இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

16.12.2023

துயர் நிறை மறையுண்மைகள்.

1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில், “என் கட்டளைக்குச் செவிசாய்த்திருப்பாயானால், உன் நிறைவாழ்வு ஆற்றைப் போலும், உன் வெற்றி கடல் அலை போலும், பாய்ந்து வந்திருக்கும்.” என இறைவாக்கினர் எசாயா மூலம் ஆண்டவர் கூறுகிறார்.

ஆண்டவரது கட்டளைகளை செவிமடுத்து அவரது ஆசீர்வாதங்களை நாம் நிறைவாய் பெற வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 1-ல்,

“நற்பேறு பெற்றவர் யார்? – அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;” என திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார்.

நாம் தீயனவற்றிலிருந்து விலகி இருந்து நற்பேறு பெற்றவர்களாக விளங்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,

‘Handmaids of Charity’ என்ற துறவற இல்லத்தை நிறுவியவரும், இன்றைய புனிதருமான மரியா டி ரோஸா என்ற புனிதரை நம் திருச்சபைக்குத் தந்த நம் இறைவனுக்கு நன்றியாக இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,

வெள்ளிக் கிழமையான இன்று நமது செபம், தபம் மற்றும் அன்றாட அலுவல்கள் அனைத்தையும் நமது திருஇருதயாண்டவரின் மாசற்ற திருஇருதயத்துக்கு ஒப்புக்கொடுக்க வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,

நோய்த் தொற்றினாலும், விபத்துக்களினாலும் மற்றும் பல்வேறு காரணங்களினாலும் உயிரிழந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இறைவன் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.