ஆகஸ்ட் 5 : நற்செய்தி வாசகம்

அம்மா, உமது நம்பிக்கை பெரிது.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 21-28

அக்காலத்தில்

இயேசு தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார். அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்துவந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, “ஐயா, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்” எனக் கதறினார். ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை.

சீடர்கள் அவரை அணுகி, “நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்” என வேண்டினர். அவரோ மறுமொழியாக, “இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்” என்றார்.

ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, “ஐயா, எனக்கு உதவியருளும்” என்றார். அவர் மறுமொழியாக, “பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல” என்றார். உடனே அப்பெண், “ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே” என்றார்.

இயேசு மறுமொழியாக, “அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்” என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.

ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————-
மத்தேயு 15: 21-28

“ஐயா, எனக்கு இரங்கும்”

நிகழ்வு

கணவன், மனைவி இவர்களுடைய சிறு வயது மகள் என்றிருந்த குடும்பம் அது. ஒருநாள் இந்தக் குடும்பத்தில் இருந்த மூவரும் இரவு உணவைச் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். உணவையெல்லாம் சாப்பிட்டு முடித்ததும், சிறுமி தன் தாயிடம், “அம்மா அந்த ஆப்பிள் பழத்தை எடுங்கள்” என்றாள். இதைச் சிறுமியின் தாய் கண்டுகொள்ளவில்லை. மீண்டுமாகச் சிறுமி தன் தாயிடம், “அம்மா! உங்களிடம்தான் சொல்கிறேன், அந்த ஆப்பிள் பழத்தை எடுத்துத் தாருங்கள்” என்றாள். அப்பொழுது சிறுமியின் தாய் இந்தக் கதையைச் சொல்லத் தொடங்கினாள்.

“ஓரூரில் ஒரு பெரிய தோட்டம் இருந்தது. அதில் அழகழகான மலர்களும், விதவிதமான பழங்களும் இருந்தன. அந்த ஊரில் இருந்த மக்கள், தோட்டத்தில் இருந்த மலர்களையும் பழங்களையும் பறிப்பதற்கு எவ்வளவோ முயற்சி செய்தார்கள். அவர்களால் முடியவில்லை. காரணம், தோட்டத்தினுடைய வாயிற்கதவு உயரமாக இருந்தது. மக்கள் அதில் ஏறியபொழுது, அது இன்னும் உயரமானது. இதனால் அவர்கள் வாயிற்கதவை சம்மட்டியால் அடித்து, உடைக்க முயற்சி செய்தார்கள். சம்மட்டிதான் உடைந்தே ஒழிய, வாயிற்கதவு உடையவில்லை. அதைத் தீயிட்டுக் கொழுத்தியும் பார்த்தார்கள். அப்பொழுது அந்தத் தோட்டத்தின் வாயிற்கதவுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை; திறக்கவுமில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்தத் தோட்டத்தின் வாயிற்கதவு முன்பாகச் சிறுமி ஒருத்தி வந்து நின்றுகொண்டு, “தோட்டத்தில் இருக்கும் மலர்களையும் பழங்களையும் பறிக்கவேண்டும். அதனால் வாயிற்கதவே! தயவுசெய்து நீ எனக்காகத் திறப்பாயா?” என்றாள். அவள் இப்படிச் சொன்னதுதான் தாமதம், வாயிற்கதவு திறந்து, அவளுக்கு வழிவிட்டது.”

தாயானவள், இந்தக் கதையைச் சொல்லி முடித்ததும், சிறுமிக்குத் தன்னுடைய தாயிடம் தான் ஆப்பிளைப் பழத்தை எடுத்துக்கொடுக்கச் சொன்னபொழுது, அவர் ஏன் ஆப்பிள் பழத்தை எடுத்துக் கொடுக்கவில்லை என்ற உண்மை புரிந்தது. உடனே சிறுமி தன் தாயிடம், “அம்மா! தயவுசெய்து எனக்காக அந்த ஆப்பிள் பழத்தை எடுத்துக் கொடுப்பீர்களா? என்றாள். அவளுடைய தாயும் அவள் கேட்டுக்கொண்டது போலவே, அவளுக்கு ஆப்பிள் பழத்தை எடுத்துக் கொடுத்தாள்.

