தூய ஆவியின் ஆற்றலால் செயல்படும் ஆயர் மாமன்றம்
ஆயர் மாமன்றம் என்பது தற்போதைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவோ அல்லது கருத்துக்களை வழங்குவதற்காகவோ நடக்கும் நண்பர்களின் சந்திப்புக் கூட்டமல்ல என்றும், ஆயர் மாமன்றத்தின் முக்கியமான நபராக தூய ஆவியார் இருந்து செயல்படுகின்றார், நம்மை வழி நடத்துகின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அக்டோபர் 4 புதன்கிழமை மாலை வத்திக்கான் புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் நடைபெற்ற 16ஆவது உலக ஆயர்கள் மாமன்றத்தின் தொடக்க உரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்மை வழிநடத்தும் தூயஆவியானவர் நம்மிடையே இருந்தால், அது ஓர் அழகான ஒருங்கிணைந்த பயணமாக, ஆயர் மாமன்றமாக இருக்கும் என்றும் வலியுறுத்தினார்.
தனிப்பட்ட, மனித, கருத்தியல் நலன்களுக்காக முன்னோக்கிச் செல்வதற்கான நோக்கம் மற்றும் வழிகள் நம்மிடையே இருந்தால், அது ஆயர் மாமன்றமாக இருக்காது அது ஒரு பாராளுமன்றக் கூட்டமாகவே இருக்கும் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், புனித பசிலியோ அவர்களின் கட்டுரைகளைக் குறித்து ஆயர் மாமன்ற உறுப்பினர்களிடம் எடுத்துரைத்தார்.
தூய ஆவியானவருக்கும் வருத்தம் வருவிக்கும் வெற்று வார்த்தைகள்
வெற்று வாத்தைகள், புறம்பேசுதல் ஆகியவை தூய ஆவியானவரை வருத்தம் அடையச் செய்கின்றன என்று கூறிய திருத்தந்தை அவர்கள், வார்த்தைக்கும் ஆவியானவருக்கு இடையே மிக முக்கியமான தொடர்பு உள்ளது என்றும், வெற்று வார்த்தைகள் என்ற கொடிய நோயிலிருந்து நாம் மீளவும், தூயஆவி நம்மைக் குணப்படுத்தவும் நாம் அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.
பத்திரிகையாளர்களின் பணி மிகவும் முக்கியமானது என்று கூறிய திருத்தந்தை, ஆயர்கள் மாமன்றம் தூயஆவியின் ஆற்றலால் நடைபெறுகின்றது என்பதை மக்களுக்கு எடுத்துரைக்க உதவும் பத்திரிக்கையாளர்களுக்குத் தன் நன்றியினையும், பேசுவதை விட கேட்பதே முக்கியம் என்பதை மக்களுக்கு அறிவிப்பவர்களாக இருக்க அவர்களுக்கு நாம் உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
Comments are closed.