நற்செய்தி வாசக மறையுரை (ஜூலை 28)

பொதுக்காலம் பதினேழாம் வாரம் செவ்வாய்க்கிழமை
மத்தேயு 13: 36-43
அழிந்துபோக வேண்டும் என்று அல்ல; மனம்மாற வேண்டும் என்று விரும்பும் கடவுள்
நிகழ்வு
இங்கிலாந்து நாட்டை ஆண்டு வந்தவர் இரண்டாம் ஹென்றி என்ற மன்னர். இவருக்கு ஒரு மகன் இருந்தான். அவன் இவரையே எதிர்த்துக் கலகம் செய்தான். இதை அறிந்த இரண்டாம் ஹென்றி, அவனைத் துரத்திச் சென்று பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு நகரிலிருந்து பிடித்துக்கொண்டு வந்து, வீட்டுச்சிறையில் அடைத்து வைத்தார். வீட்டுச் சிறையில் அடைத்து வைக்கப்பட்ட அவன், தொடக்கத்தில் முரண்டு பிடித்துக்கொண்டே இருந்தான்; நாள்கள் மெல்ல உருண்டோடியபோது, அவன் தன் தந்தைக்கு எதிராகச் செய்த தவற்றை உணர்ந்து மனம் வருந்தத் தொடங்கினார்.
இதைத் தொடர்ந்து அவன், தன்னைக் காவல் காத்துக்கொண்டிருந்த காவலரை அழைத்து, அவர்மூலமாக தன் தந்தையிடம், “நான் என்னுடைய குற்றத்தை உணர்ந்து மனம்மாறிவிட்டேன்; இப்பொழுது நான் உங்களிடம் அதற்காக மன்னிப்பு கேட்கத் தயாராக இருக்கின்றேன்” என்று சொல்லச் சொல்லி அனுப்பினான். இதை அந்தக் காவலர் மன்னர் இரண்டாம் ஹென்றியிடம் சொன்னபோது, அவர் தனது மகனை மன்னித்து ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. மாறாக அவர் அந்தக் காவலரிடம், “எனக்கு எதிராகக் கலகம் செய்த அவனை, அவன் என்னுடைய மகனாக இருந்தாலும், எப்படி மன்னித்து ஏற்றுக்கொள்வது…? அதெல்லாம் முடியாது…!” என்று சொல்லி, காவலரை அங்கிருந்து அனுப்பிவிட்டார்.
காவலர் இச்செய்தியை இரண்டாம் ஹென்றியின் மகனிடம் சொன்னபோது, அவன் பெரிதும் வருந்தினான். இதற்குப் பின்பு அவன் சரியாகச் சாப்பிடவில்லை. இதனாலேயே அவனுடைய உடல் நலம் குன்றிப் படுத்த படுக்கையானான். சில நாள்களுக்குப் அவன் தன்னுடைய இறப்பு நெருங்கிவருவதை உணர்ந்து, காவலரை அழைத்து, “என்னுடைய சாவு நெருங்கி வந்துவிட்டது; இன்னும் ஓரிரு நாள்களில் நான் இறந்து விடுவேன். அதனால் நான் இறந்தபின் என்னைச் சாக்கு உடையால் உடுத்தி, சாம்பலில் படுக்கவைத்து, நான் என்னுடைய தந்தையிடம் மன்னிப்புக் கேட்பதைக் குறிக்கும் விதத்தில், என் கைகளைக் குவித்தவாறு அவரிடம் கொண்டு செல்லுங்கள். அப்பொழுதாவது அவர் என்னை மன்னிப்பார்” என்றான்.
