அக்டோபர் 9 : நற்செய்தி வாசகம்

எனக்கு அடுத்திருப்பவர் யார்?

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 25-37

எனக்கு அடுத்திருப்பவர் யார்?

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 25-37

அக்காலத்தில்

திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன், “போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.

அதற்கு இயேசு, “திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?” என்று அவரிடம் கேட்டார். அவர் மறுமொழியாக, “ ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’ என்று எழுதியுள்ளது” என்றார். இயேசு, “சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்” என்றார்.

அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, “எனக்கு அடுத்திருப்பவர் யார்?” என்று இயேசுவிடம் கேட்டார்.

அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை: “ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்துகொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறுபக்கமாக விலகிச் சென்றார். அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார்.

ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின்மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டு போய் அவரைக் கவனித்துக்கொண்டார்.

மறுநாள் இரு தெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, ‘இவரைக் கவனித்துக்கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்” என்றார்.

“கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?” என்று இயேசு கேட்டார். அதற்குத் திருச்சட்ட அறிஞர், “அவருக்கு இரக்கம் காட்டியவரே” என்றார். இயேசு, “நீரும் போய் அப்படியே செய்யும்” என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

—————————————————————————

எனக்கு அடுத்திருப்பவர் யார்?”

பொதுக்காலம் இருபத்து ஏழாம் வாரம் திங்கட்கிழமை

I யோனா 1: 1-17

II லூக்கா 10: 25-37

“எனக்கு அடுத்திருப்பவர் யார்?”

பெண் கைதிக்குக் கிடைத்த மறுவாழ்வு:

திருட்டு வழக்கில் கைதாகி விடுதலையான அந்தப் பெண்மணியை அவரது வீட்டார் உட்பட யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை. ஏதாவது கிடைக்கின்ற வேலையைச் செய்த பிழைப்பை ஓட்டலாம் என்று அவர் முயற்சி செய்தபோதும்கூட யாரும் அவருக்கு வேலை கொடுக்க முன்வரவில்லை. இப்படி எல்லாராலும் வெறுக்கப்பட்ட அவர் தற்கொலை செய்துகொண்டு வாழ்வை முடித்துக்கொள்ளலாமா என்றுகூட நினைத்தார்.

அப்பொழுதுதான் ஒரு கிறிஸ்தவப் பெண்மணி அவரைத் தன்னுடைய வீட்டில் வேலைக்கு எடுத்துக்கொண்டார். அவருக்குப் புத்தாடைகள் கொடுத்து அவரைப் புதுப் பொலிவுடன் வலம்வரச் செய்தார். தவிர, உண்மையான அன்பு என்றால் என்னவென்று அவருக்கு அவர் காட்டினார். இதனால் அந்தப் பெண்மணியின் வாழ்க்கை முற்றிலுமாக மாறிப்போனது.

ஒருநாள் அவர் கிறிஸ்தவப் பெண்மணியிடம், “அம்மா! எல்லாராலும் வெறுக்கப்பட்டுத் தற்கொலை செய்துகொண்டு வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் என்று முடிவுசெய்திருந்த எனக்கு அன்பு என்றால், என்னவென்று காட்டி, எனக்குப் புதுவாழ்வு தந்திருக்கின்றீர்கள். இனிமேல் நானும் அன்பு என்றால் என்னவென்று அறியாத மக்களுக்கு, உண்மையான அன்பைக் காட்டி, அவர்களுக்குப் புதுவாழ்வு தரப்போகிறேன்” என்று சொல்லிவிட்டு விடைபெற்றார்.

எல்லாராலும் வெறுத்து ஒதுக்கப்பட்ட பெண்மணி, கிறிஸ்தவப் பெண்மணியிடமிருந்து உண்மையான அன்பை அறிந்துகொண்ட பிறகு, அதை மற்றவர்களுக்குக் காட்ட விரைந்தார். நற்செய்தியில் அடுத்திருப்பவர் யார் என்று அறிந்துகொண்ட திருச்சட்ட அறிஞர், அடுத்திருப்பவராக வாழ இயேசு அறிவுறுத்தப்படுகின்றார். அது குறித்து நாம் சிந்திப்போம்ம்.

Comments are closed.