நற்செய்தி வாசக மறையுரை (ஜூலை 17)

பொதுக்காலம் பதினைந்தாம் வாரம் வெள்ளிக்கிழமை
மத்தேயு 12: 1-8
பலியை அல்ல, இரக்கத்தை விரும்பும் இறைவன்
நிகழ்வு
ஒருமுறை மூன்று துறவிகள் காட்டுவழியாக ஓர் ஊருக்குச் சென்றுகொண்டிருந்தார். வழியில் அவர்களுக்கு அவர்கள் சென்றுகொண்டிருந்த ஊருக்கான வழி மறந்துபோனது. இதனால் அவர்கள் அங்கும் இங்கும் சுற்றியலைய வேண்டியதாயிற்று. அதனாலேயே அவர்கள் மிகவும் களைப்புறத் தொடங்கினார்கள்; பசியும் அவர்களுக்கு எடுக்கத் தொடங்கியது. இந்த நேரத்தில் அவர்கள் சுற்றும் முற்றும் பார்த்தார்கள். அப்பொழுது அவர்கள், தாங்கள் இருந்த இடத்திற்குச் சற்றுத் தொலைவில் ஒரு கோதுமை வயல் இருக்கக் கண்டார்கள். அதைக் கண்டதும், அவர்கள் அந்தக் கோதுமை வயலுக்குச் சென்று, அதிலிருந்து கதிர்களைக் கொய்து சாப்பிடத் தொடங்கினார்கள்.
இதைக் கோதுமை வயலுக்குச் சொந்தக்காரர் பார்த்துவிடவே, அவர் அந்த மூன்று துறவிகளையும் பார்த்து, “நீங்களெல்லாம் உண்மையான துறவிகள் கிடையாது; போலியான துறவிகள்! ஒருவேளை நீங்கள் உண்மையான துறவிகளாக இருந்தால், அடுத்தவருடைய வயலிலிருந்து இப்படிக் கதிர்களைக் கொய்து உண்டிருக்க மாட்டீர்கள்” என்று சத்தம் போட்டார். இதற்கு அந்த மூன்று துறவிகளில் இருந்த தலைமைத் துறவி, “நாங்கள் உம்முடைய வயலிலிருந்து கதிர்களைக் கொய்து உண்டதால், போலியான துறவிகள்தான்; ஆனால், இதை நாங்கள் விரும்பிச் செய்யவில்லை; நாங்கள் செல்லக்கூடிய ஊருக்கான வழி மறந்துபோனது. அதனால் அங்கும் இங்கும் அலையவேண்டி வந்தது. இதனாலேயே எங்களுக்குப் பசி மிகுதியாக எடுக்க, உங்களுடைய வயலிலிருந்து கதிர்களைக் கொய்து உண்ணவேண்டிய நிலை ஏற்பட்டது” என்று அமைந்த குரலில் சொல்லி முடித்தார்.
தலைமைத் துறவி இப்படிச் சொன்னதுதான் தாமதம், கோதுமை வயலுக்குச் சொந்தக்காரர், அவருடைய காலில் விழுந்து, “சுவாமி! நீங்கள் பசியால்தான் இப்படிக் கதிர்களைக் கொய்து தின்றீர்கள் என்று எனக்குத்தெரியாது. இல்லையென்றால் நான் இப்படிப் பேசியிருக்கமாட்டேன். என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னது மட்டுமல்லாமல், தன்னுடைய வயலிருந்த கொஞ்சம் கதிர்களையும் அறுத்து அவர்கள் உண்பதற்குக் கொடுத்தார்.
