உள்ளத்தில் நம்பிக்கையூட்டும் கடவுளின் பொறுமை

புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, பயிர்கள் நடுவே களைகள் விதைக்கப்பட்டன என்பதைக் கூறும் உவமையை மையப்படுத்தி, தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

களைகளை அகற்றுவதற்கு அவசரம் காட்டிய பணியாளர்களிடம், அறுவடை நாள் வரை பொறுமையைக் கடைபிடிக்கச் சொன்ன நில உரிமையாளரைப்போல, கடவுளும் பொறுமைகாட்டுகிறார் என்பதை, திருத்தந்தை, தன் மூவேளை செப உரையில் சுட்டிக்காட்டினார்.

களைக்கொல்லிகளால் பூமிக்கு நேரும் ஆபத்து

களைகளை அகற்றுவதற்கு, இன்றைய உலகில் பயன்படுத்தப்படும் களைக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் ஆகிய வேதியியல் நஞ்சுகளால், இந்த பூமிக்கும், பயிர்களுக்கும், நமக்கும் நாம் விளைவிக்கும் ஆபத்துக்களை நாம் சிந்திக்கவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வளாகத்தில் கூடியிருந்த மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

நல்ல குணங்கள், நற்செயல்கள் நிறைந்த உலகில், பொறாமையின் காரணமாக தீமைகளை விதைக்கும் அலகையின் செயல்பாடுகளை, இன்றும் நம் நடுவே காணமுடிகிறது என்று கூறிய திருத்தந்தை, ஒன்றுபட்டு வாழும் ஒரு குடும்பத்தில், பொறாமையின் காரணமாக, அவதூறுகள் விதைக்கப்பட்டு, அக்குடும்பம் பிளவுபடுவதை நாம் காண்கிறோம் என்ற எடுத்துக்காட்டையும் முன்வைத்தார்.

அவசரக் கண்ணோட்டம், பொறுமை கண்ணோட்டம்

தீமையை அகற்றுவதில் பணியாளர் காட்டும் அவசரத்திற்கும், தொலைதூரப் பார்வையுடன், பொறுமை காத்து, பயிர்களையும் களைகளையும் வளரவிடும் கடவுளின் பொறுமைக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்து, திருத்தந்தை, தன் உரையில் விளக்கிக் கூறினார்.

நில உரிமையாளரின் கண்ணோட்டத்திற்கும், பணியாளரின் கண்ணோட்டத்திற்கும் உள்ள வேறுபாடுகள், வாழ்விலும், வரலாற்றிலும் உள்ள இருவேறு கண்ணோட்டங்கள் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பணியாளர்களின் கண்ணோட்டம், களைகளின் அழிவை மையப்படுத்தி இருந்ததையும், உரிமையாளரின் கண்ணோட்டம், பயிர்களின் பாதுகாப்பை மையப்படுத்தி இருந்ததையும் சுட்டிக்காட்டினார்.

Comments are closed.