நவம்பர் 7 : நற்செய்தி வாசகம்

இந்த ஏழைக் கைம்பெண், எல்லாரையும்விட மிகுதியாகப் போட்டிருக்கிறார்.
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 38-44
அக்காலத்தில்
இயேசு கற்பித்துக் கொண்டிருந்தபோது, “மறைநூல் அறிஞர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் தொங்கல் ஆடை அணிந்து நடமாடுவதையும் சந்தை வெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறார்கள்; தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விருந்துகளில் முதன்மையான இடங்களையும் பெற விரும்புகிறார்கள்; கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்; நீண்ட நேரம் இறைவனிடம் வேண்டுவதாக நடிக்கிறார்கள். கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாக இருப்பவர்கள் இவர்களே” என்று கூறினார்.
இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்து கொண்டு மக்கள் அதில் செப்புக் காசு போடுவதை உற்று நோக்கிக்கொண்டிருந்தார். செல்வர் பலர் அதில் மிகுதியாகப் போட்டனர். அங்கு வந்த ஓர் ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகளைப் போட்டார்.
அப்பொழுது, அவர் தம் சீடரை வரவழைத்து, “இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்” என்று அவர்களிடம் கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————————-
மறையுரைச் சிந்தனை
பொதுக்காலம் முப்பத்தி இரண்டாம் ஞாயிறு
கொடுப்பதில் முழுமையடையும் மனித வாழ்க்கை
நீயூ கரோலினாவைச் சார்ந்த செனட்டர் செபுலோன் வான்ஸ் சொல்லக்கூடிய ஒரு நிகழ்வு.
ஒரு நகரில் மறைபோதகர் ஒருவர் இருந்தார். அவர் கால்நடையாகவே எல்லா இடங்களுக்குச் சென்று நற்செய்தி அறிவித்து, ஆன்மாக்களை மீட்கும் பணியைச் செய்துவந்தார். அவர் சென்ற இடங்களில் மக்கள் கொடுக்கக்கூடிய காணிக்கைதான் அவருடைய பணிக்கு பக்கபலமாக இருந்தது.
ஒருநாள் அவர் ஒரு நகருக்குச் சென்றிருந்தபோது அங்கிருந்த ஆலயத்தில் போதிக்கத் தொடங்கினார். அங்கிருந்த மக்கள் அனைவரும் அவருடைய போதனையை மிக ஆர்வமாகக் கேட்டார்கள். அவர் தன்னுடைய போதனையை முடித்த பின்பு காணிக்கை நேரத்தில் மக்களிடமிருந்து காணிக்கை பெறுவதற்காக தான் அணிந்திருந்த தொப்பியை அவர்களுக்கு மத்தியில் கொடுத்து அனுப்பினார். காணிக்கைத் தட்டாக மாறியிருந்த அந்தத் தொப்பி எல்லாரையும் கடந்து சென்று அவரிடம் திரும்பி வந்தபோது அதில் ஒரு பைசா கூட காணிக்கையாக விழவில்லை. இதைக் கண்டு அவர் மிகவும் அதிர்ச்சியடைந்தார். இருந்தாலும் தன்னுடைய அதிர்ச்சியை வெளியே காட்டிக் கொள்ளாமல், “அன்பார்ந்த மக்களே! நாம் அனைவரும் சேர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்” என்றார்.
அப்போது கூட்டத்திலிருந்த ஒருவர் எழுந்து ஒருவர், “சுவாமி! இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள் என்று சொன்னீர்களே, எதற்காக நன்றி செலுத்தவேண்டும்?” என்று கேட்டார். அதற்கு அந்த மறைபோதகர், “காணிக்கை பெறுவதற்கு அனுப்பி வைக்கப்பட்ட தொப்பியாவது திரும்பி வந்திருக்கின்றதே. அதற்குத்தான் நான் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள் என்று சொன்னேன்” என்றார். இதைக் கேட்ட மக்கள் அனைவரும் அவமானத்தால் உறைந்துபோய் நின்றார்கள்.
