நற்செய்தி வாசக மறையுரை (ஜூலை 22)

பொதுக்காலம் பதினாறாம் வாரம் புதன்கிழமை
மத்தேயு 13: 1-9
“சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன”
நிகழ்வு
ஜப்பானிலிருந்த ஓர் இளம்பெண், தன்னுடைய தந்தையின் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாட, பக்கத்திலிருந்த ஒரு கடையிலிருந்து கேக் அதாவது சீமைப்புட்டு வாங்கச் சென்றார். அவர் அந்தக் கடையில் இருந்த பெண்மணியிடம் என்ன மாதிரியான கேக் வேண்டும் என்பதையும், எந்த அளவில் கேக் வேண்டும் என்பதையும் சொல்லிவிட்டு, கேக்கை அவர் உள்ளே சென்று, எடுத்து வரும்வரைக்கும் வெளியே காத்திருந்தார்.
அப்பொழுது கேக் வாங்க வந்த அந்த இளம்பெண், கடையில் தன்னுடைய கண்களை அலையவிட்டார். கடையின் சுவர் முழுவதும், திருவிவிலியத்திலுள்ள பக்கங்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதைப்பார்த்து வியந்துபோன, அந்த இளம்பெண், கேக்கை எடுத்துக்கொண்டு வெளியே வந்த அந்தக் கடைக்காரப் பெண்மணியிடம், “என்ன இது! உங்களுடைய கடையின் சுவர் முழுவதும் திருவிவிலியத்திலுள்ள காகிதங்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன…! திருவிவிலியம் என்றால், உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா?” என்றார். அதற்கு அந்தக் கடைக்காரப் பெண்மணி, “திருவிவிலியம் எனக்கு மிகவும் பிடிக்கும்தான்; ஆனால், இதற்குப் பின்னால் பெரிய கதை இருக்கின்றது” என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தார்:
“ஒருநாள் மாலை வேளையில் நான் கடைத்தெரு வழியாகச் சென்றுகொண்டிருந்தான். வழியில் ஒரு பழைய புத்தகக்கடை இருந்தது. அந்தக் கடைக்கு முன்பாக ஒரு பழைய புத்தகத்தின் காகிதங்கள் சிதறிக் கிடந்தன. அவற்றைப் பார்த்த நான், ‘நம்முடைய கடைக்குக் காகிதங்கள் தேவைப்படும் அல்லவா!’ என்று நினைத்துக்கொண்டு, அவற்றையெல்லாம் அள்ளிக்கொண்டு வந்து, சிலவற்றை என்னுடைய கடையின் சுவர் முழுவதும் ஒட்டிவைத்தேன். இதையடுத்து வந்த நாளில், என்னுடைய பேரன், சுவற்றில் ஒட்டபட்டிருந்த காகிதங்களைச் சத்தமாக வாசிக்கத் தொடங்கினான். அதைக் கேட்டும்பொழுது சில கருத்துகள் புரிந்துகொள்ளும்படியாகவும், சில கருத்துகள் புரிந்துகொள்ள முடியாதவாறும் இருந்தன.
இந்நிலையில் என்னுடைய கடைக்குப் பெரியவர் ஒருவர் வந்தார். அவர் என்னுடைய கடையின் சுவர் முழுவதும் காகிதங்கள் ஒட்டப்பட்டிருப்பதைப் பார்த்துவிட்டு, ‘இந்தக் காகிதங்கள் எல்லாம், எந்த நூலில் உள்ள காகிதங்கள் என்று தெரியுமா…? இதன் அர்த்தம் தெரியுமா…?’ என்று கேட்டார். நானோ, ‘இது எந்த நூலில் உள்ள காகிதங்கள் என்று தெரியாது… இதில் உள்ள கருத்துகள் பாதி புரிந்தும் பாதி புரியாமலும் இருக்கின்றன’ என்றேன். உடனே அவர் என்னைப் பக்கத்திலிருந்த ஒரு கிறிஸ்தவக் கோவிலுக்கு அழைத்துச் சென்று, அங்கு நடைபெற்ற வழிபாட்டில் என்னைத் தொடர்ந்து கலந்துகொள்ளச் செய்தார். வழிபாட்டின்பொழுது அருள்பணியாளர் ஒவ்வொருநாளும் விளக்கம் கொடுக்கும்பொழுதுதான் தெரிந்தது, என்னுடைய கடைச் சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கின்ற காகிதங்கள் எல்லாம் திருவிவிலியத்திலுள்ள என்று. மேலும் அதற்கான அர்த்தமும் புரிந்தது. இப்பொழுது நான் என்னுடைய கடைக்குக் கேக் வாங்க வருபவர்களிடம், அவர்கள் வாங்குகின்ற கேக்கோடு ஓர் இறைவார்த்தை அச்சிடப்பட்டிருக்கின்ற ஒரு சிறிய அட்டையைப் போட்டுக் கொடுக்கின்றேன்.”
அந்தக் கடைக்கார பெண்மணி சொன்னதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த இளம்பெண், “உங்களுடைய சேவை தொடரட்டும். வாழ்த்துகள்” என்று சொல்லிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றார்.
ஆம், இறைவார்த்தை என்ற விதை, நல்ல நிலமாகிய, அந்தக் கடைக்கார பெண்மணியின் உள்ளத்தில் விழுந்தது. அதனால்தான் அவர் நூறு மடங்காப் பலன் தந்தார். இன்றைய நற்செய்தி வாசகம் நாம் ஒவ்வொருவரும் நூறு மடங்கு பலன்தரும் நல்ல நிலமாக வாழ அழைக்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
பலன் தராத கெட்ட நிலங்கள்
நற்செய்தியில் இயேசு விதைப்பவர் உவமையைச் சொல்கின்றார். இயேசு சொல்லும் இந்த உவமையில் நான்கு நிலங்கள் இடம்பெறுகின்றன. இந்த நான்கில் முதல் மூன்று நிலங்களான, வழியோர நிலம், மண்ணில்லாப் பாறை நிலம், முட்செடி நிலம் ஆகிய மூன்று நிலங்களும் கெட்ட நிலங்களாக இருக்கின்றன. ஏன் கெட்ட நிலம் எனில், நல்ல நிலம் பலன் கொடுக்கும். அப்படியானால் பலன் கொடுக்காத நிலங்களைக் கெட்டநிலம் என்றுதானே சொல்லவேண்டும். மனிதர்களிலும் சில பலன் கொடுக்காத, கெட்ட நிலங்கள் இருக்கின்றார்கள். இவர்கள் தங்களுடைய வாழ்வை ஆய்வுக்கு உட்படுத்திப் பார்ப்பது நல்லது
பலன் கொடுக்கும் நல்ல நிலம்
இயேசு சொல்லக்கூடிய நான்காவது நிலம், நல்ல நிலம். இந்த நிலம் முப்பது மடங்காக, அறுபது மடங்காக, நூறு மடங்காகப் பலன் கொடுக்கின்றது. இறைவார்த்தையைக் கேட்டு, அதைத் தியானித்து, அதன்படி வாழ்கின்ற ஒவ்வொருவரும் நல்ல நிலமாக இருக்கின்றார். அதனால் அவர்கள் மிகுந்த பலன் கொடுக்கக்கூடியவர்களாக இருக்கின்றனர்.

Comments are closed.