கிறிஸ்துவை அறிவித்தல் நம்மை ஒன்றுபடுத்துகின்றது

நம்மைத் தூய்மைப்படுத்தும் செபம், இணைக்கும் தொண்டுப்பணிகள், ஒன்றிணைக்கும் உரையாடல் ஆகியவற்றில் ஒன்றிணைந்துப் பயணிப்போம் என்றும், கிறிஸ்துவை அறிவிப்பது என்பது நம்மை ஒன்றுபடுத்துகிறது மாறாக பிரிக்கவில்லை என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 11 திங்கள் கிழமை வத்திக்கானில் ஆர்த்தடாக்ஸ் சீரோ மலங்கரா கத்தோலிக்க சபையின்  தலைவர் மூன்றாம் பசேலியோஸ் மர்த்தோமா மத்தியூஸ் அவர்களை முதன் முறையாக சந்தித்த போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமது இறைவனின் பொதுவான அழைப்பு கிறிஸ்தவ ஒன்றிப்புப் பயணத்தையே அறிக்கையிடுகின்றது என்றும் கூறினார்.

திருத்தூதர் புனித தோமாவின் நம்பிக்கை கிறிஸ்துவின் உடலில் ஏற்பட்ட காயங்களின் அனுபவத்திலிருந்து பிரிக்க முடியாதது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவர்களாகிய நம்மிடையே வரலாறு நெடுகிலும் ஏற்பட்டுள்ள பிளவுகள், திருஅவையாகிய கிறிஸ்துவின் உடலில் ஏற்படுத்தப்பட்ட வலிமிகுந்த காயங்கள் என்றும், அதன் விளைவுகளை நாம் இன்னும் நேரடியாக அனுபவித்து வருகிறோம் என்றும் எடுத்துரைத்தார்.

இக்காயங்களில் நாம் ஒன்றிணைந்து நமதுக் கையை இடும்போது, திருத்தூதர் தோமாவைப் போல என் ஆண்டவரே என் கடவுளே என்று பறைசாற்றவும், தாழ்மையான இதயத்துடன் அவருடைய அருளைக்குறித்து வியந்து நம்பும்போது, உயிர்ப்பின் மறைபொருளை விரைவில் கொண்டாடவும் முடியும் என்றும் எடுத்துரைத்தார்.

நம்மைத் தூய்மைப்படுத்தும் செபம்,  நம்மை இணைக்கும் தொண்டுப்பணிகள், நம்மை ஒன்றிணைக்கும் உரையாடல் ஆகியவற்றில் ஒன்றிணைந்துப் பயணிப்போம் என எடுத்துரைத்தார்.

உருவாக்கத்தில், சொல் வேறுபாடுகள், மற்றும் முக்கியத்துவம் வரலாறு முழுவதும் எழுந்தாலும், இந்த வேறுபாடுகள் நம்மைப் பிரிக்கக்கூடாது என்றும், உலகெங்கிலும் உள்ள நமது சகோதர சகோதரிகளுக்கு கிறிஸ்துவை எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் அறிவிப்பதாக இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Comments are closed.