ஜூன் 14 : நற்செய்தி வாசகம்
உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 43-48
அக்காலத்தில்
இயேசு தம் சீடருக்குக் கூறியது: “ ‘உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக’, ‘பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக’ எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.
உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர் களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரிதண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா? நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா? ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————————-
1 அரசர்கள் 21: 1-6
பேராபத்தை விளைவிக்கும் பேராசை
நிகழ்வு
துறவி ஒருவர் இருந்தார். இவரைப் பணக்காரன் ஒருவன் மிகத் தீவிரமாகப் பின்பற்றி வந்தான். ஒருநாள் அவன் ஒரு பையில் ஐநூறு பொற்காசுகளை வைத்து, அதை துறவியிடம் கொண்டு வந்து, “சுவாமி! இதை என்னுடைய காணிக்கையாக வைத்துக் கொள்ளுங்கள்” என்றான்.
அதை வாங்கிய துறவி, “உன்னிடம் இவ்வளவுதான் பொற்காசுகள் இருக்கின்றனவா…? என்றார். அவனோ, “இல்லை சுவாமி! இன்னும் ஏராளமாக இருக்கின்றன” என்று சொன்னதும், துறவி மீண்டுமாக அவனிடம், “இன்னும் உனக்குப் பணம் வேண்டுமா?” என்றார். அவனும், “ஆமாம் சுவாமி! இன்னும் எனக்கு ஏராளமாகப் பணம் வேண்டும்“ என்று சொன்னதும், துறவி, “அப்படியானால், நீ கொடுத்த இந்தக் காணிக்கையையும் நீயே வைத்துக்கொள். ஏனெனில் உனக்குத்தான் பணம் மிகுதியாகப் பணம் தேவைப்படுகின்றதே! எனக்கு பணமும் தேவையில்லை; இன்னமும் வேண்டும் என்ற எண்ணமும் இல்லை” என்றார்.
ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற பணக்காரனைப் போன்றுதான் பலர் இருப்பதை வைத்து நிறைவடையாமல், ‘இன்னமும் வேண்டும்… இன்னமும் வேண்டும்’ என்று பேராசைப்பட்டு பேரழிவில் மாட்டிக் மாடிக்கொள்வதைக் கண்கூடாகப் பார்க்கின்றோம். இன்றைய முதல் வாசகம், இஸ்ரயேலின் அரசனாக இருந்த ஆகாபு நாபோத்தின் திராட்சைத் தோட்டத்திற்கு ஆசைப்பட்டத்தையும், தொடர்ந்து நடக்கும் தீவினையையும் எடுத்துக் கூறுகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
நாபோத்தின் திராட்சைத் தோட்டத்திற்கு ஆசைப்பட்ட ஆகாபு
இஸ்ரயேலின் அரசனாக இருந்த ஆகாபு, தன்னுடைய அரண்மனைக்கு அருகில் இருந்த நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தைத் தனக்குத் தருமாறு நாபோத்திடம் கேட்க, அவரோ, “இது என் மூதாதையரின் சொத்து. நான் உனக்குக் கொடாதவாறு ஆண்டவர் என்னைக் காப்பாராக” என்று சொல்லி மறுத்து விடுகின்றார். நாபோத்து, ஆகாபு மன்னிடம் இவ்வாறு சொன்னதற்கு முக்கியமான காரணம், நிலம் ஆண்டவருக்குச் சொந்தம். அதை யாரும் விற்று விடக்கூடாது (லேவி 25: 23) என்பதால்தான். திராட்சைத் தோட்டத்தை நாபோத்து தனக்குத் தரவில்லை என்றதும், அவன் உணவருந்த மறுத்துக் கவலையோடு இருக்கின்றான். பின்னர் தன் மனைவி ஈசபேல் காரணத்தைக் கேட்டதும், எல்லாவற்றையும் சொல்கின்றான்.
ஆகாபு, நாபோத்தின் தோட்டத்தின்மீது பேராசை கொண்டது, அவன் செய்த முதல் தவறு என்று சொல்லலாம்; ஆனால், அதற்கு முன்பாகவே அவன் பாகால் தெய்வ வழிபாட்டைத் தன்னுடைய மனைவியோடு ஆதரித்து வந்தான். அதனால்கூட அவனுடைய உள்ளத்தில் நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை அபகரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கலாம். ‘பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே’ (விப 20: 17) என்பது கடவுள் மோசேக்குக் கொடுத்த கட்டளைகளுள் ஒன்று. ஆகாபு நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை விரும்பியதால், அவன் முதல் தவற்றைச் செய்யத் தொடங்குகின்றான்.
தன் மனைவி வழியாக நாபோத்தைக் கொன்று, அவனுடைய நிலத்தை அபகரித்த ஆகாபு
ஆகாபு மன்னன், நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை அடையமுடியவில்லை என்ற தன் மனைவி ஈசபேலிடம் சொன்னபொழுது, அவள் நாபோத்துக்கு எதிராகப் பொய்ச்சான்றுகளை ஏற்பாடு செய்யத் தொடங்குகின்றாள். ‘பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே’ (விப 20:16) என்பது ஒன்பதாவது கட்டளை. அதை ஆகாபு தன் மனைவியின் வழியாக, நாபோத்துக்கு எதிராகச் செய்கின்றான்.
பின்னர் நாபோத்துக்கு எதிராகப் பொய்ச்சான்று சொன்னவர்கள், “நாபோத்து கடவுளையும் அரசரையும் பழித்துரைத்தான்” என்கின்றார்கள். ‘கடவுளையும் மக்கள் தலைவனையும் பழிக்காதே’ (விப 23: 28) என்கிறது விடுதலைப் பயண நூல். இதனால் கடவுளையும் மக்கள் தலைவனையும் பழித்துவிட்டான் என்பதற்காக, நாபோத்து கல்லால் எறிந்து கொல்லப்படுகின்றான். இவ்வாறு ஆகாபு மன்னன் கொலை செய்பவனாகவும் (விப 20: 13), களவு செய்பவனாகவும் (விப 20: 15) மாறுகின்றான். ஆகாபின் உள்ளத்தில் இருந்த ஆசையே, நாபோத்தைக் கொல்வதுவரைக்கும் இட்டுச் செல்கின்றது.
ஆகாபு – நாபோத்து தொடர்பான இந்த நிகழ்வு இன்றைக்கும் கூட நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள், சாதாரண மக்கள் தங்களுடைய பிழைப்பிற்காக வைத்திற்கும் சிறிதளவு நிலத்தையும் உடைமைகளையும் அபகரித்துக் கொள்ளும் சூழ்ச்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. திருடர்களாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதுபோல், அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் சாதாரண மக்களுக்கு எதிராகச் செய்யும் திருட்டை, பாதகச் செயலை நிறுத்தாவிட்டால் அநீதி ஓய்வதற்கு வாய்ப்பில்லை. பிறகு இறைவன்தான் அவர்களுக்கு நீதி வழங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும்
சிந்தனை
‘பொருளாசையே எல்லாத் தீமைகளுக்கு ஆணிவேர் (1திமொ 6:10) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் உலக செல்வங்களின் மீது ஆசை, பற்று வைக்காமல், இறைவன்மீது பற்று வைத்து வாழ்வோம். ஏழைகளுக்கு எதிராக அநீதி இழக்காமல், அவர்களுக்கு நல்லது செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.