ஆகஸ்ட் 31 : நற்செய்தி வாசகம்
நான் மற்ற ஊர்களிலும் இறையாட்சியைப் பற்றி நற்செய்தி அறிவிக்க வேண்டும்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 38-44
அக்காலத்தில்
இயேசு தொழுகைக்கூடத்தை விட்டு, சீமோன் வீட்டிற்குள் சென்றார். சீமோனின் மாமியார் கடுங்காய்ச்சலால் துன்புற்ற நிலையில் இருந்தார். அவர்கள் அவருக்காக இயேசுவிடம் வேண்டினார்கள். இயேசு அவரருகில் நின்று, காய்ச்சலைக் கடிந்துகொள்ள, அது அவரை விட்டு நீங்கிற்று. உடனே அவர் எழுந்து அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.
கதிரவன் மறையும் நேரத்தில், எல்லாரும் தங்களிடையே பற்பல பிணிகளால் நலம் குன்றி இருந்தோரை அவரிடம் கூட்டி வந்தார்கள். அவர் ஒவ்வொருவர் மேலும் தம் கைகளை வைத்து அவர்களைக் குணமாக்கினார். பேய்களும், “நீர் இறைமகன்” என்று கத்திக்கொண்டே பலரிடமிருந்து வெளியேறின. அவர் மெசியா என்று பேய்கள் அறிந்திருந்தபடியால், அவர் அவற்றை அதட்டி, பேசவிடாமல் தடுத்தார்.
பொழுது விடியும் வேளையில் இயேசு தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். திரளான மக்கள் அவரைத் தேடிச் சென்றனர்; அவரிடம் வந்து சேர்ந்ததும் தங்களை விட்டுப் போகாதவாறு அவரைத் தடுத்து நிறுத்தப் பார்த்தனர். அவரோ அவர்களிடம், “நான் மற்ற ஊர்களிலும் இறையாட்சியைப் பற்றி நற்செய்தி அறிவிக்க வேண்டும்; இதற்காகவே நான் அனுப்பப்பட்டிருக்கிறேன்” என்று சொன்னார். பின்பு அவர் யூதேயாவிலுள்ள தொழுகைக்கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————————
ஆவிக்குரியோரும் ஊனியல்புடையோரும்
பொதுக் காலத்தின் இருபத்து இரண்டாம் வாரம் புதன்கிழமை
i 1 கொரிந்தியர் 3: 1-9
II லூக்கா 4: 38-44
ஆவிக்குரியோரும் ஊனியல்புடையோரும்
தூய ஆவியாருக்குத் தெரியாதா?
இளைஞன் ஒருவன் ஒருவார காலம் தியானம் மேற்கொள்வதற்காக ஒரு தியான இல்லத்திற்குச் சென்றிருந்தான். அந்தத் தியான இல்லத்தில் மனத்தை ஒருமுகப்படுத்தித் தியானம் மேற்கொள்வதற்காக ஒருநாளுக்கு ஒருவேளை உணவுதான் அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இரண்டு நாள்களை ஒருவேளை உணவுடன் எப்படியோ சமாளித்த அந்த இளைஞனால் மூன்றாம் நாளைச் சமாளிக்க முடியவில்லை; அவனுக்குக் கடுமையாகப் பசி எடுத்தது. அதனால் அவன் மதிய வேளையில், யாருக்கும் தெரியாமல், தியான இல்லத்தின் மதிற்சுவரை ஏறிக் குறித்து வெளியே சென்று, அங்கிருக்கும் ஏதாவதொரு கடையில் சாப்பிட்டு வரலாம் என முடிவு செய்தான்.
அதன்படி அவன் யாருக்கும் தெரியாமல் தியான இல்லத்தின் மதிற்சுவரைத் தாண்டி வெளியே குதிக்கும்போது, தியான இல்லத்தின் தலைமைத் துறவி அவனைப் பார்த்துவிட்டார். “தம்பி இங்கே என்ன செய்துகொண்டிருக்கின்றாய்?” என்று தலைமைத் துறவி அவனிடம் கேட்டதற்கு, “தூய ஆவியார் என்னிடம் வெளியே சென்று, அருகிலுள்ள கடையில் சாப்பிடச் சொன்னார். அதனால்தான் நான் இங்கு வந்தேன்” என்றான். அப்போது தலைமைத் துறவி அவனை மேலிலிருந்து கீழ்வரை பார்த்துவிட்டு அவனிடம், “உன்னிடம் கடைக்குச் சென்று சாப்பிடச் சொன்ன தூய ஆவியாருக்கு, இன்று முழுவதும் கடையடைப்பு என்று தெரியாதா?” என்றார்.
