டிசம்பர் 16 : நற்செய்தி வாசகம்

எலியா ஏற்கெனவே வந்துவிட்டார்; அவரை மக்கள் கண்டுணரவில்லை

எலியா ஏற்கெனவே வந்துவிட்டார்; அவரை மக்கள் கண்டுணரவில்லை.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 10-13

இயேசுவும் சீடர்களும் மலையிலிருந்து இறங்கி வந்தபோது சீடர்கள் அவரிடம், “எலியாதான் முதலில் வரவேண்டும் என்று மறைநூல் அறிஞர்கள் கூறுகிறார்களே, அது எப்படி?” என்று கேட்டார்கள். அவர் மறுமொழியாக, “எலியா வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்தப் போகிறார் என்று கூறுவது உண்மையே. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியா ஏற்கெனவே வந்துவிட்டார். அவரை மக்கள் கண்டுணரவில்லை. மாறாக, தாங்கள் விரும்பியவாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள். அவ்வாறே மானிடமகனையும் அவர்கள் துன்புறுத்துவார்கள்” என்றார். திருமுழுக்கு யோவானைப் பற்றியே அவர் தங்களோடு பேசினார் என்பதை அப்பொழுது சீடர்கள் புரிந்துகொண்டார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

———————————————————————-

புறக்கணிப்புகளும் கண்டுகொள்ளப்படாமையும்

திருவருகைக் காலம் இரண்டாம் வாரம் சனிக்கிழமை

I சீராக்கின் ஞானம் 48: 1-4, 9-11

II மத்தேயு 17: 10-13

புறக்கணிப்புகளும் கண்டுகொள்ளப்படாமையும்

அழகில்லை என்று புறக்கணிக்கப்பட்ட பிரதமர்:

இஸ்ரயேலின் முதல் பெண் பிரதமராக இருந்தவர் கோல்டா மேயர் (Golda Meir 1898-1978). தன்னுடைய தொடக்கக் காலக்கட்டத்தில் இவர் ‘அழகில்லாதவர்’ என்று புறக்கணிக்கப்பட்டார். இதை நினைத்து இவர் மிகவும் வருந்தினார்.

‘மக்கள் என்னை என்னுடைய வெளித்தோற்றத்தைப் பார்த்துப் புறக்கணிக்கிறார்கள் எனில், நான் எனக்குள் இருக்கும் திறமைகளை வெளிக்கொணர்ந்து, என்னை நான் நிரூபிப்பதற்கு இது சரியான வாய்ப்பு’ என்று முடிவுசெய்து கொண்டு, கோல்டா மேயர் தனக்குள் இருந்த திறமைகளை முழுமையாகப் பயன்படுத்தினார். இதனால் இவர் இஸ்ரயேலின் முதல் பெண் பிரதமரானார்.

ஆம், இஸ்ரயேலின் முதல் பெண் பிரதமாரான கோல்டா மேயர் ‘அழகில்லாதவர்’ என்று புறக்கணிக்கப்பட்டார்; கண்டு கொள்ளப்படாமலும் இருந்தார். எப்போது அவர் தன்னுடைய முழுத் திறமையையும் பயன்படுத்தினாரோ, அப்பொழுது அவர் இஸ்ரேயலின் முதல் பெண் பிரதமராகக் கண்டுகொள்ளப்பட்டார். இன்றைய இறைவார்த்தை திருமுழுக்கு யோவானை மக்கள் கண்டுகொள்ளாததையும், அவரைக் கண்டுகொண்டவர்கள் எத்தகைய ஆசிகளுக்குச் சொந்தக்காரர்கள் ஆனார்கள் என்பதையும் எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

இஸ்ரயேல் மக்கள் நடுவில், இறைவாக்கினர் எலியாவிற்கு என்று தனி இடம் உண்டு. காரணம் அவர் இறக்கவில்லை என்பதால்தான் (2 அர 2:11). மேலும், அவர் மெசியாவின் வருகைக்கு முன்பாகத் தோன்றி, அவருடைய வருகைக்காக மக்களை ஆயத்தம் செய்வார் என்ற நம்பிக்கையும் இருந்தது (மலா 3:1, 4:5.6).

இந்நிலையில் ஆண்டவர் இயேசு தோற்றமாற்றம் அடைந்தபோது, அவரோடு இறைவாக்கினர் எலியாவும் வந்ததைக் கண்டு, இயேசுவின் சீடர்கள் அவரிடம், “எலியாதான் முதல் வர வேண்டும் என்று மறைநூல் அறிஞர்கள் கூறுகிறார்களே, அது எப்படி?” என்று கேட்கிறார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “எலியா ஏற்கெனவே வந்துவிட்டார். அவரை மக்கள் கண்டுகொள்ளவில்லை” என்கிறார்.

திருமுழுக்கு யோவான், எலியாவின் உளப்பாங்கையும் வல்லமையும் உடையவராய் (லூக் 1:17) ஆண்டவரின் வருகைக்காக மக்களைத் தயார் செய்து, அவர்களை ஆண்டவரிடம் திருப்ப முயற்சி செய்தார்; ஆனால் மக்கள் அவரைக் கண்டுகொள்ளவில்லை. ஒருவேளை மக்கள் திருமுழுக்கு யோவானில் எலியாவைக் கண்டுகொண்டிருந்தால், அவர்கள் இன்றைய முதல் வாசகத்தின் இறுதியில் நாம் வாசிப்பது போன்று, பேறுபெற்றவர்களாய் இருந்திருப்பார்கள்.

ஆதலால், கடவுளின் வார்த்தையை அறிவிப்பவரைப் பார்த்து, அவரைப் புறக்கணியாமல், அவர் அறிவிக்கும் செய்தியைக் கேட்டு மனம்மாறி, கடவுளுக்கு உகந்தவர்கள் ஆவோம்.

Comments are closed.