அவன் சொன்னது போன்றே, அவன் இறந்த பிறகு, அவனைச் சாக்கு உடையால் உடுத்தி, சாம்பலில் படுக்கவைத்து, கைகளைக் குவித்தவாறு அவனுடைய தந்தையிடம் கொண்டு சென்றார் காவலர். அவனை அந்நிலையில் பார்த்துவிட்டு, அவனுடைய தந்தை இரண்டாம் ஹென்றி, “என்னுடைய மகன் தான் செய்த குற்றத்திற்கு இந்தளவுக்கு வருந்தியும் நான் அவனை மன்னிக்காத பெரும் பாவியாகி விட்டேனே” என்று சொல்லிப் பெரிதும் வருந்தினார்.
ஆம். இன்றைக்கு மனிதர்கள் ஒருவர் செய்த குற்றத்தை மன்னிப்பதற்கும், அவர்களைப் பொறுத்துக் கொள்வதற்கும் தயாராக இல்லை; ஆனால் ஆண்டவர் மனிதர்களாகிய நாம் செய்யக்கூடிய குற்றத்தைப் பொறுத்துக்கொள்ளவும் மன்னிக்கவும் தயாராக இருக்கிறார். இத்தகைய செய்தியை எடுத்துச்சொல்லும் இன்றைய நற்செய்தி வாசகத்தைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
மனிதர்கள் மனம் மாறுவதற்காகப் பொறுமையோடு இருக்கும் ஆண்டவர்
இன்றைய நற்செய்தியில் இயேசு, வயலில் தோன்றிய களைகள் உவமைக்குத் தன்னுடைய சீடர்களுக்கு விளக்கமளிக்கிறார். நிலத்தில் விதைக்கப்பட்ட களைகள் என்பவை தீயவனாகிய சாத்தானால் விதைக்கப்பட்டவையாக இருக்கின்றன. நிலக்கிழார் களைகளை உடனே அப்புறப்படுத்தவில்லை. மாறாக, தீயவர்கள் மனம் மாறவேண்டும் என்பதற்காகக் கடவுள் பொறுமையோடு இருப்பது போன்று அவர் அறுவடை வரை, பொறுமையோடு இருக்கிறார்.
இக்கருத்தை புனித பேதுரு தன்னுடைய இரண்டாவது திருமுகத்தில் இவ்வாறு பதிவு செய்வார்: “கடவுள் காலம் தாழ்த்துவதில்லை. மாறாக, உங்களுக்காகப் பொறுமையோடு இருக்கிறார். யாரும் அழிந்துபோகாமல், எல்லாரும் மனம்மாற வேண்டுமென விரும்புகிறார் (2 பேது 3:9). ஆகவே பொறுமையுள்ள கடவுளிடம் நாம் நம்முடைய குற்றத்தை உணர்ந்து, திருந்திவருவதே சாலச் சிறந்த செயலாகும்.
ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்பக் கைம்மாறு அளிக்கும் ஆண்டவர்
இன்றைய நற்செய்தி வாசகம் கடவுளின் பொறுமையை எடுத்துக்கூறுகின்ற அதேவேளையில், கடவுள் ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கு ஏற்ப கைம்மாறு அளிக்கிறார் என்ற செய்தியையும் எடுத்துக்கூறுகிறது. அறுவடையின்போது எப்படிக் களைகள் கட்டுகளாகக் கட்டப்பட்டுத் தீயில் எரிக்கப்படுகின்றனவோ, அதுபோன்று உலக முடிவில் தீயவர்கள் தீச் சூளையில் தள்ளப்படுவார்கள்; ஆனால் நேர்மையாளர்கள் கதிரவனைப் போன்று ஒளி வீசுவார்கள்.
நாம் தீயவர்களாக இருக்கிறோமா அல்லது நேர்மையாளர்களாக இருக்கிறோமா என்று நம்முடைய வாழ்வை ஆய்வுக்கு உட்படுத்திப் பார்த்து, நேர்மையாக வாழ முயற்சி செய்வோம்.
சிந்தனை
‘ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்’ (திபா 103: 8) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகவே பொறுமையோடு இருக்கும் இறைவனிடத்தில், நாம் நம்முடைய குற்றங்களை உணர்ந்து, திருந்திவருவோம்; நேர்மையாக நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்

Comments are closed.