செப்டம்பர் 24 : நற்செய்தி வாசகம்
நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?
நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-16a
இயேசு தம் சீடருக்குக் கூறிய உவமை: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார். அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார். ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்றபொழுது சந்தை வெளியில் வேறு சிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ‘நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்’ என்றார். அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார்.
ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ‘நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்றுகொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். அவர்கள் அவரைப் பார்த்து, ‘எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை’ என்றார்கள்.
அவர் அவர்களிடம், ‘நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்’ என்றார். மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரிடம், ‘வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர் வரை அவர்களுக்குரிய கூலி கொடும்’ என்றார். எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர். அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம்தான் பெற்றார்கள்.
அவர்கள் அதைப் பெற்றுக்கொண்ட போது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து, ‘கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே’ என்றார்கள். அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, ‘தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக்கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?’ என்றார்.
இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்” என்று இயேசு கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————————————-
இறைநீதி அநீதி அல்ல; சமநீதி
பொதுக்காலம் இருபத்து ஐந்தாம் ஞாயிறு
I எசாயா 55: 6-9
II பிலிப்பியர் 1: 20c-24, 27a
III மத்தேயு 20: 1-16a
இறைநீதி அநீதி அல்ல; சமநீதி
நிகழ்வு
கிராமப்புறத்தில் இருந்த மேனிலைப் பள்ளிக்கூடம் அது. அந்தப் பள்ளிக்கூடத்தில் பள்ளி ஆண்டுவிழா அண்மையில் நடைபெறவிருந்தது. அதன் நிமித்தம் பள்ளியில் மாணவர்களுக்கிடையே விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. எல்லாப் போட்டிகளும் முடிந்து இறுதிப் போட்டியாக, 1000 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் பல மாணவர்கள் கலந்துகொண்டார்கள். அவர்களோடு தன் வலக்காலில் கட்டுப் போட்டவாறு ஒரு மாணவன் கலந்துகொண்டான்.
போட்டியை நடத்திய ஆசிரியர், போட்டியில் கலந்துகொண்ட ஏனைய மாணவர்களிடம் “1000 மீட்டரை யார் முதலில் ஓடிக் கடக்கிறாரோ அவரே வெற்றிபெற்றவர்” என்று சொல்லிவிட்டு, காலில் கட்டுப் போட்டவாறு போட்டியில் கலந்துகொண்ட மாணவரிடம், “தம்பி நீ 800 மீட்டரை வேகமாக ஓடிக் கடந்தால், நீதான் வெற்றி பெற்றவன் ஆவாய்” என்றார். இதைப் பக்கத்திலிருந்து கேட்டுக்கொண்டிருந்த ஏனைய மாணவர்கள் போட்டியை நடத்திக் கொண்டிருந்த ஆசிரியரிடம், “நாங்கள் அனைவரும் 1000 மீட்டர் ஓடவேண்டுமாம்… இவன் மட்டும் 800 மீட்டர் ஓடினால் போதுமாம்! இதில் என்ன நீதி இருக்கின்றது; இது அநியாயம்” என்று சீறினார்கள். அப்பொழுது போட்டியை நடத்திய ஆசிரியர் அவர்களிடம், “தம்பிகளா! இந்த மாணவன் தன் வலக்காலில் கட்டுப் போட்டவாறு இருக்கின்றானே…! இதற்கு யார் காரணம்?” என்றார்.
அவர்கள் எதுவும் பேசமால் அமைதியாக இருந்தார்கள். ஆசிரியர் அவர்களிடம் மீண்டுமாக அதே கேள்வியைக் கேட்டதும், அவர்களில் ஒரு மாணவன், “போன வாரம் நாங்களெல்லாம் ஒரு கடையில் தேநீர் அருந்திக்கொண்டிருக்கும்பொழுது, இவன் எங்களுக்கு முன்பாகக் கால்மேல் கால் போட்டு தேநீர் அருந்திக்கொண்டிருந்தான். பொருளாதாரத்திலும் சமூகத்திலும் எங்களைவிடப் பின்தங்கியவன் எப்படி எங்களுக்கு நிகராகக் கால்மேல் கால் போட்டு, தேநீர் அருந்தலாம்…? அதனால்தான் நாங்கள் எல்லாரும் சேர்ந்து அவனுடைய காலை உடைத்தோம்” என்றான்.
அந்த மாணவன் சொன்னதை அமைதிக் கேட்டுக்கொண்டிருந்த, போட்டியை நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் அவர்களிடம், “எந்தக் காரணத்திற்காக நீங்கள் எல்லாரும் சேர்ந்து இவனுடைய காலை உடைத்தீர்களோ, அந்தக் காரணத்திற்காகத்தான் இவன் 800 மீட்டர் மட்டும் ஓடப்போகிறான். இது அநீதி கிடையாது; அவனுக்குச் சேர வேண்டிய நீதி” என்றார். இதைக் கேட்டு அந்த மாணவர்கள் எதுவும் பேசாமல் அமைதியானார்கள்.
ஆம், வறியவர்கள், வஞ்சிக்கப்பட்டவர்கள், ஏழைகள் ஆகியோரிடத்தில் (அரசும்) ஆண்டவரும் காட்டும் கரிசனையும் இரக்கமும் அநீதி கிடையாது; அது அவர்களுக்குச் சேர வேண்டிய நீதி. அதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. பொதுக்காலம் இருபத்து ஐந்தாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும், ‘இறைநீதி அநீதி அல்ல, அது சமநீதி” என்ற செய்தியை எடுத்துக்கூறுகின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
Comments are closed.