வாசக மறையுரை (ஜுன் 14)
பொதுக் காலத்தின் பதினொன்றாம் வாரம்
செவ்வாய்க்கிழமை
I 1 அரசர்கள் 21: 17-29
II மத்தேயு 5: 43-48
“உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்”
பகைவர் யாரும் இல்லாதவர் கையை உயர்த்துங்கள்:
அது ஒரு பழமையான பங்கு. அந்தப் பங்கில், ஒரு ஞாயிற்றுக்கிழமைத் திருப்பலியில், மறையுரையின்போது பங்குப் பணியாளர் இறைமக்களைப் பார்த்து, “யாருக்கெல்லாம் நிறைய பகைவர்கள் உண்டோ, அவர்கள் கைகளை உயர்த்துங்கள்” என்றார். இதற்குப் பலரும் தங்கள் கைகளை உயர்த்தினர்.
பின்னர் பங்குப் பணியாளர், “யாருக்கெல்லாம் கொஞ்சமாகப் பகைவர்கள் உண்டோ, அவர்கள் கைகளை உயர்த்துங்கள்” என்றார். அப்போதும் ஒருசிலர் தங்கள் கைகளை உயர்த்தினார்கள். இறுதியாகப் பங்குப் பணியாளர் அவர்களிடம், “யாருக்கெல்லாம் பகைவர்களே கிடையாதோ, அவர்கள் கைகளை உயர்த்துங்கள்” என்றார். கோயிலின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த ஒரு முதியவர் மட்டும் கையை உயர்த்தினார்.
இதைக் கண்டு பங்குப் பணியாளர் மட்டுமல்லாமல், இறைமக்கள் அனைவருமே வியந்தனர். பங்குப் பணியாளர் அந்த முதியவரை அழைத்து, “இவர்தான் உண்மையான கிறிஸ்தவர்; இவரைப் போன்று நாம் ஒவ்வொருவரும் வாழவேண்டும்” என்று அவரைப் பாராட்டினார். பின்பு பங்குப் பணியாளர் அவரிடம், “ஐயா! உண்மையில் உங்களுக்கு பகைவர்களே கிடையாதா?” என்று கேட்டதற்கு, அவர், “ஆமாம்” என்று சொல்லிவிட்டு, “ஏனெனில், என்னுடைய பகைவர்கள் அனைவரும் ஏற்கெனவே இறந்துவிட்டார்கள்” என்றார்.
வேடிக்கையான ஒரு நிகழ்வாக இது இருக்கலாம். ஆனால், எல்லாருக்கும் பகைவர்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றார்கள் என்ற உண்மையை இந்த நிகழ்வு மிகவும் அப்பட்டமாக உணர்த்துகின்றது. இன்றைய இறைவார்த்தை பகைவர்களிடம் அன்பு கூரவேண்டும் என்கிறது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
யூதர்கள் தங்கள் இனத்தாரிடம் அன்பும், பகைவரிடம் வெறுப்பையும் காட்டி வந்தார்கள். இந்நிலையில் இயேசு அவர்களிடம், “உங்கள் பகைவரிடம் அன்பு கூருங்கள்” என்ற புதிய நெறியைப் போதிக்கின்றார். தவிர, பகைவரிடம் அன்பு கூர்வதால் என்ன ஆகும் என்பதையும் இயேசு சுட்டிக்காட்டுகின்றார்.
கடவுள் நல்லோர் மேலும் தீயோர் மேலும் கதிரவனை உதித்தெழச் செய்பவர். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர்மீதும் மழை பெய்யச் செய்கின்றார். இப்படி எவர் ஒருவர் தன்னை வெறுப்போரை அன்பு செய்து, அவருக்காக வேண்டுகின்றாரோ அவர் கடவுளின் மகனாக, மகளாக மாறுகின்றார் என்கிறார் இயேசு.
முதல் வாசகத்தில் நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை அபகரித்து, அவரையும் அவரது பிள்ளையும் கொன்றுபோட்ட ஆகாபு மன்னன்மீது கடவுள் இறைவாக்கினர் எலியா வழியாக, அவனும் நாபோத் இறந்த இடத்தில் இறப்பான் என்கிறார். ஆனாலும் அவன் தன் குற்றத்திற்காக மனம்வருந்துகின்றபோது, கடவுள் அவனுடைய குற்றத்தை மன்னிக்கின்றார். ஆனால், அவனுடைய வாழ்நாளின்போது தீமை வரச் செய்யாமல், அவனுடைய குடும்பத்தார்மேல் தீமை விழச் செய்வேன் என்கிறார். கடவுள் ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்பக் கைம்மாறு வழங்குபவர் என்றாலும், (உரோ 2:6), தனது குற்றத்தை உணர்ந்து மனம் மாறுபவரை மன்னிக்கின்றார்; அவர்மீது தம் அன்பைப் பொழிகின்றார்.
எனவே, நாம் இயேசு சொல்வது போல் பகைவரையும் அன்பு செய்து, விண்ணகத் தந்தையின் மக்களாவோம்.
சிந்தனைக்கு:
கடவுள் அன்பில் கடல் என்றால், அதில் நாம் ஒரு துளியளவாவது இருப்போம்.
இந்த வையகம் தழைக்க வெறுப்பைத் தவிர்த்து, அன்பை விதைப்போம்.
கடவுளின் மக்கள் அவரைப் பிரதிபலிப்பதே முறை
ஆன்றோர் வாக்கு:
உண்மையான மகிழ்ச்சி எதுவெனில், பகைவரை அன்பு செய்வதுதான்’ என்பார் சார்லஸ் எம். சூல்ஸ் என்ற அறிஞர். எனவே, நாம் பகைவர்களை அன்பு செய்து, கடவுளின் அன்பு மக்களாகி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்
Comments are closed.