பொதுக்காலம் முப்பத்து இரண்டாம் ஞாயிறு (நவம்பர் 07)

I அரசர்கள் 17: 10-16
II எபிரேயர் 9: 24-28
III மாற்கு 12: 38-44
முகமலர்ச்சியோடு கொடுப்போம்!
நிகழ்வு
ஒரு தொழிலதிபரும் ஒரு வழக்குரைஞரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். இருவரும் ஒருமுறை உலகைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினார்கள். இடையிடையே தாங்கள் கண்ட அரிய காட்சிகளை அவர்கள் தங்களிடம் இருந்த புகைப்படக் கருவியால் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.
ஒருநாள் இருவரும் கொரியாவிலிருந்த ஒரு சிற்றூர் வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது, இளைஞன் ஒருவன், ஏர் கலப்பையில் உள்ள நுகத்தடியைத் தன் தோள்மேல் வைத்துக்கொண்டு முன்செல்ல, அவனுக்குப் பின்னால் இருந்த பெரியவர் ஒருவர், ஏர் கலப்பையில் உள்ள கொழுவினை நிலத்தில் ஆழமான ஊன்றி, இளைஞனை வழிநடத்திக் கொண்டிருந்தார். இவ்வாறு அந்த இளைஞனும் பெரியவரும் நிலத்தை உழுதுகொண்டிருந்தார்கள். இக்காட்சியைக் கண்டதும் தொழிலதிபர் வழக்குரைஞரிடம், “வழக்கமாக, கலப்பையில் காளை மாடுகளைப் பூட்டித்தானே நிலத்தை உழுவார்கள்! இங்கே இவர்கள் வித்தியாசமாக உழுகிறார்கள்! ஒருவேளை இவர்களுக்குக் காளை மாடுகளை வைத்திருக்கும் அளவுக்கு வசதியில்லையோ, என்னவோ?” என்றார். வழக்குரைஞரும் அவர் சொன்னதை ஆமோதிப்பதுபோல் தலையாட்டினார். பின்னர் அவர் அந்தக் காட்சியைத் தன்னிடம் இருந்த புகைப்படக் கருவியில் பதிவுகொண்டு முன்னோக்கி நகர்ந்தார். அவருக்குப் பின் அவரது நண்பரும் வந்தார்.
வழியில் இருவரும் ஓர் அருள்பணியாளரைக் கண்டார்கள். இருவரும் அவருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, புகைப்படக் கருவியில் பதிவுசெய்திருந்த காட்சியை அவருக்குக் காண்பித்து, “கலப்பையில் உள்ள நுகத்தடியைத் தோள்மேல் வைத்துக்கொண்டு நிலத்தை உழுவது மாதிரியான காட்சியைக் காண்பது இதுவே முதன்முறை” என்றார்கள்.
புகைப்படக் கருவியில் பதிவுசெய்யப்பட்டிருந்த காட்சியை உற்றுக் கவனித்த அருள்பணியாளர் அவர்களிடம், “இந்தக் காட்சியில் இடம்பெறும் இளைஞனும் பெரியவரும் என் பங்கைச் சார்ந்த தந்தை, மகன்தான். உண்மையில் இவர்களிடத்தில் காளை மாடுகள் இருந்தன; ஆனால், இங்கே புதிதாகப் பங்குக்கோயில் கட்டி எழுப்பப்பட்டபொழுது, இவர்களிடம் கோயில் கட்டுமானப் பணிக்காகக் கொடுப்பதற்குக் கையில் பணமோ, தானியமோ இல்லை. அதனால் இவர்கள் தங்களிடம் இருந்த காளைகளை விற்று, அதைக் கோயில் கட்டுமானப்பணிக்காக கொடுத்தார்கள்” என்றார்கள்.
இதைக்கேட்டு வியப்படைந்த தொழிலதிபர் அருள்பணியாளரிடம், “தங்கள் பிழைப்பிற்காக வைத்திருந்த காளை மாடுகளை விற்ற பணத்தை, நீங்கள் ஏன் கோயில் கட்டுமானப் பணிக்காக வாங்கினீர்கள்?” என்று கேட்டதற்கு, அருள்பணியாளர் அவரிடம், “அவர்கள் முகமலர்ச்சியோடு கொடுக்கும்போது வேண்டாம் என்று சொல்ல முடியுமா?” என்று புன்னகை மாறாமல் பதிலளித்தார்.