இறைவன் கொடுத்த கொடைகளை இறைவனுக்குக் கொடுப்பதற்கு யோசிக்கும் மக்களை இந்த நிகழ்வானது தோலுரித்துக் காட்டுகின்றது. பொதுக்காலத்தின் முப்பத்தி இரண்டாம் ஞாயிறான இன்று நாம் படிக்கக் கேட்ட வாசகங்கள், கொடுப்பதில் முழுமையடையும் மனித வாழ்க்கை என்னும் சிந்தனையைத் தருகின்றது. நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு எருசலேம் திருக்கோவில் இருந்த காணிக்கை பெட்டிக்கு எதிராக அமர்ந்துகொண்டு மக்கள் அதில் காணிக்கை போடுவதை உற்றுக் கவனித்துக்கொண்டிருக்கின்றார். செல்வர்கள் அதில் மிகுதியாக காணிக்கை செலுத்த, ஓர் ஏழைக் கைம்பெண்ணோ ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு செப்புக்காசுகளை காணிக்கையாக செலுத்துகின்றார். இதைக் கவனித்த இயேசு தன்னுடைய சீடர்களிடம், “காணிக்கை பெட்டியில் காணிக்கை செலுத்திய மற்ற எல்லாரையும் விட இந்த ஏழைக் கைம்பெண் மிகுதியாகக் காணிக்கை செலுத்தினார். ஏனென்றால், மற்ற எல்லாரும் தங்களிடம் இருந்த மிகுதியானவற்றிலிருந்து காணிக்கை செலுத்தினார்கள். இவரோ தன்னுடைய பிழைப்புக்காக வைத்திருந்த அனைத்தையுமே காணிக்கையாக செலுத்திவிட்டார்” என்கின்றார்.
எருசலேம் திருக்கோவிலில் பெண்கள் பகுதிக்கும் புறவினத்தார் பகுதிக்கும் இடையே அழகு வாயில் என்றொரு பகுதி இருக்கும். இங்குதான் பதிமூன்று காணிக்கைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். இந்த பதிமூன்று காணிக்கைப் பெட்டிகளும் எக்காலம் (The Trumpet) போன்று இருக்கும். இதில் விழுகின்ற காணிக்கைகள் யாவும் ஒவ்வொரு தேவைக்காகப் பயன்படுத்தப்படும். குறிப்பாக ஆலயத்திற்குத் தேவையான எண்ணெய், விளக்குகள், பலி பொருட்கள், குருக்கள் உடுத்தும் ஆடைகள் இவையெல்லாம் வாங்குவதற்குப் பயன்படுத்தப்படும். இந்த காணிக்கைப் பெட்டிகளுக்கு முன்பாகத்தான் அமர்ந்து, இயேசு அதில் காணிக்கை செலுத்துபவர்களைக் கவனித்துக்கொண்டிருக்கின்றார். அப்போதுதான் ஏழைக் கைம்பெண் காணிக்கை செலுத்துகின்ற நிகழ்வு நடக்கின்றது.
ஏழைக் கைம்பெண் இரண்டு செப்புக்காசுகளை காணிக்கையாக செலுத்தியதை ஆண்டவர் இயேசு இவ்வளவு வியந்து பாராட்டுவதற்குக் காரணமில்லாமல் இல்லை. இன்றைய நற்செய்தியின் முற்பகுதியில் ஆண்டவர் இயேசு மறைநூல் அறிஞர்களின் போலித்தனத்தை, அவர்கள் கைம்பெண்களை எப்படியெல்லாம் வஞ்சிக்கின்றார்கள் என்பதை தோலுரித்துக் காட்டுகின்றார். அதில் வரக்கூடிய ஒரு வார்த்தைகள் ‘கைம்பெண்களின் வீடுகளை பிடுங்கிக்கொள்கின்றார்கள்’ என்பதாகும். ஆம், யூத சமூகத்தில் கைம்பெண்கள் மிகுந்த அவல நிலைக்கு உள்ளானார்கள். கணவனை இழந்து வாழ்ந்த அவர்கள் எல்லாராலும் வஞ்சிக்கப்பட்டார்கள். இப்படி எல்லாராலும் வஞ்சிக்கப்பட்ட ஏழைக் கைம்பெண் இரண்டு செப்புக்காசுகள் காணிக்கையாக செலுத்துவது என்பது உண்மையிலே பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். அதனால்தான் இயேசு அந்த ஏழைக் கைம்பெண்ணை மற்ற எல்லாரையும்விட மிகுதியாக காணிக்கை செலுத்தினார் என்று வியந்து பாராட்டுகின்றார்.
