சனவரி 14 : நற்செய்தி வாசகம்
இயேசு தங்கியிருந்த இடத்தைச் சீடர் பார்த்தார்கள்; அவரோடு தங்கினார்கள்.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 35-42
யோவான் தம் சீடர் இருவருடன் நின்றுகொண்டிருந்தார். இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, “இதோ! கடவுளின் செம்மறி” என்றார். அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தனர். இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின்தொடர்வதைக் கண்டு, “என்ன தேடுகிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள், “ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், “வந்து பாருங்கள்” என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள்.
யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர். அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, “மெசியாவைக் கண்டோம்” என்றார். ‘மெசியா’ என்றால் அருள்பொழிவு பெற்றவர் என்பது பொருள். பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார்.
இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, “நீ யோவானின் மகன் சீமோன். இனி ‘கேபா’ எனப்படுவாய்” என்றார். ‘கேபா’ என்றால் ‘பாறை’ என்பது பொருள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————————————-
“கடவுளின் ஆட்டுக்குட்டி”
பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு (ஜனவரி 14)
I 1 சாமுவேல் 3: 3b-10, 19
II 1 கொரிந்தியர் 6: 13c-15a, 17-20
III யோவான் 1: 35-42
“கடவுளின் ஆட்டுக்குட்டி”
நிகழ்வு
யூதர்கள் நடுவில் சொல்லப்படுகின்ற கதை இது. ஆண்டவராகிய கடவுள் எல்லாவற்றையும் படைத்துவிட்டு, அவற்றை உற்று நோக்கியபொழுது, யாவும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க, செம்மறியாடு மட்டும் மிகவும் வருத்தத்தோடு இருந்தது. அதைப் பார்த்துவிட்டுக் கடவுள், “நான் படைத்த யாவும் மகிழ்ச்சியாக இருக்க, நீ ஏன் கவலையோடு இருக்கின்றாய்?” என்று கேட்க, செம்மறியாடு கடவுளிடம், “நீர் படைத்த விலங்குகளிலியே நான் மிகவும் வலுக்குறைந்தவனாக இருக்கின்றேன். மற்ற விலங்குகளுக்கு பெரிய கொம்புகளும், கூரிய நகங்களும், நச்சுத்தன்மை நிறைந்த பற்களும் இருக்கின்றன. எனக்குத்தான் அப்படி எதுவுமே இல்லை. அதுதான் என்னுடைய வருத்தத்திற்குக் காரணம்” என்று சொன்னது.
அதற்குக் கடவுள், “அப்படியானால், நான் உனக்கு மற்ற விலங்குகளைப் போல் பெரிய கொம்புகளையும், கூரிய நகங்களையும், நச்சுத்தன்மை நிறைந்த பற்களையும் தரட்டுமா? அப்படித் தந்தால், யாரும் உன் அருகில் வந்து, உனக்குத் தீங்கிழைக்க மாட்டார்கள்” என்றார். “கடவுளே! எனக்கு அப்படி எதுவும் வேண்டாம். நான் அமைதியைப் பெரிதும் விரும்புகின்றனவன்; வன்முறையை விரும்பாதவன். அதனால் நீர் எனக்குத் தீமை செய்கின்றவர்களை மன்னிப்பதற்கான ஆற்றலையும், துன்பங்களைப் பொறுமையோடு தாங்கிக்கொள்வதற்கான ஆற்றலையும் தாரும். அது போதும்” என்றது செம்மறி ஆடு. கடவுளும் அது கேட்டுக்கொண்டதற்கேற்ப, அதற்குத் தீமை செய்கின்றவர்களை மன்னிப்பதற்கான ஆற்றலையும், துன்பங்களைப் பொறுமையோடு தாங்கிக்கொள்ளும் ஆற்றலையும் தந்தார்.
