இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.

1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில், “அல்பேயுவின் மகன் லேவி சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.” என வாசித்தோம்.

“என்னைப் பின்பற்றி வா” என நம் ஒவ்வொருக்கும் இயேசு விடுக்கும் அழைப்பினை நாம் உணர்ந்து கொள்ள வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,

நான்காம் நூற்றாண்டில் வேறு சபையில் ‘பாகன்’ இனத்தில் பிறந்து, பின்னர் திருமுழுக்கு பெற்றவரும், ஆயருமான இன்றைய புனிதர் புனித ஹிலாரி ஒரு சிறந்த மறை வல்லுநராவார்.

புனித ஹிலாரியை நமது ஆதி திருச்சபைக்கு ஆயராக அளித்த நம் ஆண்டவருக்கு நன்றியாக இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,

பிறந்த இப்புதிய வருடம் நமக்கு எல்லா விதத்திலும் ஆசீர்வாதமாய் இருக்க வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,

நாளை ஞாயிறு திருப்பலியில் முழுமையாகப் பங்கேற்று ஆண்டவரின் திருவுடலை வாங்க தகுதிபெற நம்மையே நாம், முன் தயாரித்துக் கொள்ள வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. காணமற் போன குழந்தை இயேசுவை ஆலயத்தில் கண்டு பிடித்ததைத் தியானித்து,

இந்த வாரம் முழுவதும் நம்மைக் காத்து வழி நடத்திய நம் தேவனுக்கு நன்றியாக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.