உலக இளையோர் செபக்கூட்டம்

ஆகஸ்ட் 1ம் தேதி முதல், 6ம் தேதிவரை இடம்பெறும், அனைத்துலக இளையோர் செபக்கூட்டத்திற்கு, தன் வாழ்த்து செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

“வந்து பாருங்கள்” என இயேசு புனித திருமுழுக்கு யோவானின் சீடர்களிடம் கூறிய வார்த்தைகளைத் தலைப்பாகக் கொண்டு Mladifest என்ற பெயரில்,  இடம்பெறும் இந்த இளையோர் செபக்கூட்டத்திற்கு, திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில், இளையோர் அனைவரும் இயேசுவை நோக்கித் திரும்பி, அவரைத்தேடி, அவரிடம் தங்களை முழுமையாகக் கையளித்து, அவருக்குச் சான்று பகரவேண்டும் என விண்ணப்பித்துள்ளார்.

உயிருடன் இருக்கும் இயேசுவை திருநற்கருணையிலும், ஒப்புரவிலும் நாம் சந்திக்கும்போது, வாழ்வின் புதிய வழிகளைக் கண்டுகொள்கிறோம் என்பதையும் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வந்து பாருங்கள் என்ற வார்த்தைகள் வழியாக, தன்னுடன் இணைந்திருக்குமாறு ஒவ்வொரு இளையோருக்கும் இயேசு அழைப்புவிடுக்கிறார் என்று கூறினார்.

இறைவனோடு இணைந்திருப்பது என்பது, நம் வாழ்விற்கு ஒரு புதிய அர்த்தத்தைக் கொடுப்பதாகும், என்று கூறியத் திருத்தந்தை, இறைவன் அனைத்தையும் புதியதாக மாற்றுவதோடு, இறைவனுடன் நாம் கொண்டுள்ள அனுபவத்தை மற்றவர்களுக்கும் வழங்குமாறு எதிர்பார்க்கிறார் என்று எடுத்துரைத்தார்.

இறைத்திட்டத்திற்குத் தன்னையே கையளித்து ‘ஆம்’ என பதிலளித்த அன்னை மரியா, இளையோர் ஒவ்வொருவருக்கும் ஓர் எடுத்துக்காட்டாக உள்ளார் எனவும் தன் செய்தியில் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நம் வாழ்வில் ஒரு நாளும் நம்பிக்கையின் ஒளி அணைந்துவிடக்கூடாது என்பதில் அன்னை மரியா நமக்கு உதவுவாராக என்ற செபத்துடன் தன் செய்தியை நிறைவுசெய்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துன்புறும்  நம் சகோதரர்களில் இயேசுவைக் கண்டுகொள்ளத் தவறாதீர்கள் என்ற விண்ணப்பத்தையும் இளைஞர்களுக்கு முன்வைத்துள்ளார்

Comments are closed.