புனித யோசேப்பு, துறவியர், அருள்பணியாளர்களுக்கு முன்மாதிரிகை
புனித யோசேப்பு திருநாள் சிறப்பிக்கப்படும்வேளை, புனித அகுஸ்தீன் சபை பேரவைப் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் வளர்ப்புத் தந்தையான புனித யோசேப்பு, கிறிஸ்தவர்களுக்கு முன்மாதிரிகை மற்றும், அவரது தந்தைக்குரிய இதயத்தாலும், படைப்பாற்றல்மிக்க துணிச்சலாலும் கவரப்படுகின்றனர் என்று கூறினார்.
ஒன்றிணைந்த பயணம்
அவர்கள் வாழ்வுபெறும்பொருட்டு நான் இவ்வுலகிற்கு வந்தேன் என்ற தலைப்பில் இப்பொதுப்பேரவையை நடத்திவரும் பிரதிநிதிகளிடம், இந்நாள்களில் திருஅவை முழுவதும் ஒன்றிணைந்த பயணத்தின் பாதையை மேற்கொண்டுவருகிறது என்றும், நம் கண்களையும், இதயங்களையும் இயேசுவின் மீது பதித்து ஒன்றிணைந்து எப்போதும் முன்னோக்கி நடக்கும் காலம் இது என்றும் திருத்தந்தை எடுத்தியம்பினார்.
ஒன்றிணைந்த பயணத்திற்கு புனித யோசேப்பை முன்மாதிரியாகக் கொள்வோம் என்றும், அர்ப்பணிக்கப்பட்ட ஒவ்வொரு துறவியும், அருள்பணியாளரும், புனித யோசேப்பு போன்று தந்தையின் இதயத்தைக் கொண்டிருப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் திருத்தந்தை கூறினார்.
ஒவ்வொரு நாளும் கடவுள் பக்கம் நம்பிக்கையோடு திரும்புவதை நாம் விட்டுவிடக் கூடாது எனவும், அவர் நம் இதயங்களின் ஆசைகளுக்கும் ஏக்கங்களுக்கும் செவிசாய்க்கிறார் எனவும் உரைத்த திருத்தந்தை, புனித யோசேப்பின் படைப்பாற்றல்மிக்க துணிச்சல் பற்றியும் விளக்கினார்.
Comments are closed.