சமுதாயநல பொதுமக்கள் இயக்கங்களின் 4வது உலக மாநாடு

ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைமையில், சமுதாயநல பொதுமக்கள் இயக்கங்களின் நான்காவது உலக மாநாடு (EMMP), இணையதளம் வழியாக நடைபெறுகின்றது.

இரு கட்டங்களாக நடைபெறும் இம்மாநாட்டின் அடுத்த நிகழ்வு, இவ்வாண்டு செப்டம்பரில் நடைபெறும் எனவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அம்மாநாட்டில் உரை நிகழத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வெள்ளிக்கிழமை பிற்பகலில் நடைபெற்ற வலைக்காட்சி வழி பகிர்வில், அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, மற்றும், ஆசியாவிலிருந்து, துப்பரவுத் தொழிலாளர்கள், மறுசுழற்சிப்பணியாற்றுவோர், மீனவர்கள், கலைஞர்கள் கட்டடப் பணியாளர்கள், கூட்டுறவு அங்காடிகளில் பணியாற்றுவோர் போன்ற, சந்திப்பு கலாச்சாரத்தை நடைமுறைப்படுத்துவோர், மற்றும், ஒன்றிணைந்து செயல்படுவோர் ஆகிய அனைத்துத் துறைகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இப்பூமிக்கோளத்தின் பல்வேறு மதங்கள், மற்றும், கலாச்சாரங்களைச் சேர்ந்த சமுதாயநல பொதுமக்கள் இயக்கங்களின் பிரதிநிதிகள் மத்தியில், உடன்பிறப்பு உணர்வை வளர்க்கும் நோக்கத்தில் நடைபெறும் இம்மாநாடு, ஏழைகள், புறக்கணிக்கப்பட்டோர், மற்றும், விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டோர் ஆகியோர் பொருளாதாரத்திலும், சமுதாயங்களிலும், எதிர்கொள்ளும் அநீதிகளைக் களையவும் முயற்சிகளை மேற்கொள்ளும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இம்மாநாட்டை நடத்துகின்ற நிர்வாகக் குழுவில், பிரேசில், அர்ஜென்டீனா, இந்தியா, இஸ்பெயின், அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும், இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த சமுதாயநல இயக்கங்களின் பிரதிநிதிகள் உள்ளனர், இக்குழுவினர் திருப்பீடத்தோடு எப்போதும் கலந்துரையாடலை மேற்கொண்டு வருகின்றனர்.

சமுதாயநல பொதுமக்கள் இயக்கங்களின் முதல் உலக மாநாடு 2014ம் ஆண்டு அக்டோபரில் உரோம் நகரிலும், இரண்டாவது உலக மாநாடு, 2015ம் ஆண்டு ஜூலையில் பொலிவியா நாட்டின் சாந்தாகுரூஸ் தெ லா சியெர்ரா நகரிலும் நடைபெற்றன, இந்த 2வது மாநாட்டில், ஐந்து கண்டங்களின் 40 நாடுகளைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டு, அமைதி மற்றும், நீதியின் பாதையில் மக்களை ஒன்றுசேர்க்கவும், இப்பூமியைப் பாதுகாக்கும் வழிமுறைகளை ஊக்குவிக்கவும் தீர்மானங்கள் எடுத்தனர்.

மூன்றாவது உலக மாநாடு, 2016ம் ஆண்டு நவம்பரில், வத்திக்கானில் நடைபெற்றது. இதில் குடிபெயர்ந்தோர், மற்றும், புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றன

Comments are closed.