இன்று உங்களுக்காக மீட்பர் பிறந்திருக்கிறார்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-14
அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார். அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது. தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர். தாவீதின் வழிமரபினரான யோசேப்பும் தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார். அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. மரியா தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.
அப்பொழுது அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் இடையர்கள் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடையைக் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று ஆண்டவருடைய தூதர் அவர்கள்முன் வந்து நின்றபோது ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது; மிகுந்த அச்சம் அவர்களை ஆட்கொண்டது. வானதூதர் அவர்களிடம், “அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்” என்றார்.
உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து, “உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!” என்று கடவுளைப் புகழ்ந்தது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————————-
“ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்”
ஆண்டவருடைய பிறப்பு
i எசாயா 9: 2-4, 6-7
II தீத்து 2: 11-14
III லூக்கா 2: 1-14
“ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்”
நிகழ்வு
முன்பொரு காலத்தில் மாமன்னர் ஒருவர் இருந்தார். அவர் இரவு நேரங்களில் மாறுவேடம் பூண்டு, நகர்வலம் செல்வார். அப்படி அவர் செல்லும்போது, மக்கள் அரசாங்கத்தைப் பற்றிச் சொல்லக்கூடிய குறைகளைக் கருத்தில் எடுத்துக்கொண்டு, அவற்றை நிவர்த்தி செய்வார். இவ்வாறு அவர் மக்களுக்குப் பொற்கால ஆட்சியை வழங்கினார்.
ஒருமுறை அவர் நகர்வலம் சென்றிருந்தபோது, ஒரு குடிசையில் மூதாட்டி ஒருத்தி தனியாக இருக்கக் கண்டார். மூதாட்டியோடு அவர் பேசும்போதுதான் தெரிந்தது, அவர் தன் கணவராலும் பிள்ளைகளாலும் கைவிடப்பட்டவர் என்பது. இதனால் மாறுவேடத்தில் இருந்த மாமன்னர் மூதாட்டியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று, அவரோடு பேசினார்; அவர் கொடுத்த உணவினை உட்கொண்டார்.
இப்படி இருக்கையில், ஒருநாள் மாமன்னர் மூதாட்டியிடம் தான் யார் என்பதை வெளிப்படுத்த முடிவுசெய்தார். அதனால் அவர் மூதாட்டியிடம், “இத்தனை நாள்களும் நான் உங்களுடைய வீட்டிற்கு வருகின்றேனே! நான் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்றார். மூதாட்டி, “தெரியாது” என்று பதில் சொன்னதும், மாமன்னர் அவரிடம், “நான்தான் இந்நாட்டு மன்னர்” என்றார். ‘இத்தனை நாள்களும் என்னுடைய வீட்டிற்கு மன்னர்தான் வந்திருக்கின்றாரா?’ என்று மூதாட்டி அவரை வியந்து பார்த்துக்கொண்டிருக்கையில், மாமன்னர் அவரிடம், “அம்மா! உங்களுக்கு ஒரு பரிசு தரப்போகிறேன். அதனால் நீங்கள் என்ன வேண்டுமானாலும் கேளுங்கள், தருகின்றேன்” என்றார். அதற்கு மூதாட்டி, “ஒவ்வொரு நாளும் என்னைத் தேடி வந்து, என்னிடத்தில் ஆறுதலாகப் பேசி, நான் கொடுத்த மிகச் சாதாரண உணவினையும் உண்டு வந்தீர்களே! இதைவிடவா பெரிய பரிசு எனக்கு வேண்டும்?” என்று மகிழ்ச்சி பொங்கப் பதில் சொன்னார்.
ஆம், மாமன்னர் ஒரு சாதாரண மூதாட்டியைத் தேடி வந்தார். ஆண்டவர் இயேசு ஒரு சிறு குழந்தையாக நம்மைத் தேடி வந்திருக்கின்றார். அதைத்தான் இன்று நாம் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவாகக் கொண்டாடுகின்றோம். மகிழ்ச்சி பொங்கும் இந்நேரத்தில், இப்பெருவிழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்திப்போம்.