இங்கு இடம்பெறும் செம்மறி ஆட்டினைப் போன்று, உயிருள்ள கடவுளின் செம்மறியான இயேசு தீமை செய்தவர்களை மன்னிக்கின்றவராகவும், துன்பங்களைப் பொறுமையோடு தாங்கிக் கொள்ளக்கூடியவராகவும்; ஏன், மானிட மீட்புக்காகத் தம்மையே பலியாகத் தருபவராக இருக்கிறார். பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவான் இயேசுவைப் பார்த்து, “இதோ! கடவுளின் செம்மறி” என்கின்றார். திருமுழுக்கு யோவான் சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் என்ன, இன்றைய இறைவார்த்தை நமக்குச் சொல்லும் செய்தி என்ன என்பன குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
எருசலேம் திருக்கோயிலில், ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் பாவம் போக்கும் பலியாக (லேவி 14: 12, 21, 24; எண் 6: 12) ஓர் ஆடானது ஒப்புக் கொடுக்கப்படும் (விப 39: 38-40). இறைவாக்கினர் எசாயாவோ, துன்புறும் ஊழியரைக் குறித்துக் கூறும்பொழுது, அவர் அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டி போலும், உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் தம் வாயைத் திறவாதிருந்தார் என்று கூறுகின்றார் (எசா 53: 7)
ஆனால், இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவான் தன் சீடர்கள் யோவான், அந்திரேயா ஆகியோரோடு இருக்கின்றபொழுது, அப்பக்கமாய் வருகின்ற இயேசுவைப் பார்த்து, “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி” என்று கூறுகின்றார். திருமுழுக்கு யோவான் தன் சீடர்களிடம் சொன்ன இந்த வார்த்தைகள், அவர்களுக்குப் பாஸ்கா ஆட்டினை (விப 12) நினைவுபடுத்தியிருக்கும் என்பதில் எந்தவோர் ஐயமுமில்லை. ஆம், இயேசு கிறிஸ்து உலகின் பாவங்களைப் போக்கும் கடவுளின் ஆட்டுக்குட்டி. அதையே திருமுழுக்கு யோவானின் வார்த்தைகள் உறுதி செய்கின்றன.
நாம் நமக்குரியவர்கள் அல்லர்; கடவுளுக்குரியவர்கள்.
கடவுளின் ஆட்டுக்குட்டியாக இவ்வுலகிற்கு வந்த இயேசு, ஆடுகளாகிய நாம் வாழ்வைப் பெறும் பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டுத் தன்னையே பலியாகத் தந்தார் (யோவா 10: 10). இதன்மூலம் இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் கூறுவது போல், கடவுள் நம்மை தன் திருமகனின் இரத்தத்தால் விலை கொடுத்து மீட்டுக்கொண்டார். கடவுள் நம்மை விலை கொடுத்து மீட்டுக்கொண்டார் எனில், நாம் நமக்கானவர்கள் அல்லர்; கடவுளுக்கானவர்கள்.
நாம் கடவுளுக்கானவர்கள் எனில், கடவுளுக்கு நம்மை அர்ப்பணித்து வாழ்வதுதான் சாலச்சிறந்த ஒரு செயலாகும். சாமுவேல் முதல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், சாமுவேலின் அழைப்பைக் குறித்து வாசிக்கின்றோம். கடவுளின் பேழை வைக்கப்பட்டிருந்த ஆண்டவரின் இல்லத்தில் இருந்த சிறுவன் சாமுவேலை ஆண்டவர் மூன்று முறை அவனுடைய பெயரைச் சொல்லி அழைக்கின்றார். மூன்றுமுறையும் அவன் தன்னை அழைப்பது குரு ஏலிதான் என நினைத்துக்கொண்டு அவரிடம் செல்கின்றான். அப்பொழுதுதான் குரு ஏலி, சிறுவன் சாமுவேலை அழைப்பது கடவுள்தான் என உணர்ந்துகொண்டு, உன்னை அவர் மீண்டுமாக அழைத்தால், “ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன்” என்று சொல்லும் என்கின்றார். பின்னர் ஆண்டவர் சிறுவன் சாமுவேலை அழைத்தபொழுது, அவனும் குரு ஏலி தன்னிடம் சொன்னது போன்றே சொல்லி, ஆண்டவருடைய பணிக்குத் தன்னை முற்றிலும் அர்ப்பணிக்கின்றார்.
ஆம், நாம் ஒவ்வொருவரும் கடவுளால் விலைகொடுத்து மீட்கப்பட்டவர்கள் என்பதால், சாமுவேலைப் போன்று கடவுளுடைய பணியைச் செய்ய நம்மை முழுமையாய் அர்ப்பணிக்கவேண்டும்.
பெற்ற அனுபவத்தைப் பிறரோடு பகர்வோம்
கடவுளுடைய பணியைச் செய்ய கடவுளுக்கு நம்மை முற்றிலும் அர்ப்பணித்து விட்டு கடவுளுக்குரியவர்களாய் இருக்கும் ஒவ்வொருவரும், தான் பெற்ற இறை அனுபவத்தைத் தனக்குள் வைத்துக் கொள்ளாமல், அதைப் பிறரோடும் பகிரவேண்டும். இதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாய் விளங்குபவர் அந்திரேயா. இந்த அந்திரேயா இயேசுவோடு தங்கி இறையனுபவம் பெற்ற பின், தன் சகோதரர் சீமோன் பேதுருவிடம் சென்று, “மெசியாவைக் கண்டோம்” என்று சான்றுபகர்கின்றார். இதனால் பேதுரு இயேசுவிடம் வருகின்றார்.
Comments are closed.