நவம்பர் 19 : நற்செய்தி வாசகம்

நீங்கள் என் இல்லத்தைக் கள்வர் குகையாக்கினீர்கள்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 45-48
அக்காலத்தில்
இயேசு கோவிலுக்குள் சென்று அங்கு விற்பனை செய்து கொண்டிருந்தோரை வெளியே துரத்தத் தொடங்கினார். அவர்களிடம், “ ‘என் இல்லம் இறைவேண்டலின் வீடு’ என்று மறைநூலில் எழுதியுள்ளதே; ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கினீர்கள்” என்று கூறினார்.
இயேசு ஒவ்வொரு நாளும் கோவிலில் கற்பித்து வந்தார். தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் மக்களின் தலைவர்களும் அவரை ஒழித்துவிட வழி தேடினார்கள். ஆனால் என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. ஏனென்றால் மக்கள் அனைவரும் அவர் போதனையைக் கேட்டு அவரையே பற்றிக்கொண்டிருந்தனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————–
கோயில் – எல்லார்க்குமான இறைவேண்டலின் வீடு
நிகழ்வு
பல ஆண்டுகட்கு முன்பு தெற்குப் பசிபிக் கடலில் சென்றுகொண்டிருந்த ஒரு கப்பல் பனிப்பாறையின்மீது மோதி உடைந்துபோனது. அதில் பயணம் செய்த பலர் உயிரிழந்தனர்; ஒருசிலர் மட்டுமே ஒரு தீவினில் ஒதுங்கி உயிர்தப்பினர். அந்தத் தீவும்கூட மனித மாமிசம் சாப்பிடுபவர்கள் (Cannibals) அதிகமாக வாழும் ஒரு தீவு என்று அவர்கட்குத் தெரிந்ததும், அவர்கள் அதிர்ந்துபோனார்கள்.
அப்பொழுது அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவர், “அதோ ஒரு மலை இருக்கின்றது பாருங்கள! அந்த மலைக்கு நம்மில் ஒருவரை அனுப்பிவைப்போம். அவர் அந்த மலைமேல் ஏறி, மனித மாமிசம் சாப்பிடுபவர்கள் எந்தப் பகுதியில் இல்லையென்று பார்த்துவிட்டு வரட்டும். அதன்பிறகு நாம் செல்வோம். எப்பொழுது இந்தப் பகுதி வழியாகக் கப்பல் வருகின்றதோ, அதுவரைக்கும் நாம் அங்கு இருப்போம்” என்றார். எல்லாரும் அதற்குச் சம்மதிக்கவே, அவர்களில் ஒருவர் சற்றுத் தொலைவில் தெரிந்த அந்த மலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அவர் அந்த மலையின் உச்சியில் ஏறிப் பார்த்தபோது மிகவும் ஆச்சரியப்பட்டார். ஆம், அங்கு ஒரு திருக்கோயில் இருந்தது. அதைப் பார்த்துதான் அவர் மிகவும் ஆச்சரியப்பட்டார். அப்பொழுது அவர் தன்னோடு வந்தவர்கட்குச் சைகை காட்டி, “இங்கொரு கோயில் இருக்கின்றது; கோயில் இருப்பதால் இவர்கள் இப்பொழுது மனித மாமிசம் சாப்பிடுபவர்களாக இருக்க வாய்ப்பில்லை” என்று உரக்கக் கத்தினார். உடனே அந்தக் குழுவில் இருந்த இருந்தவர்கள், அந்தத் தீவுக்குள் சென்று, எந்தவோர் அச்சமின்றித் தங்கினார்கள். அவர்கள் அங்கு தங்கியிருந்த நாள்களில் அவர்கட்கு அங்கிருந்த மனிதர்களிடமிருந்து எந்தவோர் ஆபத்தும் வரவில்லை. சில நாள்கள் கழித்து, அந்த வழியாக ஒரு கப்பல் வந்தது. அதில் அவர்கள் ஏறித் தங்களுடைய நாட்டிற்கு பாதுகாப்பாகத் திரும்பிச் சென்றார்கள்.
கோயில் – வெறும் கற்களால் கட்டப்பட்ட ஒரு கட்டடம் அல்ல; அது அரசர்கட்கெல்லாம் அரசராகிய ஆண்டவர் உடனுறையும் (பிரசன்னமாக இருக்கும்) ஓர் இல்லம்; அவருடைய ஆசியை அபரிமிதமாகப் பெற்றுத் தரும் இல்லம். அப்படிப்பட்ட ஓர் இல்லம் எங்கிருந்தாலும், அது அங்கிருப்பவர்கட்கு ஆசியையும் வாழ்வில் மாற்றத்தையும் கொண்டுவந்து தரும். மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் மனித மாமிசம் சாப்பிடுபவர்கள் சாதாரண மனிதர்களாக மாறியிருந்தார்கள் என்றால், அதற்கு முதன்மையான காரணம் அவர்கள் நடுவில் இருந்த கோயில் என்றால் அது மிகையில்லை.