இதைக் கேட்டதும் அந்த இளைஞன் பதில் சொல்வதற்கு வார்த்தைகள் ஏதுமின்றித் திக்கி திணறினான்.
நாம் ஆவிக்குரியவர்களாய் வாழ்வதற்குப் பதில், ஊனியல்பு உடையவர்களாய் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதை இந்த நிகழ்வு நமகுக் எடுத்துக் கூறுகின்றது. இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, நாம் ஊனியல்பு உடையவர்களாய் அல்ல, ஆவிக்குரியவர்களாய்ச் செயல்படவேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
எங்கே தூய ஆவியார் இருக்கின்றாரோ அங்கே ஒற்றுமை இருக்கும், ஒன்றிப்பு இருக்கும். பெந்தக்கோஸ்துப் பெருவிழாவில் அதுதான் நடந்தது (திப 2) அதே நேரத்தில் எங்கே பிளவும் போட்டி பொறாமையும், சண்டை சச்சரவும் இருக்கின்றனவோ அங்கே தூய ஆவியார் இருக்க வாய்ப்பில்லை; தீய ஆவியே இருக்கும்.
கொரிந்து நகர்த் திருஅவையில் இருந்தவர்கள், ‘நான் பவுலைச் சார்ந்துள்ளேன்’, ‘நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன்’ என்று சண்டை சச்சரவு செய்துகொண்டிருந்தார்கள். இப்படிச் சண்டை சச்சரவு செய்வோர் ஆவிக்குரியோராய் இருக்க வாய்ப்பில்லை; ஊனியல்புடையோராய்த்தான் இருப்பர் என்கிறார் பவுல்.
நற்செய்தியில் இயேசு தூய ஆவியாரால் அருள்பொழிவு செய்யப்பட்டவராய் பலரிடமிருந்து நோயை நீக்கி, அவர்களுக்கு நலமளிக்கின்றார். குறிப்பாக, அவர் கடுங்காய்ச்சலால் வேதனையுற்ற சீமோனின் மாமியாரிடமிருந்து காய்ச்சலை நீக்குகின்றார். அவரோ காய்ச்சல் தன்னிடமிருந்து நீங்கிய பிறகு எல்லாருக்கும் பணிவிடை செய்கின்றார். இவ்வாறு அவர் ஆவிக்குரியவராய் வாழத் தொடங்குகின்றார்.
ஒருவர் ஊனியல்புடையவராய் வாழும்போது, அவர் மற்றவருக்குப் பணிவிடை செய்வதற்கு வாய்ப்பில்லை; ஆவிக்குரியவராய் இருக்கும்போது மட்டுமே மற்றவருக்குப் பணிவிடை செய்ய முடியும். எனவே, நாம் இயேசுவைப் போன்று, சீமோனின் மாமியாரைப் போன்று ஆவிக்குரியவர்களாய் வாழ்ந்து மற்றவருக்குப் பணிவிடை புரிவோம்.
சிந்தனைக்கு:
தன்னலத்தை நாடுவோர் அனைவரும் ஊனியல்பேற்க வாழ்வோரே!
நாம் பெற்ற நன்மையைப் பிறரோடு பகிர்ந்து வாழ்வது மிகவும் முக்கியம்
ஒன்றுபட்டு வாழும்போது தூய ஆவியார் அங்கே குடியிருக்கின்றார்.
இறைவாக்கு:
‘தூய ஆவியாரின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள்; அப்போது ஊனியல்பின் இச்சைகளை நிறைவேற்ற மாட்டீர்கள்’ (கலா 5: 16) என்பார் புனித பவுல். எனவே, நாம் தூய ஆவியாரின் தூண்டுதலுக்கேற்ப வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.