ஜூலை 2 பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 9-13
அக்காலத்தில்
மத்தேயு என்பவர் சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்ததை இயேசு கண்டார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.
பின்பு அவருடைய வீட்டில் பந்தியில் அமர்ந்திருந்தபோது வரி தண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் வந்து இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரிடம், “உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?” என்று கேட்டனர்.
இயேசு இதைக் கேட்டவுடன், “நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. ‘பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————–
மத்தேயு 9: 9-13
பாவியை அழைத்த இயேசு
நிகழ்வு
விடுமுறைக் காலம் அது. அதனால் சிறுவர் சிறுமியர் எல்லாரும் ஒரு விளையாட்டு மைதானத்தில் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். இதில் ஒரே ஒரு சிறுமி மட்டும் மைதானத்தின் ஓர் ஓரமாய் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தாள்.
இதை அந்த வழியாக வந்த பெரியவர் ஒருவர் கவனித்தார். அவர் அந்தச் சிறுமியிடம் சென்று, “பாப்பா! ஏன் இப்படித் தனியாக உட்கார்ந்து அழுகொண்டிருக்கின்றாய்… உனக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டார். அதற்குச் சிறுமி, “நான் சின்னப் பிள்ளையாம். அதனால் என்னை யாரும் விளையாட்டில் சேர்த்துக் கொள்ளமாட்டேன் என்கின்றார்கள். அதனால்தான் இப்படி அழுதுகொண்டிருக்கின்றேன்” என்றாள்.
“ஓ! இதுதான் பிரச்சினையா! இதற்கெல்லாமா அழுவது… வா நான் உனக்கு பிடித்த தின்பண்டங்களை வாங்கித் தருகிறேன்” என்று சொல்லி அழைத்துக்கொண்டு போய், அவள் கேட்டதை எல்லாம் வாங்கிக்கொடுத்து, அவளை சமாதானப்படுத்தினார் அந்தப் பெரியவர்.
இந்த நிகழ்வில் வரும் சிறுமியைப் போன்றுதான் நாம் பல நேரங்களில் பல காரணங்களால் மற்றவர்களால் புறக்கணிக்கப்பட்டிருக்கலாம் அல்லது ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம். ஆனால், ஆண்டவர் இயேசு அப்படியில்லாமல் எல்லாரையும் அன்பு செய்கின்றவராக, எல்லாரையும் ஏற்றுக்கொள்பவராக இருக்கின்றார். கடவுள் யாரையும் புறக்கணிப்பதில்லை, மாறாக ஏற்றுக்கொள்கின்றார் என்பதற்குச் சான்றாக இன்றைய நற்செய்தி வாசகம் இருக்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
‘பாவி’ எனக் கருதப்பட்ட மத்தேயு
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு மத்தேயுவை அழைப்பதைக் குறித்து வாசிக்கின்றோம். இந்த மத்தேயு யாரென்றால் ஒரு வரிதண்டுபவர். அதாவது யூதர்களால் பாவி என்று முத்திரை குத்தப்பட்டவர். யூதர்கள் வரிதண்டுபவர்களைப் பாவி என்று முத்திரை குத்தியதற்குக் காரணம், அவர்கள் உரோமையர்க்குக் கீழ் பணிசெய்துவந்தார்கள் என்பதால்தான். உரோமையர்களையும் அவர்களுடைய ஆட்சியையும் அறவே வெறுத்த யூதர்கள், அவர்களிடம் இந்த வரிதண்டுபவர்கள் வேலை செய்துவந்ததால், அவர்களைப் பாவிகள் என்றும் நாட்டைக் காட்டிக் கொடுத்தவர்கள் என்றும் முத்திரை குத்தினார்கள். இதைவிட இன்னொரு விடயமும் இருக்கின்றது. அது என்னவென்றால், வரிதண்டுபவர்கள் தாங்கள் வசூலிக்க வேண்டிய வரிப்பணத்தை விடவும் அதிகமாக வசூலித்தார்கள். அதனால் மக்கள் அவர்களை பாவிகள் என்று அழைத்தார்கள்.
மத்தேயு சுங்கச் சாவடியிலிருந்து வரி வசூலித்துக் கொண்டிருந்ததால், அவரைப் பாவி என்று மக்கள் அழைத்திருப்பார்கள் என்பதை இயேசு நன்றாக உணர்ந்திருப்பார் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை.
பாவியை அழைத்த இயேசு
மத்தேயுவை யூதர்கள் பாவி என்று முத்திரை குத்தியிருக்கின்றார்கள் என்பது இயேசுவுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் அவர் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், அவரைத் தன்னுடைய திருத்தூதர்களுள் ஒருவராகத் தேர்ந்தெடுக்கின்றார். இவ்வாறு அவர் யாரையும் புறக்கணிக்காமல், எல்லாரையும் ஏற்றுக்கொள்ளக்கூடியவராக இருக்கின்றார்.
இயேசு இவ்வுலகிற்கு வந்ததே, ‘இழந்து போனதைத் தேடி மீட்கத்தான்’ (லூக் 19:10). அந்த நோக்கம் வரிதண்டுபவரான மத்தேயுவின் அழைப்பில் நிறைவேறுகின்றது. மேலும் இயேசு மத்தேயுவின் வீட்டில் உணவருத்திக்கொண்டிருக்கும்போது, அங்கு வந்த பரிசேயக் கூட்டம் முணுமுணுப்பத்தைத் தொடர்ந்து, ‘நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்கவந்தேன்’ என்று சொல்வதன்மூலம் இதை உறுதி செய்கின்றார்.
இயேசுவுக்காகத் தன்னையே மாற்றிக்கொண்ட மத்தேயு
மக்கள் தன்னைப் பாவி என்று ஒதுக்கித் தள்ளியபோது, ஆண்டவர் இயேசு தன்மீது உண்மையான அன்பு கொண்டு, தன்னை அவருடைய பணிக்காக அழைத்ததை நினைத்து, மத்தேயு மிகவும் மகிழ்ந்திருக்கக்கூடும். அதனால் அவர் இயேசுவுக்காகத் தன்னையே மாற்றிக் கொள்ளத் தொடங்குகின்றார். அதனுடைய தொடக்கமாக இருப்பதுதான் அவர் இயேசுவுக்குத் தன்னுடைய வீட்டில் உணவளிப்பது. இதற்குப் பின்பு அவர் இயேசுவோடு இருந்து, இயேசுவாகவே மாறத் தொடங்குகின்றார்.
இங்கு நாம் நம்முடைய கவனத்தில் கொள்ளவேண்டிய செய்தி என்னவென்றால், கடவுள் நம்மீது அன்புகொண்டு, நம்மை அவருடைய பணிக்காக அழைக்கின்றார் எனில், அவரைப் போன்று மாறுவதும் அவர்ககாக வாழ்வதும் தேவையான ஒன்றாக இருக்கின்றது. இல்லையென்றால், நம்முடைய அழைப்பின் மேன்மையை உணராமல், அதை நாம் வீணடிக்கின்றோம் என்று அர்த்தமாகிவிடும். ஆகையால், கடவுளால் அன்பு செய்யப்படும், அழைக்கப்பட்டிருக்கும் நாம், அவர்க்கு ஏற்ற வாழ்க்கை வாழ்வது மிகவும் தேவையானதாகும்.
சிந்தனை
‘கடவுட்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே!’ (திபா 51:17) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம் கடவுளின் அன்பையும் ஆசியையும் பெற மத்தேயுவைப் போன்று நொறுங்கிய, குற்றத்தை உணர்ந்த, தாழ்ச்சியான நெஞ்சம் கொண்டவராய் வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.