என்றுமுள தந்தையே குழந்தையாய் வரல்
குழந்தைக்காக ஏங்குவோர் இங்கு எத்தனையோ பேர் உண்டு. ஏறாத கோயிலெல்லாம் ஏறி, வேண்டாத சுவாமியை எல்லாம் வேண்டி, செய்யாத தவமெல்லாம் செய்து ஒரு குழந்தைக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்கள் ஏராளமான பேர் உண்டு. இவர்களுக்கு ஒரு குழந்தை, அதுவும் ஆண் மகவு பிறந்திட்டால், அந்த மகிழ்ச்சியை வார்த்தையால் விவரித்துச் சொல்ல முடியாது.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், “ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண் மகவு நமக்குத் தரப்பட்டுள்ளது” என்கிறது. மேலும் இக்குழந்தையின் திருப்பெயர் வியத்தகு ஆலோசகர், வலிமை மிகு இறைவன், என்றுமுள்ள தந்தை, அமைதியின் அரசர் என்று அழைக்கப்படும் என்கிறது. என்றுமுள்ள தந்தையே ககுழந்தையாகப் பிறந்திருக்கின்றார் எனில் அல்லது பிறந்திருக்கும் குழந்தை என்றுமுள்ள தந்தை எனில், அவர் தன் மக்கள்மீது எத்துணை அன்பாய் இருப்பார் என்பதை நாம் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம்.
பிறந்திருக்கும் குழந்தை என்றுமுள்ள தந்தையாய் இருப்பார் எனில், அவர் பிள்ளைகளாகிய நமக்கு எத்தகைய ஆசிகளையெல்லாம் தருவார் என்பதைப் பற்றி எடுத்துக்கூறுகின்றது இன்றைய நற்செய்தி வாசகம்.
உணவாய் வந்த இயேசு
“கடவுள் இவ்வுலகிற்கு வந்தார் எனில், ரொட்டியாய்த்தான் வருவார்” என்று காந்தியடிகள் ஒருமுறை குறிப்பிட்டார். காந்தியடிகள் இவ்வார்த்தைகளைக் குறிப்பிடுவதற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கடவுளும் என்றுமுள்ள தந்தையுமான இயேசு ரொட்டியாக, உணவாக வந்துவிட்டார். எப்படியெனில், விடுதியில் இடம் கிடைக்காத நிலையில், இயேசுவைப் பெற்றெடுத்த மரியா, அவரைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடைத்துகின்றார். தீவனத் தொட்டி என்பது மாடுகள் உணவு உண்ணும் இடம். இயேசு துணிகளில் பொதியப்பட்டுத் தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டார் என்பதன் மூலம், அவர் இந்த உலகிற்கு வந்தார் என்பது அடையாளமாகச் சொல்லப்படுகின்றது.
இதையேதான் பின்னாளில் இயேசு, “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே” (யோவா 6:51) என்கிறார். இயேசு இத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், பசியோடு இருந்த மக்களுக்கு உணவுகிடைக்கும் வகையில், “நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என்று தம் சீடர்களிடம் சொல்வதன் மூலம், தன்னுடைய இடத்தில் இருந்து, ஒவ்வொருவரும் பசியோடு இருக்கும் மக்களுக்கு உணவு கொடுத்து, அவர்களது பசியினைப் போக்கவேண்டும் என்ற அழைப்பினைத் தருகின்றார்.
மேலும் இயேசுவின் பிறப்பின்போது விண்ணத் தூதரணி, “….. உலகில் அவருக்கு உகந்தவருக்கு அமைதி உண்டாகுக” என்று பாடியதாலும், இன்றைய முதல் வாசகம், பிறந்திருக்கும் குழந்தையின் திருப்பெயர் அமைதியின் அரசர் என்று என்று கூறுவதாலும், இயேசு தன்மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு உணவாக வந்தது மட்டுமல்லாமல், அமைதியை அருள வந்தார் என்றும் சொல்லலாம்.
