உலகில் 16 கோடி சிறார் தொழிலாளர்கள்
உலக அளவில் சிறாரை தொழில்முறையிலிருந்து காப்பாற்றுவதற்கு, நிலையான சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும், மற்றும், அத்திட்டங்களுக்குத் தேவையான முதலீடு செய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜூன் 12, இஞ்ஞாயிறன்று, சிறார் தொழில்முறை ஒழிப்பு உலக நாள் கடைப்பிடிக்கப்படுகிறது
“சிறார் தொழில்முறையை நிறுத்துவதற்கு உலகளாவிய சமூகப் பாதுகாப்பு” என்ற தலைப்பில் கடைப்பிடிக்கப்படும் இந்த உலக நாள் பற்றி அறிக்கை வெளியிட்டுள்ள ஐ.நா. நிறுவனம், கடந்த இருபது ஆண்டுகளில் இத்தொழில்முறையைக் குறைக்கும் முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டாலும், 2016க்கும் 2020ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஐந்து வயதுச் சிறார் முதல், ஏறத்தாழ 16 கோடிச் சிறார் தொழிலாளர்கள் இருந்தனர் என்று கூறியுள்ளது.
இந்நிலையை அகற்றுவதற்கு உடனடி சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லையெனில், இவ்வாண்டு முடிவதற்குள், இவ்வெண்ணிக்கை 17 கோடியாக உயரும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
உடல் அளவிலும் மனத்தளவிலும் எளிதில் பாதிக்கப்படும் நிலை மற்றும், ஏழ்மை ஆகியவற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கும், சிறார் தொழில்முறையை முற்றிலும் ஒழிப்பது மற்றும், அதனைத் தடைசெய்வதற்கும், அரசுகளின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் இன்றியமையாதவை என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்று நெருக்கடி தொடங்குவதற்குமுன், உலக மக்கள் தொகையில் 46.9 விழுக்காட்டினர் மட்டுமே, குறைந்தது ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டத்தால் பயனடைந்தனர், அதேநேரம், எஞ்சியுள்ள 53.1 விழுக்காட்டினர் அதாவது ஏறத்தாழ 410 கோடிப் பேர் சமூகப் பாதுகாப்பின்றி விடப்பட்டனர் என்று ஐ.நா. மேலும் கூறியுள்ளது.
சிறாரில் ஏறத்தாழ 75 விழுக்காட்டினருக்கு, அதாவது 150 கோடிச் சிறாருக்குச் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் கிடையாது என்று கூறியுள்ள ஐ.நா. நிறுவனம், உலக அளவில் சிறார் தொழில்முறையில் சிக்கியுள்ள பத்தில் ஒன்பது பேர், ஆப்ரிக்கா, ஆசியா, மற்றும் பசிபிக் பகுதிகளில் உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது
Comments are closed.