2030க்குள் உலகின் 50% வெள்ளம், புயல்களை எதிர்நோக்கக்கூடும்

2030ம் ஆண்டுக்குள், உலக மக்கள் தொகையில் ஏறத்தாழ ஐம்பது விழுக்காட்டினர், கடற்கரைப் பகுதிகளில் வாழ்வார்கள் என்றும், அவர்கள், வெள்ளம், புயல்கள், சுனாமிகள் ஆகியவற்றை எதிர்நோக்கக்கூடும் என்றும், ஐக்கிய நாடுகள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுனாமி விழிப்புணர்வு உலக நாள் நவம்பர் 05 இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி வெளியிட்ட செய்தியில் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ள ஐ.நா. தலைமைப் பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், இந்த ஆபத்துக்கள் குறித்து புரிந்துகொண்டு, அவற்றைக் குறைப்பதற்கு, அனைத்து நாடுகளின் பன்னாட்டு அமைப்புகளும், பொதுமக்களும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஐ.நா.வின் நீடித்த நிலையான வளர்ச்சித்திட்டத்தின் பெருங்கடல் அறிவியல் குறித்த பத்தாண்டு சுனாமித் திட்டத்தில், சுனாமி அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் குழுமங்களும் இணைக்கப்பட்டால், நாம் விரும்பும் இலக்கை எட்டமுடியும் என்றுரைத்துள்ள கூட்டேரஸ் அவர்கள், இயற்கைப் பேரிடர்களின் அச்சுறுத்தல் மிகப்பெரிய அளவில் உள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

கடல் மட்டம் உயர்ந்து வருவது, சுனாமி அச்சுறுத்தலை முன்வைக்கின்றது எனவும், உலகின் காலநிலையை 1.5 டிகிரி செல்சியுசுக்குமேல் அதிகரிக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை அவசியம் எனவும், கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.

இயற்கைப் பேரிடர்களில், ஒரு பேரிடருக்கு 4,600 பேரும், 2004ம் ஆண்டு டிசம்பரில் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமியில், இந்தியா, இலங்கை, இந்தோனேசியா உள்ளிட்ட 14 நாடுகளில் ஏறத்தாழ 2,27,000 பேரும் உயிரிழந்துள்ளனர்.

2015ம் ஆண்டு டிசம்பரில், ஐ.நா. நிறுவனத்தின் பொது அவை நடத்திய கூட்டத்தில், சுனாமி விழிப்புணர்வு உலக நாள், நவம்பர் 5ம் தேதி கடைப்பிடிக்கப்படவேண்டும் என்று அறிவித்தது.

Comments are closed.