இந்த நிகழ்வில் வருகின்ற கோதுமை வயலின் உரிமையாளர், உண்மை தெரிவதற்கு முன்னர், மூன்று துறவிகளையும் கடுமையான வார்த்தைச் சொல்லித் திட்டினாலும், அவர்கள் பசியால்தான் அப்படி செய்தார்கள் என்ற உண்மை தெரியவந்ததும், அவர்களிடம் அவர் மன்னிப்புக் கேட்டதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய வயிற்றுப் பசியைப் போக்க, கொஞ்சம் கதிர்களையும் அறுத்துத் தருகின்றார். ஆனால், இயேசுவின் சீடர்கள் பசியால்தான் கதிர்களைக் கொய்து உண்டார்கள் என்று தெரிந்தபின்பும், பரிசேயர்கள் அவர்கள்மீது குற்றம் சுமத்துகின்றார்கள். இதற்கு இயேசுவின் பதில் என்னவாக இருக்கின்றது என்பதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
பசியினால் கதிர்களைக் கொய்து உண்ட இயேசுவின் சீடர்கள்
ஒருவர் மற்றவருடைய விளைநிலத்திற்குச் சென்றால், அதிலிருந்து கையால் கதிர்களைக் கொய்து உண்ணலாம் (இச 23: 25) என்று மோசேயின் சட்டம் சொல்கின்றது. அந்த அடிப்படையில், சீடர்கள் கதிர்களைக் கொய்து உண்டது குற்றமில்லைதான்; ஆனால், சீடர்கள் அதை ஓய்வுநாளில் செய்ததால், பரிசேயர்கள் மிகப்பெரிய குற்றமாகப் பார்க்கின்றார்கள். அப்பொழுதும்கூட பரிசேயர்கள், இயேசுவின் சீடர்கள் பசியால்தான் கதிர்களைக் கொய்து உண்டார்கள் என்று பெருந்தன்மையோடு விட்டிருக்கலாம். அவர்கள் அவ்வாறு பெருந்தன்மையோடு நடந்துகொள்ளாமல், தன்னுடைய சீடர்கள்மீது குற்றம் கண்டுபிடித்ததால், இயேசு தன் சீடர்கள் சார்பாக இருந்து, பரிசேயர்களுக்குப் பதிலளிக்கின்றார்.
அவர்கள் செய்தது தவறு இல்லை என்றால், சீடர்கள் செய்ததும் தவறு இல்லைதான்
இயேசு தன்னுடைய சீடர்கள்மீது குற்றம் கண்டுபிடித்த பரிசேயர்களுக்குப் பதிலளிக்கும்பொழுது, நான்கு விதமான பதில்களாய் அளிக்கின்றார். ஒன்று, குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய அர்ப்பண அப்பங்களை தாவீதும் அவரோடு இருந்தவர்களும் உண்டது (1சாமு 15: 22-23). இரண்டு, ஓய்வுநாள்களிலும் குருக்கள் திருக்கோயிலில் பணிசெய்வது. மூன்று, பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்று இறைவாக்கினர்கள் வழியாக ஆண்டவர் சொன்னது (திபா 40: 6-8; எசா 1: 11-17; எரே 7: 21-23; ஒசே 6:6). நான்கு, ஓய்வுநாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டது. இந்த நான்கு பதில்களையும் இயேசு தன்னுடைய சீடர்கள்மீது குற்றம் கண்ட பரிசேயர்களுக்குச் சொன்னதால், அவர்கள் எதுவும் பேசமுடியாமல் அமைதியாகிவிடுகின்றார்கள்.
ஆம். பரிசேயர்கள் தாவீது மன்னர் செய்த குற்றத்தைப் பெரிதுபடுத்தவில்லை; அப்படியானால் அவர்கள் இயேசுவின் சீடர்கள் செய்த குற்றத்தைப் பெரிது படுத்தாமல் இருந்திருக்கவேண்டும். மேலும் பரிசேயர்கள் சட்டங்களை மட்டுமே தூக்கிப் பிடித்தார்கள். அவர்கள திருச்சட்டத்தின் சாராம்சமாக இருந்த அன்பை மறந்துபோனார்கள். அதனால்தான் இயேசு அவர்களுக்குச் சரியான பதில் அளிக்கின்றார். எனவே, நாம் சட்டங்களைத் தூக்கிப் பிடிப்பதை நிறுத்திவிட்டு, அன்பையும் இரக்கத்தையும் தூக்கிப்பிடித்து, அவற்றின்படி வாழக்கற்றுக்கொண்டு, இயேசுவின் உண்மையான சீடர்கள் ஆவோம்.
சிந்தனை
‘அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு’ (குறள் எண் 80) என்பார் ஐயன் திருவள்ளவர். ஆம், அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும். அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு, எலும்பைத் தோல் போர்த்திய வெற்றுடம்பாகும். ஆதலால் நாம் சட்டத்தைத் தூக்கிப் பிடிப்பவர்களாக இல்லாமல், இரக்கத்தையும் அன்பையும் தூக்கிப்பிடித்து, அவற்றின்படி வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.