இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயித்தெழுந்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,
“சற்றுக் கேளுங்கள். நாளைக்கு உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதே! நொடிப்பொழுதில் தோன்றி மறையும் புகை போன்றவர்கள் நீங்கள்.” என திருத்தூதர் யாக்கோபு கூறியதை வாசித்தோம்.
நாளைய தினத்தைப் பற்றி கவலை கொள்ளாமல், எல்லாம் இறைவன் சித்தப்படி என நாம் நம்பிக்கையுடன் இருக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,
“நன்மை செய்ய ஒருவருக்குத் தெரிந்திருந்தும் அவர் அதைச் செய்யாவிட்டால், அது பாவம்.” என யாக்கோபு கூறுகிறார்.
பிறருக்கு நன்மை செய்வதில் முழு மனதோடும், ஆர்வத்துடனும் நாம் எப்பொழுதும் இருக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 49:6-ல்,
“தம் செல்வத்தில் நம்பிக்கை வைத்திருக்கின்றவரோ தம் செல்வப் பெருக்கைக் குறித்துப் பெருமையாகப் பேசுகின்றனர்.” என கூறப்பட்டுள்ளதை நாம் வாசித்தோம்
நாம் ஒரே நேரத்தில் செல்வத்துக்கும், இறைவனுக்கும் பணி செய்ய இயலாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்திக்கு முன் வாழ்த்தொலியில்,
“ஆண்டவர் கூறுகிறார்: வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.” என வாசித்தோம்.
இயேசு கிறிஸ்துவின் வழியில் இருந்து ஒரு நாளும் பிறழாது அனைவரும் அவர் வழியில் தொடர்ந்து நடக்க வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
மறைசாட்சியாக மரித்தவரும், இன்றைய புனிதருமான புனித பொலிகார்ப் காது வலி மற்றும் காது பிரச்சனைகளில் அவதியுறுபவர்களின் பாதுகாவலராவார்.
காது பிரச்சனைகளில் துன்புறுவோர் அவற்றிலிருந்து பூரண நலம் பெற புனித பொலிகார்ப் வழியாக நாம் இறைவனை மன்றாட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

Comments are closed.