நம்பிக்கையை எந்த ஆயுதத்தாலும் கொலைசெய்ய முடியாது
துயரங்கள் மற்றும், வேதனைகளால் நிறைந்துள்ள காலக்கட்டத்திலும்கூட நம்பிக்கை இழக்காமல் இருக்கமுடியும் என்பதற்கு, ஐரோப்பா மற்றும், மனித சமுதாயம் ஆற்றிவரும் தோழமையுணர்வுச் செயல்கள் சான்றாக உள்ளன என்று, உலகளாவிய காரித்தாஸ் நிறுவனத்தின் தலைவர் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் கூறினார்.
உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர் குறித்து வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டியளித்த, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவருமான கர்தினால் தாக்லே அவர்கள், எந்தவோர் ஆயுதத்தாலும் நம்பிக்கையை கொலைசெய்ய முடியாது என்பதை வலியுறுத்திக் கூறினார்.
குண்டுவீச்சுக்களுக்கு மத்தியில், உக்ரைன் காரித்தாஸ் மற்றும், உக்ரைன் காரித்தாஸ் Spes அமைப்புகளின் பணியாளர்கள், மக்களுக்கு ஓய்வின்றி பணியாற்றி வருகின்றனர் என்றும், உக்ரைனில் போர் தொடங்கியதிலிருந்து, ஒரு இலட்சத்து அறுபதாயிரத்திற்கு மேற்பட்ட மக்களுக்கு காரித்தாஸ் அமைப்புகள் உதவியுள்ளன என்றும் கர்தினால் தாக்லே அவர்கள் குறிப்பிட்டார்.
ஐரோப்பாவிலுள்ள அனைத்து காரித்தாஸ் அமைப்புகள், குறிப்பாக பெருமெண்ணிக்கையில் புலம்பெயர்ந்தோரை வரவேற்றுள்ள போலந்து, ருமேனியா, மோல்டோவா, ஹங்கேரி, சுலோவாக்கியா ஆகிய நாடுகளின் காரித்தாஸ் அமைப்புகள், சிறப்பான சேவைகளை ஆற்றி வருகின்றன என்றும் கர்தினால் கூறினார்.
மனித சமுதாயம் கடந்த ஈராண்டளவாக கோவிட்-19 பெருந்தொற்று பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது, தற்போது உக்ரைன் மீது இரஷ்யா நடத்திவரும் போர் புதியதோர் உலகப் போருக்குக் காரணமாகுமோ என்ற அச்சம் நிலவுகிறது, இச்சூழலில் நம்பிக்கையை எங்கே காண்பது என்ற கேள்விக்கும் கர்தினால் தாக்லே அவர்கள் பதிலளித்தார்.
கிறிஸ்தவர்கள் என்ற முறையில் நாம் எப்போதும் நம்பிக்கையை கடவுள் மீது வைக்கவேண்டும், இத்தவக்காலத்தில் வாசிக்கப்படும் திருப்பலி வாசகங்கள் இயேசு கிறிஸ்துவில் நம் நம்பிக்கையைப் புதுப்பிப்பதற்கு அழைப்புவிடுக்கின்றன என்று கர்தினால் தாக்லே அவர்கள் எடுத்துரைத்தார்.
புலம்பெயர்ந்தோருக்கு மனிதர்கள் வெளிப்படுத்தும் நன்மைத்தனத்தில் நாம் நம்பிக்கையின் அடையாளங்களைக் காண்கிறோம் என்றும் கர்தினால் தாக்லே அவர்கள் கூறினார்.
Comments are closed.