ஒவ்வொருவரும் நற்செய்தியில் ஆர்வமுள்ளவர்களாக இருக்க அழைப்பு
என்றுமுள்ள தந்தையாய் நம்மீது பேரன்புகொண்ட இயேசு, இவ்வுலகிற்கு உணவாய் வந்தார், அமைதியைத் தந்தார் என்று இன்றைய நற்செய்தி வாசகம் கூறுகின்ற அதே வேளையில், இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல், “அவர் (இயேசு) நம்மை எல்லா நெறிகேடுகளிலிருந்தும் மீட்டு, நற்செயல்களில் ஆர்வமுள்ள தமக்குரிய மக்களாகத் தூய்மைப்படுத்த தம்மையே ஒப்படைத்தார்” என்கிறார். எனில், நாம் ஒவ்வொருவரும் நற்செயல்களில் ஆர்வமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதே நமக்குக் கொடுக்கப்படும் அழைப்பாக இருக்கின்றது.
நாம் நற்செயல்களில் ஆர்வமுள்ளவர்களாய் இருக்கவேண்டும் என்றால், நாம் ஆண்டவரோடு ஒன்றித்திருக்கவேண்டும். ஏனெனில், இயேசு, தந்தைக் கடவுளோடு ஒன்றித்திருந்ததால்தான் அவரால் சென்ற இடங்களில் எல்லாம் நன்மை செய்ய முடிந்தது. அதனால் நாம் ஒவ்வொருவரும் ஆண்டவரோடு ஒன்றித்திருக்கவேண்டும். அப்போதுதான் நம்மால் நற்செயல்களில் ஆர்வமுள்ளவர்களாய் இருக்க முடியும்.
ஒரு பெரிய உணவகத்தில் இருவர் உணவுண்டு மகிழ்ந்து கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்கள் இருவருக்கும் அறிமுகமான ஒருவர் அங்கு வந்தார். அவர் அங்கிருந்த ஒருவரைப் பார்த்து, “இன்றைக்கு என்ன சிறப்பு, ஒரே அமர்க்களமாக இருக்கின்றதே?” என்றார். அதற்கு அந்த மனிதர், “இன்றைக்கு என் மகனுடைய பிறந்தநாள். அதனால்தான் இந்த ஏற்பாடு!” என்றார். “உங்களுடைய மகனுக்குப் பிறந்த நாளா, அப்படியானால் அவன் எங்கே?’ என்று கேட்டதற்கு, அந்த மனிதர், “அவன் வீட்டில் இருக்கின்றான்” என்று அசடு வழியப் பதில் சொன்னார். அப்போது வந்தவர் அவரிடம், “பிறந்த நாள் கொண்டாடும் மகனை வீட்டில் வைத்துக்கொண்டு, இங்கே அமர்க்களமாக எல்லா ஏற்பாடுகளையும் செய்திருப்பது உங்களுக்கு அபத்தமாகத் தெரியவில்லையா?” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
ஆம், பிறந்த நாள் கொண்டாடும் மகன் உடன் இல்லாமல் பிறந்த நாள் கொண்டாடுவது எவ்வளவு பெரிய அபத்தமோ, அவ்வளவு பெரிய அபத்தம் நாம் இயேசுவோடு ஒன்றித்திருக்காமல், அவருடைய விழுமியங்களைக் கடைப்பிடிக்காமல் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைப் கொண்டாடுவது! கிறிஸ்து இவ்வுலகிற்கு உணவாய் வந்தார் எனில், நாம் பசியோடு இருப்பவர்களின் பசியைப் போக்க வேண்டும். இயேசு இவ்வுலகிற்கு அமைதியின் அரசராய் வந்தார் எனில், நாம் இவ்வுலகில் அமைதியை ஏற்படுத்த உழைக்க வேண்டும். இயேசு நம்மை நற்செயல்களில் ஆர்வமுள்ளவர்களாக இருக்க அழைக்கின்றார் எனில், நாம் நற்செயல்களில் ஆர்வமுள்ளவர்களாய் இருக்கவேண்டும். இவ்வாறு நாம் வாழும்போது மட்டுமே கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவை அர்த்தமுள்ளதாக்க முடியும்.
சிந்தனை:
‘கிறிஸ்மஸ் என்பது ஒரு காலம் அல்ல, அது ஓர் உணர்வு’ என்பார் எண்டா பெர்பர் என்ற எழுத்தாளர். எனவே, நாம் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் வந்து போகும் ஒரு சாதாரண நிகழ்வாக மட்டும் பார்க்காமல், அதை ஓர் உணர்வாக, இயேசுவின் விழுமியங்களைக் கடைப்பிடித்து வாழக்கூடிய ஒரு தருணமாக பார்த்து, கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.