டிசம்பர் 9 : நற்செய்தி வாசகம்

மக்கள் கூட்டத்தைக் கண்டு, இயேசு அவர்கள் மேல் பரிவு கொண்டார்

மக்கள் கூட்டத்தைக் கண்டு, இயேசு அவர்கள் மேல் பரிவு கொண்டார்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 35- 10: 1, 6-8

அக்காலத்தில்

இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.

திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவு கொண்டார்; அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப்போல அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டார்கள். அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்” என்றார்.

இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார். தீய ஆவிகளை ஓட்டவும், நோய் நொடிகளைக் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.

இயேசு பன்னிருவருக்கும் அறிவுரையாகக் கூறியது: “வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள். அப்படிச் செல்லும்போது ‘விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது’ எனப் பறைசாற்றுங்கள். நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள்; இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்யுங்கள்; தொழுநோயாளரை நலமாக்குங்கள்; பேய்களை ஓட்டுங்கள்; கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

—————————————————————————–

“அவர் அவர்கள்மேல் பரிவு கொண்டார்”

திருவருகைக் காலம் முதல் வாரம் சனிக்கிழமை

I எசாயா 30: 19-21, 23-26

II மத்தேயு 9: 35-10: 1,6-8

“அவர் அவர்கள்மேல் பரிவு கொண்டார்”

முகம் தெரியாத ஒருவரின் உதவி:

Reader’s Digest என்ற ஆங்கில மாத இதழில் வெளிவந்த நிகழ்வு இது. கைம்பெண் ஒருவர் ஓர் அடுக்கு மாடிக் கட்டடத்தில், தன் இரு பெண் பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்கராக வேலை பார்த்ததால், குடும்பத்தை எந்தவொரு சிரமமும் இல்லாமல், கொண்டு செல்ல முடிந்தது.

எல்லாம் நன்றாகச் சென்றுகொண்டிருந்த நேரத்தில், இவர் வேலை பார்த்து வந்த தனியார் நிறுவனம், இவரை வேலையிலிருந்து நீக்கிவிட்டு, வேறொரு ஆளை இவருடைய இடத்தில் நியமித்தது. இதனால் இவர் சொல்லொண்ணா வேதனை அடைந்தார். ‘இருந்த வேலையும் பறிபோய்விட்டது. இரண்டு பெண் பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு, இனிமேல் நான் என்ன செய்வேன்” என்று கண்ணீர் விட்டு அழுதார். இந்தக் கவலையோடு இவர் தன் பிள்ளைகளுடன் தூங்கக் சென்றுவிட்டார்.

மறுநாள் காலையில் இவர் வாசற்கதவைத் திறந்து பார்த்தபோது, அங்கு அன்றைய நாளுக்குத் தேவையான மளிகைச் சாமான்கள் ஒரு பையில் இருந்தது. இதைக் கண்டு இவர் மிகவும் வியப்படைந்தார். மறுநாளும் இவர் வாசற்கதவைத் திறக்கும்போது, அங்கு அன்றைய நாளுக்குத் தேவையான மளிகைப் பொருகள் ஒரு பையில் இருக்கக் கண்டு வியப்படைந்தார். இப்படியே பல நாள்கள் தொடர்ந்தது.

ஒருநாள் இவருக்கு ஒரு நல்ல இடத்தில் வேலை கிடைத்தது. இவருக்கு வேலை கிடைத்த மறுநாளிலிருந்து இவருடைய வீட்டிற்கு முன்பாக இருக்கும் மளிகைப் சாமான்கள் பையும் வருவது நின்றுவிட்டது. அப்போது இவர், ‘கடவுள்தான் என்மீதும் என் குடும்பத்தின்மீதும் மிகுந்த அன்புகொண்ட யாரோ ஒருவர் மூலம் என் வீட்டின் முன்பு ஒவ்வொரு நாளும் மளிகைப் பொருள்கள் வைத்திருக்கிறார்’ என்று கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.

ஆம், இந்த நிகழ்வில் வரும் கைம்பெண் வேலையை இழந்து தவித்தபோது, முகம் தெரியாத ஒருவர் அவர்மீது பரிவுகண்டு, அவருக்குத் தேவையானதைக் கொடுத்து உதவினார். நற்செய்தியில் இயேசு மக்கள்மீது பரிவு கொள்வதைக் குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

தூய ஆவியாரின் அருள்பொழிவைப் பெற்ற இயேசு (திப 10:38) சென்ற இடங்களில் எல்லாம் நன்மை செய்துகொண்டும், கடவுளின் வார்த்தையை அறிவித்துக் கொண்டும் சென்றார். அப்பொழுதுதான் அவர், மக்கள் ஆயனில்லா ஆடுகள் போன்று இருப்பதைக் கண்டு, அவர்கள்மீது பரிவு கொள்கின்றார்.

இயேசு மக்களுடைய துயரைத் தன்னுடைய துயராகவே பார்த்தார். ஆகவே, அவர் அவர்களுக்கு நல்ல ஆயர்களாக இருக்கத் திருத்தூதர்களை நியமித்தார். மட்டுமல்லாமல், அவர்கள் பேய்களை ஓட்டவும், பிணிகளைப் போக்கவும் அதிகாரம் அளித்தார். இவையெல்லாம் இயேசு மக்கள்மீதுகொண்ட பரிவின் வெளிபாடு என்றுதான் சொல்ல வேண்டும்.

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா, “நீங்கள் இனி ஒருபோதும் அழ மாட்டீகள்; அவர் உங்கள்மேல் திண்ணமாய் அருள்கூர்வார்” என்கிறார். எசாயா உரைக்கின்ற இவ்வார்த்தைகள் இன்றைய நற்செய்தியில் இயேசுவோடு அப்படியே பொருந்திப் போகிறன. எனவே, நல்லாயனாம் இயேசு மக்கள்மீது பரிவு கொண்டு, அவர்களுடைய கண்ணீரைத் துடைத்ததுபோன்று, அவருடைய சீடர்களான நாமும் மக்கள்மீது பரிவுகொண்டு வாழ்ந்து, மக்களின் கண்ணீரைத் துடைக்க முன் வருவோம்.

Comments are closed.