இஸ்ரயேல் மக்களுடைய வாழ்விலும் எருசலேம் திருக்கோயில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும்! ஏற்படுத்தியிருக்க வேண்டும். அந்த மாற்றம் நிகழாததற்குக் காரணமென்ன…? இயேசு ஏன் எருசலேம் திருகோயிலில் வாணிபம் செய்தவர்களை விரட்ட்யடித்தார்…? என்பவற்றைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
கள்வர்குகையாக மாறிப்போன இறைவேண்டலின் வீடு
எருசலேம் திருக்கோவில், இறைவாக்கினர் எசாயா சொல்வதுபோன்று, ‘மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய ‘இறைமன்றாட்டின் வீடு’ (எசா 56: 7). அத்திருக்கோயில் இறைமன்றாட்டின் வீடாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அது இறைமன்றாட்டின் வீடாக, இல்லாமல் கள்வர் குகையாக (எரே 7:11), இன்னும் சொல்லப்போனால், திருக்கோயிலை மேலாண்மை (நிர்வாகம்) செய்துவந்த தலைமைக்குருக்கள் மட்டும் ஏனையோரின் தன்னலப்போக்கினால், வணிகத்தலமாக மாறிப்போனதால், இயேசு அங்கு வாணிபம் செய்துவந்தவர்களை விரட்டியடிக்கின்றார். உப்பு – கோயில்- உவர்ப்போடு இருக்கவேண்டும். அது சாரமற்றுப் போனால் அல்லது அதற்குரிய மாண்பினை இழந்தால், கடவுளின் சினத்திற்கு உள்ளாகவேண்டிய நிலைதான் ஏற்படும். எருசலேம் திருகோயிலில் அதுதான் நடந்தது.
இருளாக மாறிப்போன ஒளியாக இருக்கவேண்டிய யூதர்கள்
எருசலேம் திருக்கோயில் ஒரு குறிப்பட்ட மக்கட்கான இறைமன்றாட்டின் வீடு அல்ல; மக்களினங்கள் அனைத்திற்குரிய இறைமன்றாட்டின் வீடு என்று மேலே பார்த்தோம். அப்படியானால், அது எல்லாரும் மன்றாடுவதற்கான இடமாக இருந்திருக்கவேண்டும். இலாப நோக்கத்தோடு செயல்பட்ட எருசலேம் திருக்கோயிலை மேலாண்மை செய்துவந்தவர்களோ, புறவினத்தாருடைய இடத்தை வாணிபத்திற்குப் பயன்படுத்தி, அவர்களை வழிபாடு செய்யவிடாமல் தடுத்தார்கள். அதனால்தால் இயேசு அங்கு வாணிபம் செய்தவர்களை விரட்டி அடித்தார். இதில் இன்னொரு முக்கியமான உண்மை. யூதர்கள் எல்லார்க்கும் ஒளியாக இருக்கக் கடவுளால் அழைக்கப்பட்டிருந்தார்கள் (எசா 60:3) ஆனால், நடைமுறையில் அவர்கள் புறவினத்தாரை மனிதர்களாகக் கூட மதியாமல், அவர்களை வஞ்சித்தும் இன்னும் பல்வேறு செயல்களால் அவர்கட்கு இருளாக இருந்து வந்தார்கள். அதனாலும் இயேசு அவ்வளவு சினம்கொண்டு அவர்களை விரட்டியடிக்கின்றார்.
புனித பவுல் சொல்வது போன்று தூய ஆவியார் தங்கும் உயிருள்ள கோயிலாகிய நாமும்கூட (1 6:19 பிறர்க்கு ஒளியாக இருக்கவேண்டும். இருக்கவேண்டியது நம்முடைய கடமை. அப்படி நாம் இல்லாத பட்சத்தில் கடவுளின் சினத்திற்கு ஆளாவோம் என்பது உறுதி. ஆகையால், நம்முடைய நற்செயல்களால், நம்பிக்கை நிறைந்த வாழ்வினால் உயிருள்ள கோயிலாக இருந்து, பிறர்க்கு ஒளியாக இருக்க முயற்சி செய்வோம்.
சிந்தனை
‘கோயில் என்பது நற்செய்தி அறிவிப்புக்கான இடமாகவும் நற்செயல்கட்கான விளைநிலமாகவும் இருக்கவேண்டும். இவற்றில் ஏதாவது ஒன்று குறைந்தாலும் கோயில் தன்னுடைய மாண்பினை இழந்துவிடும்’ என்பார் ராபர்ட் டி.தேஹன் (Robert D. Dehann) என்ற எழுத்தாளர். ஆகையால், நாம் கோயில் என்பதை வெறும் கட்டடமாகப் பார்க்காமல், அது உயிருள்ள இறைவன் தங்கும் ஓர் இல்லம் என்பதை உணர்ந்து, அங்கிருந்து நற்செய்தியையும் நற்செயல் செய்வதற்கான உத்வேகத்தையும் பெற்று, உயிருள்ள கோயில்களாக விளங்குவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.