இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.
துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்
“நாங்கள் மனித ஞானத்தால் கற்றுக்கொண்ட சொற்களைப் பேசுவதில்லை; மாறாக, தூய ஆவியார் கற்றுத்தரும் சொற்களையே பேசுகிறோம்.” என திருத்தூதர் பவுலடியார் கூறுகிறார்.
நமது எண்ணம், பேச்சு, செயல் அனைத்தும் தூய ஆவியானவரின் தூண்டுதலின்படி மட்டும் அமைந்திட இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 145:14-ல்,
“தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கி விடுகின்றார்.” என கூறப்பட்டுள்ளது.
நொறுங்குண்ட நெஞ்சங்களை ஆண்டவர் அரவணைத்து தேற்றிட வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்
“எல்லாரும் திகைப்படைந்து, “எப்படிப் பேசுகிறார், பாருங்கள்! அதிகாரத் தோடும் வல்லமையோடும் தீய ஆவிகளுக்குக் கட்டளையிடுகிறார்; அவையும் போய்விடுகின்றனவே!” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டனர்.” என வாசித்தோம்.
பல ஆண்டுகளாக குணம் பெறாமல் மன வியாதியினால் துன்புறும் எண்ணற்ற மக்கள் இயேசுவின் வல்லமையால் குணம் பெறவேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
நமது அண்டை நாடான பாகிஸ்தானில் கடும் வெள்ளத்தினால் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் பலியாகியுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடிழந்துள்ளனர். விரைவில் மக்கள் மீண்டும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
அந்தோணியாருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட செவ்வாய்க் கிழமையான இன்று குடும்பங்களில் தீய ஆவியின் தொல்லைகள் நீங்க வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Comments are closed.