பாஸ்கா காலத்தின் ஐந்தாம் வாரம்

செவ்வாய்க்கிழமை

(மே 09)

நற்செய்தி அறிவித்து, இயேசுவின் சீடராக்குங்கள்

அறிவியுங்கள்; ஆசி பெறுங்கள்

யூத நெறியின்மீதுகொண்ட மிகுந்த பற்றினால் ஒரு காலகட்டத்தில் கிறிஸ்தவ நெறியைப் பின்பற்றி வந்தவர்களைத் துன்புறுத்தியவர் பவுல். அப்படிப்பட்டவர் இன்றைய முதல் வாசகத்தில் கிறிஸ்துவுக்காகக் கல்லெறிபடுவதையும் துன்பப்படுவதையும் பற்றி வாசிக்கின்றோம்.

பவுல் இயேசுவின் நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்கையில், யூதர்கள் அவரைக் கல்லால் எறிந்து கொல்ல முயற்சி செய்கின்றார்கள். ஆனால், அதையெல்லாம் நினைத்துத் தன் முயற்சியிலிருந்து பின் வாங்காத பவுல், மறுநாளே நற்செய்தியை அறிவிக்கத் தொடங்குகின்றார். அதை விடவும் கிறிஸ்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காகத் துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவர்களை, “நாம் பல வேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்பட வேண்டும்” என்று அவர் நம்பிக்கையில் உறுதிப்படுத்துகின்றார்.

இன்றைய நற்செய்தியில் இயேசு தம் சீடரிடம், “அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கின்றேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கின்றேன்” என்று அவர்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்துவதைக் குறித்து வாசிக்கின்றோம். உயிர்த்த ஆண்டவர் இயேசு தம் சீடரிடம் கூறிய முதல் வாழ்த்து அமைதிதான் (யோவா 20: 19-26). இத்தகைய அமைதியை நாம் பெற இயேசுவின் பணியைப் பவுலைப் போன்று தொடரர்ந்து செய்ய வேண்டும். அதே வேளையில், கடவுள் தரும் அமைதியைப் பெற்றுக்கொண்ட பிறகு, இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 145 இல் தாவீது சொல்வது போல, கடவுளின் மாட்சியை அறிவிக்க வேண்டும்.

ஆகவே, நாம் கடவுள் நமக்கு அளித்திருக்கும் அமைதியை, ஆசியை, அன்புச் செய்தியைத் துணிவோடு அறிவிப்போம்; அவரது அன்புச் சீடராய் இருந்து, உலகிற்குச் சான்று பகர்வோம்.

என்னால் ஏன் முடியவில்லை

பங்குப் பணியாளர் ஒருவர் ஒருநாள் காலை வேளையில் காலார நடந்து சென்றுகொண்டிருந்தார். வழியில் ஒருசிலர் கற்களை மிகவும் அழகாய் வெட்டி, அவற்றைக் கொண்டு, சாலை அமைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்து வியந்து போன பங்குப் பணியாளர், “இவர்களைப் போன்று என்னால் ஏன் என்னுடைய போதகப்பணியைச் சிறப்பாகச் செய்து, மக்கள் நடுவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை?’ என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது.

உடனே அவர் அங்கே சாலை அமைத்துக் கொண்டிருந்த பணியாளர்களுள் ஒருவரைப் பார்த்து, தனக்குள் ஏற்பட்ட கேள்வியை அவரிடம் கேட்டார். அப்போது அவர், “நான் சாலை அமைக்கும்போது எப்படி முழந்தாள் படியிட்டவாறு, கற்களை வெட்டுவதும், அவற்றைப் பதிப்பதுமாக இருக்கின்றேனோ! அப்படி நீங்களும் போதிப்பதற்கு முன்னதாக சிறிது நேரம் முழந்தாள் படியிட்டு வேண்டுங்கள். அப்போது உங்கள் போதனை பலரது உள்ளங்களையும் ஊடுருவதாக இருக்கும்” என்றார்.

கடவுளின் வார்த்தையைப் போதித்து, பலரையும் சீடராக்க வேண்டுமெனில், முழந்தாள் படியிட்டு வேண்டாவிட்டால், எதுவும் சாத்தியப்படாது. நாம் கடவுளின் வார்த்தையை அறிவித்து, பலரையும் சீடராக்குவும் பணியில், கடவுளிடம் முழந்தாள் படியிட்டு வேண்டுகின்றோமா? சிந்திப்போம்.

Comments are closed.