நிலத்தில் மறைந்திருக்கும் புதையல், நம் இயேசுவே

வானுலக அரசைத் தேடுவதில் ஒவ்வொருவரும் சோர்வின்றி தொடர்ந்து ஈடுபடவேண்டும் என்று, இஞ்ஞாயிறன்று அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூலை 26ம் தேதி, ஞாயிறன்று நற்செய்தியில் கூறப்பட்டுள்ள, நிலத்தில் மறைந்திருந்த புதையல், மற்றும், விலை உயர்ந்த முத்து ஆகிய உவமைகள் குறித்து, தன் ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையின்போது தன் கருத்துக்களை பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறையரசைக் கட்டியெழுப்புவதற்கு, இறைவனின் அருள் இருந்தால் மட்டும் போதாது, மனிதகுலத்தின் ஈடுபாட்டுடன்கூடிய ஆர்வமும் தேவை என்று கூறினார்.

நிலத்தில் மறைந்திருக்கும் புதையல், மற்றும், விலைமதிப்பற்ற முத்து ஆகிய உவமைகளைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எவ்வாறு ஒருவர் இப்பொருள்களை அடைய தனக்கு உள்ளதையெல்லாம் விற்கிறாரோ, அதுபோல், இறையரசைப் பெறுவதற்காக நமக்குள்ளதையெல்லாம் இழக்க நாம் தயாராக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நம்மிடம் இருப்பதைவிட விலைமதிப்பற்ற ஒரு பொருளை அடைய விரும்பினால், நம் உடமைகள்மீது கொண்டுள்ள பற்று, மற்றும், இலாபத்தின்மீது கொண்டுள்ள வேட்கை, சுயநலம், என்பனவற்றை இழக்க முன்வரவேண்டும், ஏனெனில், விண்ணரசு எனும் புதையல் நம் வாழ்வை தினமும் புதுப்பிப்பதுடன், இறைவனையும், அயலவரையும் அடைவதற்கு, புதிய பாதையை நமக்கு திறக்கிறது என, மேலும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நிலத்தில் மறைந்திருக்கும் புதையலாகவும், விலைமதிப்பற்ற முத்தாகவும் இருக்கும் இயேசுவை நாம் முழுமையாகப் பெறும்பொது, உலகிலுள்ள அனைத்து மகிழ்ச்சிகளையும் நம்மில் அவர் தூண்டுகிறார் என எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Comments are closed.