எதையும் ஒருவரிடமிருந்து கேட்கின்றபொழுது, அதை மிகுந்த தாழ்ச்சியோடு கேட்டால், நிச்சயம் கிடைக்கும் என்ற செய்தியை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகமும் நமக்கு இதே செய்தியைத்தான் எடுத்துக்கூறுகின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவை “ஐயா, தாவீதின் மகனே” என அழைக்கும் கானானியப் பெண்மணி

நற்செய்தியில் இயேசு, பிற இனத்தார் மிகுதியாக வாழ்ந்த தீர், சீதோன் ஆகிய பகுதிகளுக்குச் செல்கின்றார். இங்கு இயேசுவைப் பற்றியும், அவர் பேய்களை ஓட்டியதையும் பற்றியும் கேள்விப்பட்ட கானானியப் பெண்மணி, பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகியிருந்த தன்னுடைய மகளிடமிருந்து பேயை விரட்டவேண்டும் என்பதற்காக இயேசுவிடம் செல்கின்றார். அவ்வாறு செல்லும் அந்தக் கானானியப் பெண்மணி இயேசுவைப் பார்த்து, “ஐயா” என்று மூன்றுமுறை சொல்வதை நாம் வாசிக்கின்றோம். ஒருவரை ஐயா என்று அழைப்பது, அழைக்கப்படுவர்மீது அழைப்பவருக்கு இருக்கும் மரியாதையும், தாழ்ச்சியையும் எடுத்துக் காட்டுகின்றன. கானானியப் பெண்மணி இயேசுவை ஐயா என்று அழைப்பதன்மூலம், இயேசுவின்மீது தனக்கிருந்த மரியாதையையும், அதே நேரத்தில் தன்னிடம் இருந்த தாழ்ச்சியையும் எடுத்துக் கூறுபவையாக இருக்கின்றன.

தாழ்ச்சியோடு வேண்டிய கானானியப் பெண்மணியின் வேண்டுதல் கேட்கப்படல்

கானானியப் பெண்மணி இயேசுவை “ஐயா, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்; எனக்கு உதவியருளும்” என்று அழைத்தபொழுது, இயேசு அவரைக் கண்டுகொள்ளவில்லை; இயேசுவின் சீடர்களோ இயேசுவிடம், அவரை அனுப்பிவிடுமாறு சொல்கின்றார்கள். இதற்காக அந்தப் பெண்மணி மனந்தளர்ந்து போகாமல், இயேசுவைப் பின்தொடர்ந்துகொண்டே செல்கின்றார். இறுதியாக இயேசு அவரிடம், “பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல” சொல்கின்றபொழுது, அந்தப் பெண்மணி இயேசுவிடம், “தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டி தின்னுமே” என்று சொல்கின்றார். இதைக்கேட்ட இயேசு அவரிடம், “நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்” என்கின்றார் .

இயேசுவின் கண்கொள்ளாமை, சீடர்களின் உதாசீனம் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல், கானானியப் பெண்மணி நம்பிக்கையோடும் தாழ்ச்சியோடும் இருந்தார். இதனாலேயே அவருடைய மகளுக்கு நலம் கிடைக்கின்றது. நாமும் இறைவனிடம் வேண்டுகின்றபொழுது, நம்பிக்கையோடும், அதே நேரத்தில் மிகுந்த தாழ்ச்சியோடும் மன்றாட வேண்டும். நாம் இறைவனிடம் தாழ்ச்சியோடு வேண்டுவதற்குத் தயாரா? சிந்திப்போம்.

சிந்தனை

தங்களைத் தாழ்த்துவோரின் வேண்டுதல் முகில்களை ஊடுருவிச் செல்லும்; அது ஆண்டவரை அடையும்வரை அவர்கள் ஆறுதல் அடைவதில்லை’ (சீரா 35: 17) என்கிறது சீராக்கின் ஞானநூல். ஆகையால், நாம் இறைவனிடம் வேண்டுகின்றபொழுது, மிகுந்த தாழ்ச்சியோடு வேண்டுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

 

Comments are closed.