டிசம்பர் 28 : நற்செய்தி வாசகம்

ஏரோது பெத்லகேமில் எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-18.
ஞானிகள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, “நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான்” என்றார்.
யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார். ஏரோது இறக்கும்வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு, “எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்” என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது.
ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றங்கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கேற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்.
அப்பொழுது “ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது; ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது; இராகேல் தன் குழந்தைகளுக்காக அழுதுகொண்டிருக்கிறார்; ஆறுதல் பெற அவர் மறுக்கிறார்; ஏனெனில் அவர் குழந்தைகள் அவரோடு இல்லை” என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது நிறைவேறியது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————
“ஆண்டவர் நம் சார்பாக இருக்கின்றார்”
புனித மாசில்லா குழந்தைகள்
I 1 யோவான் 1: 5- 2: 2
II மத்தேயு 2: 13-18
மாசற்ற இயேசு கிறிஸ்து
ஒரு மருத்துவரையே மாற்றிய சிறுமி:
உயிரைக் காப்பாற்றுவதற்கு அறுவைச் சிகிச்சை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில், ஒரு சிறுமி அறுவைச் சிகிச்சை நடைபெறும் அறைக்குக் கொண்டு வரப்பட்டாள்.
அச்சிறுமிக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள இருந்த மருத்துவர் அவரிடம், “இன்னும் சிறிது நேரத்துக்குள் உனக்கு நான் அறுவைச் சிகிச்சை செய்யப்போகிறேன். அதனால் நீ இந்த மேசையில் நன்றாகப் படுத்துத் தூங்கு” என்றார். மருத்துவர் இவ்வாறு சொன்னதும், சிறுமி அவரிடம், “நான் தூங்குவதற்கு முன் சிறிதுநேரம் கடவுளிடம் வேண்டிக் கொள்ளட்டுமா? ஏனெனில், நான் தூங்குவதற்கு முன்பு வழக்கமாகக் கடவுளிடம் வேண்டுவேன்” என்றாள்.
சிறுமி சொன்ன வார்த்தைகள் மருத்துவரின் உள்ளத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. காரணம், இறைவேண்டல் என்றால் என்ன என்பதும், இறைவேண்டலின் வல்லமை என்ன என்பதும் அந்த மருத்துவர் அறியாது இருந்தார். இத்தகைய வேளையில்தான் சிறுமி தூங்குவதற்கு முன்பாக இறைவனிடம் வேண்டிக் கொள்கின்றேன் என்று சொல்லியிருந்தாள். இதனால் அந்த மருத்துவர் இறைவேண்டல் செய்து, சிறுமிக்கு அறுவைச் சிகிச்சை செய்தார். அது வெற்றிக்கரமாக முடிந்ததும், சிறுமியைப் போன்று ஒவ்வோர் இரவும் தூங்கச் செல்வதற்கு முன்பு இறைவனிடம் வேண்டினார். ஏன், ஒவ்வோர் அறுவைச் சிகிச்சைக்கு முன்பும் அவர் இறைவனிடம் வேண்டிவிட்டுத்தான் அறுவை சிகிச்சை செய்தார்.
ஆம், குழந்தைகள் மாசற்றவர்கள். அதனாலேயே அவர்கள் பலவிதங்களிலும் பலருக்கும் முன்மாதிரியாக இருக்கின்றார்கள். இன்று நாம் புனித மாசில்லாக் குழந்தைகளின் நினைவு நாளைக் கொண்டாடுகின்றோம். இந்த நாள் நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
ஒருவரிடம் பதவி வெறி இருக்கின்ற பட்சத்தில், அவர் தீமையின் எந்த எல்லைக்கும் போவார் என்பது மிகப்பெரிய எடுத்துக்காட்டாக இருப்பவன்தான் ஏரோது மன்னன். தன்னுடைய குடும்பத்தாரிடமிருந்து தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்பதற்காக அவர்களைக் கொன்றொழித்த ஏரோது, யூதர்களின் அரசராகப் பிறந்திருந்த இயேசுவிடமிருந்து தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்பதற்காக அவரைக் கொல்ல முயன்றதில், அல்லது பெத்லகேமிலும் அதன் சுற்றுப் புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றதில் வியப்பேதும் இல்லை.
இந்த ஏரோதுவைப் போன்றுதான் இன்று எத்தனையோ எரோதுகள் தன்னலத்திற்காக அப்பாவிக் குழந்தைகளைக் குழந்தைகளைக் கொல்வதும், அவர்களைத் தங்களது ஆசைக்குப் பயன்படுத்திக் கொள்வதுமாய் இருக்கின்றார்கள். தீர்ப்பு நாளில் இத்தகையோருடைய முடிவு மிகக் கொடுமையாக இருக்கும் என்பதில் எந்தவோர் ஐயமுமில்லை.
புனித மாசில்லாக் குழந்தைகளின் நினைவுநாளைக் கொண்டாடுகின்ற இந்த நாளில், இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிப்பது போல், மாசற்றவரும் ஒளியுமானவருமான இயேசுவைப் போன்று நாம் இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் அவரோடு நட்பு கொண்டிருக்க முடியும். இதை நாம் கவனத்தில் இருத்தி வாழ்வது நல்லது.
சிந்தனைக்கு:
 ஒரு சமூகத்தின் வளர்ச்சி, அச்சமூகம் குழந்தைகளின் நலனில் எந்தளவுக்கு அக்கறை காட்டுகின்றது என்பதைப் பொறுத்து உள்ளது.
 குழந்தை உள்ளம் கொண்டவர்களுக்கே இறையாட்சி உரித்தானது என்பதால், நாம் குழந்தைகளைப் போன்று மாற்றவர்களாய் இருப்போம்.
 தூய்மையான உள்ளத்தோரால் மட்டுமே கடவுளைக் காண முடியும் என்பதால் நாம் தூய்மையான உள்ளத்தோராய் வாழ்வோம்.
ஆன்றோர் வாக்கு:
‘குழந்தைகளோடு இருக்கும்போது ஆன்மா தூய்மையடைகின்றது’ என்பார் பியோதர் தாஸ்தாவெஸ்கி. ஆகையால், நாம் குழந்தைகளோடு இருப்போம, குழந்தைகளாய் இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.