திருப்பணிக்காகத் தங்களிடம் இருந்த ஒரே வாழ்வாதரமான காளை மாடுகளையும் முகமலர்ச்சியோடு கொடுத்த இந்தத் தந்தையும் மகனும், நாம் கொடுக்கின்றபோது எத்தகைய மனநிலையோடு கொடுக்கவேண்டும் என்பதை நமக்கு மிகத் தெளிவாக உணர்த்துகின்றார்கள். பொதுக்காலத்தின் முப்பத்து இரண்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, முகமலர்ச்சியோடு கொடுப்போம் என்ற செய்தியைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
கடமைக்காகவும், பிறர் பாராட்ட வேண்டும் என்பதற்காகவும் கொடுப்பவர்கள்
தாமஸ் மெர்டன் என்ற எழுத்தாளர் சொல்லக்கூடிய செய்தி இது: “அன்பில்லாமல் கொடுக்கப்படும் எதுவும் வெற்றுச் சடங்கே!” தாமஸ் மெர்டன் சொல்லக்கூடிய இச்செய்தி முற்றிலும் உண்மை. ஏனெனில், பலர் கடவுளுக்கும் பிறருக்கும் கொடுக்கின்றார்; ஆனால், அவர்கள் கொடுக்க வேண்டும் என்ற கடமைக்காகக் கொடுக்கின்றார்கள் அல்லது கொடுப்பதை ஒரு சடங்காகச் செய்கின்றார்கள். உள்ளார்ந்த அன்போடு அவர்கள் கொடுப்பதில்லை. இதற்கு நல்ல உதாரணமாகப் பரிசேயர்களைச் சொல்லலாம். இவர்கள் தங்களுடைய வருவாயிலிருந்து பத்திலொரு பங்கைக் காணிக்கையாகக் கொடுத்தார்கள் (லூக் 18:12); ஆனால் மோசேயின் சட்டம் சொன்னது என்பதற்காகக் கொடுத்தார்கள். உள்ளார்ந்த அன்போடு இவர்கள் கொடுக்கவில்லை.
இன்னும் ஒருசிலர் மற்றவர் தங்களைப் பாராட்ட வேண்டும், புகழவேண்டும் என்பதற்காகக் கொடுப்பார்கள். இன்றைய நற்செய்தியில் வரும், மிகுதியாகக் காணிக்கை செலுத்திய ‘பலர்’ இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. இப்படிக் கடமைக்காகக் கொடுப்பதும், மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காகக் கொடுப்பதும், ‘கொடுப்பது’ என்ற வரையறைக்குள் வராது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
உள்ளதையெல்லாம் கொடுத்த ஏழைக் கைம்பெண்கள்
அன்பில்லாமல் கொடுப்பது வெறும் சடங்குதான் என்று பார்த்தோம். இதற்கு முற்றிலும் மாறாக, அன்போடு கொடுத்த அல்லது முகமலர்ச்சியோடு கொடுத்த இருவரை இன்றைய இறைவார்த்தை பதிவு செய்கின்றது. இவர்கள் இருவரும் பெண்கள் என்பதும், அதுவும் கைம்பெண் என்பதும்தான் கூடுதல் சிறப்பு.
இஸ்ரயேலில் மூன்றரை ஆண்டுகள் வானம் பொய்த்துப் பெரும் பஞ்சம் ஏற்பட்டபோது, எலியா இறைவாக்கினர், சீதோனிலிருந்து தெற்கில் ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாரிபாத்து என்ற ஊருக்குச் செல்கின்றார். பின் அங்கே இருந்த ஒரு கைம்பெண்ணிடம் தனக்கு ரொட்டி வேண்டும் என்று அவர் கேட்கின்றார். அந்தக் கைம்பெண்ணோ கையளவு மாவும், கலயத்தில் சிறிது எண்ணெயுமே வைத்திருக்கின்றார்; ஆனாலும் அவர் எலியா இறைவாக்கினர் கேட்டுக்கொண்டதற்கேற்ப அவருக்கு (முகமலர்ச்சியோடு) ரொட்டி சுட்டுத் தருகின்றார்.
