இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,
“தூய்மையானவற்றைத் தூய்மையாய்க் கடைப்பிடிப்போர் தூயோர் ஆவர்; தூய்மையானவற்றைக் கற்றுக் கொண்டோர் தங்கள் செயல்களை முறைப்படுத்த வழி காண்பர். ” என சாலமோன் ஞான நூலில் கூறப்பட்டுள்ளது.
ஆண்டவருக்கு உகந்த தூயதொரு வாழ்க்கையை நாம் வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்திக்கு முன் வாழ்த்தொலியில்,
“எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே.” என வாசித்தோம்.
வாழ்வில் துன்ப நேரங்களிலும் நன்றி சொல்லும் மனப்பக்குவத்தை இறைவன் நமக்குத் தந்தருள வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
“இயேசு அவரைப் பார்த்து, “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!” என்றார்” என வாசித்தோம்.
நமக்கு வாழ்வில் கிடைத்த கொடைகளுக்காகவும், ஆசீர்வாதங்களுக்காகவும் கடவுளுக்காக அனுதினமும் நன்றி சொல்ல வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் அவதியுரும் மக்கள் அனைவருக்கும் உரிய உதவிகள் விரைவில் கிடைக்கப் பெற வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
திருஅவையின் 16-வது மாமன்றமானது தூய ஆவியின் வழிநடத்துதலில் சிறப்புடன் நடக்க வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.