பணியிடத்தில் பாதுகாப்பு சுவாசிக்கும் காற்று போன்றது
பணியிடத்தில் பாதுகாப்பு என்பது நாம் சுவாசிக்கும் காற்றைப் போன்றது என்றும், காற்றின்றி இயல்பாக சுவாசிக்க கடினப்படும்போது மட்டுமே அதன் முக்கியத்துவத்தை தாமதமாக நாம் உணர்கின்றோம் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
செப்டம்பர் 11 திங்கள் கிழமை ANMIL எனப்படும் பணித்தளத்தில் விபத்துக்குள்ளாகி பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் வேலைக்குச்செல்ல இயலாதவர்களுக்கான தேசிய இயக்கத்தின் 80ஆவது ஆண்டை முன்னிட்டு, அதன் உறுப்பினர்கள் ஏறக்குறைய 300 பேரை வத்திக்கானின் கொன்சிஸ்தோரொ அறையில் சந்தித்த போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
1943ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் உருவான ANMIL தேசிய இயக்கமானது விதவைகள், அனாதைகள் ஆகியோரின் பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டது என்றும், பணியிடத்தில் ஏற்படும் எதிர்பாராத விபத்துக்கள் மற்றும் மரணங்களைத் தடுக்க தக்க முயற்சிகளை எடுத்துவருவதற்காக தனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார் திருத்தந்தை.
பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நலப்பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பதோடு மட்டுமல்லாமல், மீண்டும் அவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, அவர்களின் மாண்பு முழுமையாக அங்கீகரிக்கப்பட புதிய வாய்ப்புகளை வழங்கவேண்டும் என்றும், எதிர்பாராத விபத்துக்களைத் தடுத்தல் மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளை பற்றிய விழிப்புணர்வை பெண்கள் மற்றும் இளையோர்க்கு தொடர்ந்து எடுத்துரைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
அயலாரிடத்தில் அலட்சியம் வேண்டாம்
நல்ல சமாரியன் உவமையை மேற்கோள்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வுவமையில் வரும் குரு, லேவியர் இருவரும் தங்களைக் கறைபடுத்திக்கொள்ள விரும்பாமல் விலகிச்சென்றதைப்போல நாமும் அயலாரிடத்தில் அலட்சியமாக செயல்படக்கூடாது என்றும், இறப்பு, காயங்கள் என்னும் சமூக வறுமையானது குடும்பத்தை மட்டுமல்லாது முழு சமூகத்தையும் பாதிக்கின்றது என்றும் எடுத்துரைத்தார்.
“உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில். கடவுள் உங்களை விலை கொடுத்து மீட்டுள்ளார். எனவே, உங்கள் உடலால் கடவுளுக்குப் பெருமை சேருங்கள்” என்ற (1 கொரி 6,19-20) திருத்தூதர் பவுலின் வரிகளை எடுத்துக்கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியின் ஆலயமாகிய உடலை பாதுகாத்து பரமாரிக்கும் போது நாம் கடவுளுக்கு வழிபாடு செய்கின்றோம் என்றும் கூறினார்.
அதிக லாபம் என்ற பெயரில், அதிக வேலை நேரத்தை வழங்குவதும், அதன்வழியாக அவர்களது கவனத்தைக் குறைக்கும் செயல்களும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும், குறைவான பாதுகாப்பு வசதிகள், காப்பீட்டு படிவங்கள் அல்லது பாதுகாப்பு கோரிக்கைகளை, பயனற்ற செலவுகள், வருமான இழப்பு என்று ஒருபோதும் எண்ண முடியாது என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
வேலையில் பாதுகாப்பு என்பது தனிப்பட்ட கவனிப்பின் ஒருங்கிணைந்த பகுதி என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு முதலாளியின் முதல் கடமை தொழிலாளர்களுக்கு நன்மையின் வடிவமாக இருப்பது என்றும், அவர்களை மனிதர்களாக மாண்புடன் நடத்தவேண்டும் மாறாக அவர்கள் இயந்திரங்களாக அவற்றின் உதிரிபாகங்களாக பார்க்கக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.
Comments are closed.