நற்செய்தியில் வரும் ஏழைக் கைம்பெண் தன்னுடைய பிழைப்புக்காக வைந்திருந்த ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு செப்புக்காசுகளைக் காணிக்கையாகச் செலுத்துகின்றார். (ஒரு கொதிராந்து என்பது தெனாரியத்தில் 164 இல் ஒரு பகுதி. தெனாரியம் என்பது ஒருநாள் கூலி). இப்படித் தன்னுடைய பிழைப்பிற்காக வைத்திருந்த இரண்டு செப்புக் காசுகளையும் ஏழைக் கைம்பெண் (முகமலர்ச்சியோடு) காணிக்கையாகச் செலுத்துகின்றார். இந்த ஏழைக் கைம்பெண்ணை நாம் இன்னொரு விதத்திலும் பாராட்டியாக வேண்டும். ஏனெனில், இன்றைய நற்செய்தியின் முதற்பகுதியில் இயேசு சொல்வதுபோல் மறைநூல் அறிஞர்கள் கணவனின்றி இருந்த கைம்பெண்களை வஞ்சித்தார்கள்; அவர்களுடைய வீடுகளைப் பிடுங்கிக்கொண்டார்கள். இவற்றுக்கு நடுவில்தான் கைம்பெண் இரண்டு செப்புக்காசுகளைக் காணிக்கையாகச் செலுத்துகின்றார்.
இவ்வாறு முதல் வாசகத்தில் வரும் சாரிபாத்துக் கைம்பெண்ணும், நற்செய்தியில் வரும் ஏழை கைம்பெண்ணும் தங்களிடம் இருந்ததையெல்லாம் முகமலர்ச்சியோடு கொடுத்து, கொடுத்து வாழ்வதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றார்கள்.
தன்னையே தந்த இயேசு
எடுப்பவர் பலர் இருக்கையில், தன்னிடம் இருந்ததையெல்லாம் முகமலர்ச்சியோடு கொடுத்த வகையில் ஏழைக் கைம்பெண் நமக்கெல்லாம் முன்மாதிரிதான் என்றாலும், இவரை விடவும் சிறந்ததொரு முன்மாதிரி நமக்கு இருக்கின்றார். அவர்தான் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. ஆம், இயேசு கிறிஸ்து தன்னிடமிருந்த எல்லாவற்றையும் கொடுத்தது மட்டுமல்லாமல், தன்னையே கொடுத்தவர் என்ற வகையில், அவர் எல்லாரையும்விட சிறந்த முன்மாதிரி. எபிரேயர் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், “கிறிஸ்து தம்மையே ஒரே முறை பலியாகக் கொடுத்தார்” என்று வாசிக்கின்றோம்.
ஆண்டுக்கொரு முறை, பாவக் கழுவாய் நாளில் தலைமைக் குரு விலங்குகளின் இரத்தத்தோடு தூயகத்திற்குள் சென்று பலி செலுத்துவார் (லேவி 16:2) இப்பலியின் மூலம் மக்களுடைய பாவங்கள் போக்கப்பட்டன. இயேசு கிறிஸ்துவோ தலைமைக் குருக்களைப் போன்று விலங்குகளின் இரத்தத்தைச் சிந்தாமல், தம்மையே ஒரே முறை பலியாகக் கொடுத்து நாம் பாவங்களைப் போக்கினார். இதன்மூலம் இயேசு நாம் ஒவ்வொருவரும் நம்மையே கொடுக்க வேண்டும் என்ற உயர்ந்த நெறியை நமக்குக் கற்பிக்கின்றார்.
இன்றைக்குப் பலர் கடவுளுக்கும் அயலாருக்கும் கொடுப்பதற்கு மிகவும் யோசித்துக் கொண்டிருக்கையில், இயேசு தம்மையே தந்து, நாம் எதைக் கொடுக்க வேண்டும், அதை எப்படிக் கொடுக்கவேண்டும் என்பதைக் கற்றுத் தருகின்றார். ஆகையால், நாம் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி, அவரைப் போன்று நம்மையே கடவுளுக்கும் இவ்வுலகம் வாழ்வு பெறுவதற்காகவும் கொடுப்போம்.
சிந்தனை
‘முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர்’ (2 கொரி 9:7) என்பார் புனித பவுல். ஆகையால், கட்டாயத்தின் பேரில் அல்ல, முகமலர்ச்சியோடு நம்மை ஆண்டவருக்கும் பிறருக்கும் கொடுப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்

Comments are closed.