தவக்காலம் – மூன்றாம் ஞாயிறு: மனமாறுவோம் புதுவாழ்வு பெறுவோம்

தவக்காலத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைக்குள் நுழைகின்றோம். மனமாற்றம் என்ற மையக்கருத்தை அடிப்டையாகக் கொண்டே இன்றைய மூன்று வாசகங்களும் சுழன்று வருகின்றன. அதிலும் சிறப்பாக, தனிப்பட்ட ஒரு மனிதருடைய மனமாற்றம்தான் அவர் சார்ந்துள்ள ஒட்டுமொத்த சமுதாயத்தையும் காப்பாற்றும் என்ற முக்கிய கருத்தையும் முன்வைக்கின்றன இன்றைய வாசகங்கள்.

நான் யார், நான் எதை நோக்கிப் பயணிக்கின்றேன், நான் யாருக்காகப் பயணிக்கின்றேன், என் பாதை சரியானதுதானா என்ற கேள்விகளை எழுப்பி, நம்மை சரியான பாதையில் நடத்திச்செல்வதுதான் உண்மையான மனமாற்றம் என்று மனமாற்றத்தை நாம் வரையறை செய்யலாம். சங்கிலித் தொடர்போன்று நாம் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கின்றோம். ஒருவர் செய்யும் நற்காரியங்கள் அவரைச் சார்ந்துள்ள எல்லாருக்கும் கிடைப்பதுபோல, ஒருவர் செய்யும் தீமையும் அவரைச் சார்ந்துள்ள அனைவரையும் பாதிக்கும் என்பது திண்ணம். இருள்நிறைந்த வாழ்விலிருந்து ஒளிநிறைந்த வாழ்விற்குள் நுழைவதையும், தீமையான வாழ்விலிருந்து நன்மையான வாழ்விற்குள் நுழைவதையும், தன்னலத்திலிருந்து பிறர்நலத்திற்குக் கடந்து செல்வதையும் ‘மனமாற்றம்’ என்று நாம் அடையாளப்படுத்தலாம்.

பொதுவாக, மனமாற்றம் என்பது தனிமனிதருடைய மாற்றத்தை மையப்படுத்தியதாகவே அமைகின்றது என்பதை நாம் கருத்தில் கொள்வது நல்லது. உரோமை பேரரசர் கான்ஸ்டன்டைன் பெற்ற மனமாற்றம்தான், கிறித்தவர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட வேதகலாபனைகளை முடிவுக்குக் கொண்டு வந்தது. கிறிஸ்தவர்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்த சவுலின் மனமாற்றம்தான், இந்தத் திருஅவையின் வளர்ச்சிக்கான வித்தாக அமைந்தது. இயேசு சபையின் நிறுவுநர் புனித இலயோலா இஞ்ஞாசியாரின் மனமாற்றம்தான், கத்தோலிக்கத் திருஅவையை உடைக்க விரும்பிய கால்வின், மார்ட்டின் லூத்தர் ஆகியோரிடமிருந்து அதனை காப்பாற்றியது. பெயரும் புகழும் பெறவேண்டும் என்ற இவ்வுலகத்தின் மதிப்பீடுகளுக்குள் புதைந்துபோயிருந்த புனித சவேரியாரின் மனமாற்றம்தான், அளவிட முடியாத ஆன்மாக்களை ஆண்டவர் இயேசுவிடம் கொண்டுவந்து சேர்த்தது. எல்சால்வதோர் நாட்டில் இயேசுசபை அருள்பணியாளார் ரொத்திலியோ கிராந்தே அவர்களின் கொடூர மரணத்தைப் பார்த்தபிறகு மனமாற்றம் பெற்ற பேராயர் ஆஸ்கர் ரோமெரோ அவர்கள், தன் இன்னுயிரைக் கொடுத்து இன்று அம்மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வழிகாட்டியிருக்கிறார். இப்படியாகத் தனிமனிதரிடம் ஏற்பட்ட மனமாற்றத்திற்கான வரலாற்றை நாம் விவரித்துக்கொண்டே போகலாம். இன்றைய முதல் வாசகம், மோசேயின் மனமாற்றம் குறித்துப் பேசுகிறது. மோசே மதியான் தேசத்தில் மாமனாரின் ஆடுகளை மேய்த்துக்கொண்டு அவர் மகள் ஒருவரை மனைவியாக்கிக்கொண்டு மகிழ்ச்சியோடு வாழ்ந்துகொண்டிருந்தார். அவர் எகிப்தில் வாழ்ந்தபோது அவருக்கு நிகழ்ந்த அனுபவம் அவர் உள்ளத்தில் பயத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், முட்செடி அனுபவம் மோசேயை முற்றிலுமாக மனமாற்றியது. பாஸ்கா என்ற கடத்தல் நிகழ்வைப்போல மோசே தன்னலத்திலிருந்து கடந்து பிறர்நலத்திற்குள் நுழைகின்றார். அவர் ஒருவருடைய மனமாற்றம் எகிப்தில் அடிமை நிலையில் உழன்றுகொண்டிருந்த ஒட்டுமொத்த இஸ்ரயேல் மக்களையும் காப்பாற்றியது.

