சனவரி 18 : நற்செய்தி வாசகம்

“இறைமகன் நீரே” என்று தீய ஆவிகள் கத்தின. இயேசு தம்மை வெளிப்படுத்த வேண்டாமெனச் சொன்னார்.

இறைமகன் நீரே” என்று தீய ஆவிகள் கத்தின. இயேசு தம்மை வெளிப்படுத்த வேண்டாமெனச் சொன்னார்.

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 7-12

அக்காலத்தில்

இயேசு தொழுகைக்கூடத்திலிருந்து புறப்பட்டுத் தம் சீடருடன் கடலோரம் சென்றார். கலிலேயாவிலிருந்து பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். மேலும் யூதேயா, எருசலேம், இதுமேயா, யோர்தான் அக்கரைப்பகுதி, தீர், சீதோன் ஆகிய இடங்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் அவர் செய்தவற்றையெல்லாம் கேள்வியுற்று அவரிடம் வந்தனர். மக்கள் கூட்டம் தம்மை நெருக்கிவிடாதவாறு தமக்காகப் படகு ஒன்றை முன்னேற்பாடாக வைத்திருக்குமாறு அவர் சீடருக்குச் சொன்னார்.

ஏனெனில், பலரை அவர் குணமாக்கியதால், நோயுற்றோர் அனைவரும் அவரைத் தொட வேண்டுமென்று வந்து அவர்மீது விழுந்து கொண்டிருந் தனர். தீய ஆவிகளும் அவரைக் கண்டபோதே அவர்முன் விழுந்து, “இறைமகன் நீரே” என்று கத்தின. அவரோ, தம்மை வெளிப்படுத்த வேண்டாமென அவற்றிடம் மிகக் கண்டிப்பாய்ச் சொன்னார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

——————————————————————————

பொறாமையும் அங்கீகாரமும்

பொதுக்காலத்தின் இரண்டாம் வாரம் வியாழக்கிழமை

I 1சாமுவேல் 18:6-9; 19:1-7

II மாற்கு 3:7-12

பொறாமையும் அங்கீகாரமும்

தன் மகன்மீதே பொறாமைப்பட்ட தந்தை:

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமராக இருந்தவர் வின்ஸ்டன் சர்ச்சில். அவர் மக்கள் நடுவில் அடைந்த பெயரும் புகழும் அடைந்தது அவரது தந்தைக்குப் பிடிக்கவே இல்லை.

இது பற்றி வின்ஸ்டன் சர்ச்சில் தன்னுடைய, ‘The Last Lion’ என்ற நூலில் எழுதும் போது, “நான் செங்கல்சூளையில் வேலை பார்ப்பவனாகவோ, அஞ்சல்காரனாகவோ அல்லது ஒரு சிறிய கடையில் எடுபிடியாகவோ வேலை பார்த்திருந்தால்கூட என் தந்தைக்குப் பிடித்திருக்கும். மாறாக, நான் இங்கிலாந்தின் பிரதமராக இருந்து, மக்கள் நடுவில் பெயரையும் புகழையும் பெற்றது என் தந்தைப் பிடிக்கவே இல்லை. அவர் ஏன் என்மேல் இவ்வளவு பொறாமைப்படுகின்றார் என்று எனக்குத் தெரியவே இல்லை” என்று எழுதுகின்றார்.

ஆம், வின்ஸ்டன் சர்ச்சிலின் தந்தையைப் போன்றுதான் இன்று பலருக்கும் தங்களோடு இருப்பவருடைய வளர்ச்சி பிடிக்காமல், பொறாமைபடுகிறார்கள். முதல் வாசகத்தில் தாவீதின் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படும் சவுலைக் குறித்து வாசிக்கின்றோம். பொறாமையினால் எவ்வளவு பெரிய அழிவு ஏற்படும் என்பது குறித்தும் அதற்கு மாற்றாக நாம் என்ன செய்வது என்பது குறித்தும் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

இஸ்ரயேல் மக்களை அச்சுறுத்திய கோலியாத்தைத் தாவீது கொன்றபிறகு எல்லாரும் வீடு திரும்புகிறார்கள். அப்பொழுது நாட்டில் இருந்த பெண்கள், “சவுல் ஆயிரம் பேரைக் கொன்றார்; தாவீதோ பதினாயிரம் பேரைக் கொன்றார்” என்று பாடுகின்றார்கள். இது சவுலின் உள்ளத்தில் பொறாமையை வளர்கின்றது. சவுல் உண்மையிலேயே நல்லவராய் இருந்தால், தாவீது தன்னைவிடச் சிறியவர்; திறமையானவர். அதனால் அவருக்கு இந்த வாழ்த்து பொருத்தமானது என்று பெருந்தன்மையோடு நடந்திருக்கலாம். ஆனால், அவர் அவ்வாறு நடந்துகொள்ளாமல், தாவீதைக் கொல்லத் துணிகின்றார்.

இதற்கு முற்றிலும் மாறாக, சவுலின் மகனான யோனாத்தான் தன் தந்தைக்குப் பின் தான்தான் நாட்டை ஆளவேண்டும் என்றிருந்தாலும், தாவீது அதற்கு முற்றிலும் பொருத்தமானவர் என்று அவரைத் தன் தந்தையிடம் பெருமையாகப் பேசி, அவரது உயிரைக் காப்பாற்றுகின்றார்.

நற்செய்தியில் இயேசு அடைந்த புகழைக் கண்டு பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் அவரைக் கொல்ல வழி தேடியபோது, சாதாரண மக்கள் பல இடங்களிலிருந்தும் அவரைத் தேடி வந்து, அவரிடமிருந்து நலம் பெறுகின்றார்கள். இதிலிருந்து நாம் ஒன்றைத் தெரிந்துகொள்ளலாம். அது என்னவெனில், எப்போதெல்லாம் நமக்குள் பொறமை என்ற விதை முளைத்து வேரிடத் தொடங்குகின்றதோ, அப்பொழுதெல்லாம் நாம் அழிவினைத்ச் சந்திக்கின்றோம் என்பதுதான். அதே நேரத்தில் ஒருவரை நாம் அங்கீகரிக்கின்றபோது நலம் பெறுகின்றோம். சாதாரண மக்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டபோது அவரிடமிருந்து ஆசிபெற்றார்கள். எனவே, நாம் பொறாமையைத் தவிர்த்து, பாராட்டும் நல்ல மனத்துடன் வாழ்வோம்.

Comments are closed.