இன்றைய முதல் வாசகத்தில் நற்செய்தியில் நாம் வாசித்த நிகழ்வை ஒத்த செய்தி வருகின்றது. அதுதான் சாரிபத்தைச் சார்ந்த கைம்பெண் இறைவாக்கினர் எலியாவுக்கு அப்பம் சுட்டுத் தந்தது. இந்த நிகழ்வில் சாரிபாத்தைச் சார்ந்த கைம்பெண் எலியா இறைவாக்கினர் கேட்டதும் அப்பம் சுட்டுத் தருகின்றார். இத்தனைக்கும் அவளிடம் அந்த பொழுதுக்கான மாவும் எண்ணையும் மட்டும்தான் இருந்தது. இருந்தாலும் இறையடியார் கேட்கின்றார் என்பதற்காக அப்பம் சுட்டுத் தருகின்றார். இதனால் பஞ்ச காலம் முடியும் மட்டும் அவளுடைய பாத்திரத்தில் மாவும் எண்ணையும் குறையாமல் இருக்கின்றது.
நற்செய்தியில் வரும் ஏழைக் கைம்பெண்ணும் முதல் வாச்கத்தில் வருகின்ற சாரிபாத்துக் கைம்பெண்ணும் நமக்கு உணர்த்துகின்ற செய்தி, ஆண்டவருக்கும் அவருடைய அவருடைய அடியாருக்கும் முகம் கோணாமல் கொடுக்கின்றபோது அவர் நம்மை நிறைவாக ஆசிர்வதிப்பார் என்பதே ஆகும். ஏழைக் கைம்பெண் தன்னிடம் இருந்த இரண்டு செப்புக்காசுகளையும் காணிக்கையாக செலுத்தினார் அதனால் அவர் இயேசுவால் பாராட்டப்படுகின்றார். சாரிபாத்துக் கைம்பெண்ணோ தன்னுடைய வாழ்வுக்காக வைத்திருந்த மாவையும் எண்ணையையும் ஆண்டவருடைய அடியாருக்காகக் கொடுத்தார். அதனால் அவருடைய பாத்திரம் குறையாமல் இருக்கின்றது. இவ்வாறு இவர்கள் இருவரும் தங்களிடம் இருக்கின்ற அனைத்தையும் ஆண்டவருக்காக, அவருடைய அடியாருக்குக் கொடுப்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றார்கள்.
இதுவரைக்கும் தங்களிடம் இருந்த அனைத்தையும் ஆண்டவருக்காகக் கொடுத்தவர்களைக் குறித்து சிந்தித்த நாம், இப்போது தன்னையே நமக்காக கொடுத்த ஒருவரைக் குறித்து சிந்தித்துப் பார்க்க இருக்கின்றோம். தன்னையே கொடுத்தவர் யாரென்று சிந்தித்துப் பார்க்கும்போது அவர் வேறு யாருமல்ல, நம் ஆண்டவர் இயேசுதான் என்று இன்றைய இரண்டாம் வாசகம் நமக்கு எடுத்துக்கூறுகின்றது. எபிரேயருக்கு எழுத்தப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் வாசிக்கின்றோம். “கிறிஸ்து தம்மையே ஒருமுறை பலியாகக் கொடுத்தார்” என்று. ஆம். இயேசு தம்மையே நமது மீட்புக்காகத் தந்து (யோவா 10:10) கொடுப்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கின்றார்.
இயேசுவின் வழியில் நடக்கும் நாம் கொடுப்பதில் எப்படிப்பட்டவர்களாக இருக்கின்றோம் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். இறைவன் நமக்கு கொடுத்ததில் கொஞ்சம் கிள்ளிக் கொடுக்கலாம், இயேசு காலத்தில் வாழ்ந்த பணக்காரர்களைப் போன்று. கொடுத்தது அனைத்தையும் கொடுக்கலாம், ஏழைக் கைம்பெண்ணை போன்று. கொடுத்தது அனைத்தையும் கொடுத்து, தன்னையே கொடுக்கலாம், ஆண்டவர் இயேசுவைப் போன்று. எப்படி இருந்தாலும் நாம் கொடுப்பது நம்முடைய வாழ்வை பாதிப்பதாய், நம்முடைய கையைக் கடிப்பதாய் இருக்கவேண்டும். அதுதான் கொடுப்பதற்கு அர்த்தத்தைத் தருவதாய் இருக்கும்.
அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் நிலவிய சமயத்தில் இளைஞன் ஒருவன் வேலை தேடி பல்வேறு அலுவலகங்களை ஏறி இறங்கி வந்தான். ஆனால், அவனுக்கு வேலை தருவார் யாருமில்லை.
இதற்கிடையில் ஒருநாள் அவன் மனவருத்ததோடு ஆலயத்திற்குச் சென்று, திருப்பலியில் கலந்துகொண்டான். திருப்பலியின்போது எப்படியாவது தனக்கு வேலை கிடைக்கவேண்டும் என்று இறைவனிடம் மிக உருக்கமாக மன்றாடினான். அது மட்டுமல்லாமல், காணிக்கை நேரத்தின் போது தன்னிடம் இருந்த ஒரு டாலர் பணத்தில் பாதியை அதாவது ஐம்பது சென்டை காணிக்கையாகச் செலுத்திவிட்டு, திருப்பலி முடிந்ததும் மன நிம்மதியோடு வெளியே வந்தான். அவன் ஆலயத்தை விட்டு வெளியே வந்த தருணத்தில், பேருந்து ஒன்று அவ்வழியாக வந்தது. அப்பேருந்தில் ஏறி பக்கத்து நகரில் ஏதாவது வேலை தேடலாம் என்று தீர்மானித்தான். அதன்படியே அவன் பேருந்தில் ஏறி அமர்ந்தான்.
பேருந்து நடத்துனர் அவன் அருகே வந்தபோது, அவன், “பக்கத்து நகருக்கு ஒரு டிக்கெட் வேண்டும்” என்று கேட்டான். அவரோ “ஒரு டாலர் கொடுங்கள்” என்று சொன்னதும், அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. ஏனென்றால் அவன் தன்னிடத்தில் இருந்த ஒரு டாலரில் பாதியை ஆலயத்தில் காணிக்கையாக செலுத்தி இருந்தான். இப்போது அவனிடத்தில் பாதி டாலர் – ஐம்பது சென்ட் – மட்டுமே இருந்தது. அதனால் அவன் நடத்துனரிடம், “என்னிடம் இப்போது ஐம்பது சென்டு மட்டுமே உள்ளது. இதற்கு நான் எவ்வளவு தூரம் பயணிக்க முடியுமோ அவ்வளவு தூரம் பயணிக்கின்றேன். அதன்பிறகு என்னைக் கீழே இறக்கிவிடுங்கள். நான் பக்கத்து நகருக்கு நடந்து போய்க்கொள்கின்றேன்” என்றான். அவரும் சரியென்று ஒப்புக்கொண்டு அவன் கொடுத்த பணத்திற்கு ஏற்ற தூரத்தில் அவனை இறக்கிவிட்டார். அவனும் பேருந்தில் இருந்து இறங்கி மெல்ல நடந்துபோய்க்கொண்டிருந்தான். ஓரிடத்தில் ‘வேலைக்கு ஆட்கள் தேவை. வாரம் ஐந்து டாலர் சம்பளம்’ என்ற அறிவிப்புப் பலகை இருந்தது. இதைக் கண்டு அவன் மிகவும் மகிழ்ந்துபோனான். உடனே அவன் அறிவிப்புப் பலகை இருந்த அலுவலகத்திற்குள் சென்று, வேலைக்குச் சேர்ந்தான். வார இறுதியில் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று அவனுக்கு ஐந்து டாலர் சம்பளம் கிடைத்தது. ஒருவேளை அவன் ஆலயத்தில் ஐம்பது சென்ட் காணிக்கையாகச் செலுத்தாமல், அதனை அப்படியே வைத்திருந்து, பேருந்தில் ஒரு டாலர் கொடுத்து பக்கத்து நகருக்குப் போயிருந்தால் அந்த அறிவிப்பை பார்த்திருக்கமுடியாது. காணிக்கை செலுத்தியதால்தான் அவனுக்கு நல்லபடியாக அமைந்தது.

Comments are closed.