இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள் 22.12.2023

ஒளி நிறை மறையுண்மைகள்.

1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி முதல் வாசகம் எடுக்கப்பட்ட, சாலமோன் மன்னர் எழுதியதாக நம்பப்படுகின்ற ‘இனிமை மிகு பாடல்’ நூலானது, ஒரு தலைவன், தலைவிக்கு இடையே இருக்கின்ற ஆழமான அன்பினையும், சிறந்த நம்பிக்கையையும் எடுத்தியம்புகிறது.

அவ்வாறு ஆண்டவராகிய இயேசு, நம்மீது கொண்ட பேரன்பினால் தன்னையே தரும் அளவுக்குத் துணிந்து, நமக்கு நம்பிக்கைக்குரியவராய் இருக்கின்றார். அது போல நாம் ஒவ்வொருவரும் அவர்மீது நமது மேலான அன்பினைக் காட்டி, அவருக்கு நம்பிக்கைக்குரியவர்களாய் இருக்கவேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,

இன்றைய நற்செய்தியில் மரியாவும், எலிசபெத்தும் ஒருவரையொருவர் மனமுவந்து வாழ்த்துவதைக் காண்கிறோம். அவ்வாறு

நாம் ஒருவர் மற்றவரை, அவரிடம் உள்ள நல்ல பண்புகள் இனங்கண்டு கொண்டு வாழ்த்த வேண்டும். அப்படிச் செய்வதால் நம்முடைய உள்ளத்திலும், நாம் இருக்கும் இடத்திலும் மகிழ்ச்சி பொங்கி வழியும் என்பது உறுதி. நாம் ஒருவர் மற்றவரை மனமுவந்து வாழ்த்த இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,

ஆண்டவரின் மீட்புத் திட்டத்திற்கு தன்னையே கையளித்த அன்னை மரியாளிடமிருந்து தாழ்ச்சியையும், பிறரன்பு சேவையையும் நாம் கற்றுக் கொள்ள வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,

நமது உள்ளத்திலும், இல்லத்திலும் பிறக்க இருக்கும் இயேசு பாலனை வரவேற்க இந்த திருவருகைக் காலத்தில் நம்மையே நாம் முழுமையாகத் தயார்படுத்திக் கொள்ள இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,

குழந்தை இயேசுவுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட வியாழக் கிழமையான இன்று, நோயுற்ற குழந்தைகள் அனைவரையும் நம் குழந்தை இயேசு தொட்டு குணமாக்கிட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.