ஆனால், இன்றைய உலகம் வேறு பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றது. மண்ணாசையும், பொன்னாசையும், பதவி வெறியும் மனிதரைவிட்டு அகன்றபாடில்லை. கடந்த கால உலக வரலாற்றை வாசிக்கும்போது, இரக்கமற்ற அரக்க மனம் கொண்ட பல தலைவர்கள் மனமாற்றம் பெறாததால் மனிதம் வீழ்ந்துபோனது என்பதையும் அறிய வருகிறோம். ஹிட்லர், முசோலினி, இடியமீன் போன்றோர் இதற்கு மாபெரும்  எடுத்துக்காட்டுகளாக இருக்கின்றனர். இவர்களில் ஹிட்லர் என்பவர் மனித வரலாற்றில் என்றுமே அழிக்க முடியாத கறையாகப் படிந்துவிட்டார். ஹிட்லர் மனித இனத்தின் தோலில் அமர்ந்து ஒரு தீய அசுரனாக வலம் வந்தார். 6 மில்லியன் யூதர்களை அழித்தது உட்பட, இதுவரைப் பதிவு செய்யப்படாத மனிதர்களுக்கு எதிரான மிகக் கொடூரமான குற்றங்களை அரங்கேற்றியவர். அவர் நாடுகளை அழித்தொழிக்கத் திட்டமிட்டார், மேலும் மனித இனத்தின் பெரும்பகுதியை அடிமைகளாக மாற்றினார். அவர் தனது சொந்த மக்களை ஏமாற்றி, அவர்தான் ஜெர்மனியின் கடைசி நம்பிக்கை என்று அவர்களை நம்ப வைத்தார். உண்மையில் ஜெர்மனியின் பொருளாதார மற்றும் இராணுவ சக்தியை தனது தீய சித்தாந்தத்தைப் பரப்புவதற்காகவே அவர் பயன்படுத்த விரும்பினார். அவர் ஜெர்மனியர்களை ஏமாற்றி ஒரு பைத்தியக்காரச் சித்தாந்தத்தின் பெயரில் அவர்களின் நாட்டை நாசமாக்கினார். மனித இனத்தைக் கொடூரமாக அழித்தவர்களும், தன்னை யாருமே வீழ்த்த முடியாது என்று வீரவசனம் பேசியவர்களும் இறுதியில் வீழ்ந்து போனதாகத்தான் வரலாறும் பதிவு செய்திருக்கின்றது. ஹிட்லர், முசோலினி, நெப்போலியன் போன்றோர் எப்படி வீழ்ந்தார்கள் என்பதை நாம் நன்கு அறிவோம். இன்றைய இரண்டாம் வாசகத்தில், “தாம் நிலையாக நிற்பதாக நினைத்துக் கொண்டிருப்பவர் விழுந்து விடாதபடி பார்த்துக் கொள்ளட்டும்” (1 கொரி 10:12) என்று மக்களை எச்சரிக்கின்றார் புனித பவுலடியார்.

Comments are closed.