டிசம்பர் 22 : நற்செய்தி வாசகம்

வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்

வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 46-56

மரியா கூறியது: “ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்.”

மரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

————————————————————————–

ஆண்டவர் தந்ததை ஆண்டவருக்கே அர்ப்பணித்தவர்

திருவருகைக் காலம் நான்காம் வாரம் புதன்கிழமை

I 1 சாமுவேல் 1: 24-28

II லூக்கா 1: 46-56

ஆண்டவர் தந்ததை ஆண்டவருக்கே அர்ப்பணித்தவர்

இறைப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்த கிரிக்கெட் வீரர்:

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காகச் சில காலம் விளையாண்டவர் சி.எஸ்.ஸ்டட் (C.S.Studd). எப்போது இவர் ஆண்டவர் இயேசுவால் தொடப்ப்பட்டாரோ, அப்போதே இவர் எல்லாவற்றையும் துறந்து, ஆண்டவருக்குத் தன்னை முற்றிலும் அர்ப்பணித்து, சீனாவிற்கு நற்செய்தி அறிவிக்கச் சென்றார்.

இவர் அடிக்கடி சொல்லக்கூடிய வார்த்தைகள் இவை: “இயேசு கிறிஸ்து ஆண்டவர் எனில், அவர் எனக்காகத் தன்னையே தந்தார் எனில், என்னையே நான் அவருக்காக அர்ப்பணிப்பதை விடவும் சிறந்ததொரு செயல் வேறெதுமில்லை.”

ஆம், இயேசு கிறிஸ்து நமக்காகத் தன்னையே தந்திருக்கும்போது, நாம் அவருக்காக நம்மை அர்ப்பணிப்பதுதானே முறை. இன்றைய முதல் வாசகத்தில் அன்னா, ஆண்டவர் தனக்குத் தந்த சாமுவேலை அவருக்காக அர்ப்பணிப்பதையும், நற்செய்தியில் ஆண்டவருக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மரியா அவரைப் போற்றிப் பாடுவதையும் குறித்து நாம் வாசிக்கின்றோம். அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

எப்ராயிம் மலை நாட்டைச் சார்ந்த எல்கானாவின் மனைவியான அன்னாவிற்குக் குழந்தை கிடையாது. இந்த ஒரே காரணத்திற்காக இவருடைய சக்களத்தியான பெனின்னா இவரை வதைத்துத் துன்புறுத்தினார். இதனால் மிகுந்த வேதனையடைந்த அன்னா ஆண்டவரின் கோயில் முற்றத்தில் மனம் கசந்து அழுது, அவர்முன் தன் வேண்டுகோளை எடுத்து வைக்கின்றார். ஆண்டவரும் இவருடைய வேண்டுகோளைக் கேட்டு, இவருக்கு ஓர் ஆண்மகனைத் தருகின்றார்.

இவ்வுலகில் கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு வாழும் மனிதர்கள் பலர் உண்டு. அன்னா அவர்களைப் போன்று இல்லாமல், தான் ஆண்டவரிடம் வேண்டிக்கொண்டது போன்றே தன் மகன் சாமுவேலை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கின்றார். அன்னா தன் மகன் சாமுவேலை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கின்றபோது கொடுத்த காணிக்கைகளும் நினைவுகூரத் தக்கவை. எண்ணிக்கை நூலில் சொல்லப்பட்டதை விடவும் (எண் 15: 8-10) மிகுதியாக அன்னா ஆண்டவருக்குக் காணிக்கை செலுத்துகின்றார். இதன்மூலம் அவர் ஆண்டவருக்கு எந்தளவுக்கு நன்றியுள்ளவராக இருந்திருப்பார் என்பதை நாம் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம்.

நற்செய்தியில், “நான் ஆண்டவரின் அடிமை; உம சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்று சொல்லி, ஆண்டவருக்குத் தன்னை அர்ப்பணித்து கொண்ட மரியா, இஸ்ரயேல் மக்களுக்கும் தனக்கும் ஆண்டவர் செய்த நன்மைகளை நினைத்து, அவரைப் போற்றிப் புகழ்கின்றார். ஆகையால், நாம் ஒவ்வொருவரும் ஆண்டவர் நமக்குச் செய்த நன்மைகளை உணர்ந்து, அவருக்கு முற்றிலும் நம்மை அர்ப்பணித்து வாழவேண்டும். அது ஒன்றே நாம் ஆண்டவருக்குச் செய்யும் சிறந்த கைம்மாறு ஆகும்.

Comments are closed.