இறை மக்களாக இருப்பது ஒரு கொடை – திருத்தந்தை

இயேசுவின் திருஇதயத்தை நாம் தியானிக்கையில், நினைவு, பேரன்பு, ஆறுதல் ஆகிய மூன்று சொற்களால் வழிநடத்தப்படுவோம் எனவும், இயேசுவின் திருஇதயம் பேரன்பு கொண்டது, அது அன்பால் காயமடைந்துள்ளது, மற்றும், சிலுவையில் நமக்காகக் கிழிக்கப்பட்டுள்ளது எனவும், கனிவு மற்றும், வேதனையில், மனிதர்மீது கொண்டிருக்கும் பேரன்பை அது வெளிப்படுத்துகின்றது எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.

ஆறுதல் என்பது, நம்மிடமிருந்து அல்ல, மாறாக, இம்மானுவேலனாய் என்றும் நம்மோடு இருக்கின்ற இயேசுவிடமிருந்து வருகிறது என்றும், எனவே கடவுள் ஆறுதல் அளிக்கிறார் என்ற உறுதியில் நம்மை ஊக்கப்படுத்துவோம், நாமும் ஆறுதலாக இருக்க, இயேசுவின் திருஇதயத்திடம் அருள் வேண்டுவோம் எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.

மாமன்றம் பற்றிய டுவிட்டர்

மேலும், 2023ம் ஆண்டில் நடைபெறவிருக்கும் 16வது உலக ஆயர்கள் மாமன்றத்தையொட்டி டுவிட்டர் பக்கத்தில், மாமன்றம் என்ற ஹாஷ்டாக்குடன் (#Synod) செய்திகளைப் பதிவுசெய்துவரும் திருத்தந்தை, நவம்பர் 05, இவ்வெள்ளியன்றும் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இறை மக்கள் குழுமத்தின் உறுப்பினராக இருப்பது ஒரு கொடையாகும், அதேநேரம் அதற்கு, கடவுளின் வியத்தகுப் பணிகளுக்கு, சொற்களால் அல்ல, மாறாக செயல்களால் சான்றுபகரும் கடமையும் உள்ளது, இவ்வாறு சான்றுபகர்வது, கடவுளின் இருப்பை மக்கள் ஏற்கவும், அவரளிக்கும் மீட்பைப் பெற்றுக்கொள்ளவும் உதவும் என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

வத்திக்கான் நூலகத்தில் கண்காட்சி

மேலும், வத்திக்கான் நூலகத்தின் புதிய அறை ஒன்றில், ‘அனைவரும்: பயணிக்கும் மனித சமுதாயம்’ என்ற பெயருடன் நிறுவப்பட்டுள்ள ஒரு கண்காட்சியை, திருத்தந்தை அவர்கள், நவம்பர் 05, இவ்வெள்ளி உள்ளூர் நேரம் மாலை 5 மணிக்குத் திறந்துவைக்கிறார்.

வத்திக்கான் நூலகத்தின் ஒரு புதிய முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த முதல் கண்காட்சி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள ‘அனைவரும் உடன்பிறந்தோர்’ என்று பொருள்படும் Fratelli Tutti மடலை அடிப்படையாகக்கொண்டு Pietro Ruffo என்ற கலைஞரால் அமைக்கப்பட்டுள்ளது.

இன்னும், நவம்பர் 05, இவ்வெள்ளியன்று, Trinidadன் Port of Spain உயர்மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் Joseph Everard Harris அவர்கள், திருத்தந்தையை திருப்பீடத்தில் தனியே சந்தித்துப் பேசினார்.

Comments are closed.