள் அனைவரையும் நம் குழந்தை இயேசு தொட்டுக் குணமாக்கிட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.!

Comments are closed.