இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள் 18.01.2024

மகிமை நிறை மறையுண்மைகள்.

1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில் ““என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த ஆண்டவர் இந்தப் பெலிஸ்தியனின் கைக்கும் தப்புவிப்பார்” என தாவீது சவுலிடம் கூறியதைக் கண்டோம்.

தாவீது ஆண்டவர் மேல் கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கையினால் தாவீதிற்கு ஆண்டவர் வெற்றியை அளிக்கிறார்.

நாம் நமது வாழ்க்கைப் போராட்டங்களில் வெற்றிபெற தாவீதைப் போல ஆண்டவர் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க வேண்டும் என்ற உண்மையை உணர வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 144:2-ல்,

“என் கற்பாறையும் கோட்டையும் அவரே! எனக்குப் பாதுகாப்பாளரும் மீட்பரும் அவரே! என் கேடயமும் புகலிடமும் அவரே! ” என கூறப்பட்டுள்ளது.

உலகிலுள்ள மக்கள் அனைவரின் அனைத்து துன்பங்களுக்கும் கேடயமாக இருந்து காப்பவர் நம் தேவனே. அவர் ஒருவரே நமக்குப் புகழிடம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,

ஆண்டவர் படைத்த எல்லா நாளும் நல்ல நாள் என்பதால், நாம் எல்லா நாளும் பிறருக்கு நன்மை செய்யலாம் என்பதை இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகம் நமக்கு உணர்த்துகிறது.

நல்ல நேரம், நல்ல நாள், கிழமை பார்க்கும் தீய பழக்கத்தை கிறித்துவர்களாகிய நாம் அறவே விட்டுவிட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,

‘துறவிகளின் தந்தை’ என அழைக்கப்பட்ட இன்றைய புனிதரான புனித வனத்து அந்தோணியாரை நமது திருச்சபைக்குத் தந்த நம் இறைவனுக்கு நன்றியாக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,

புனித சூசையப்பருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட புதன் கிழமையான இன்று திருக்குடும்பத்தில் அன்று இருந்தது போல் அன்பு, அமைதி, சமாதானம், விட்டுக் கொடுத்தல், தாழ்ச்சி ஆகியவை நம் குடும்பங்களிலும் இருக்க வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.