கோவிட்-19ஆல் 1 கோடி குழந்தைகள் கல்வியைத் தொடராமல் போகலாம்

கோவிட்-19 தொற்றுநோயால் உலகம் முழுவதும் பல நாடுகளில் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால்,  ஏறக்குறைய 1 கோடி குழந்தைகள், மீண்டும்  கல்வியை தொடராமல் போகலாம் என்ற அச்சத்தை வெளியிட்டுள்ளது Save the Children பிறரன்பு அமைப்பு.

குறைந்தபட்சம் 97 இலட்சம் குழந்தைகளின் கல்வி, இவ்வாண்டு இறுதிக்குள் முற்றிலுமாக துண்டிக்கப்படும் என்ற கவலையை வெளியிடும்  Save the Children அமைப்பு, மேலும் பல இலட்சக்கணக்கான சிறார்களின் கல்வி கற்றலும் பின்தங்கும் நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளது.

கோவிட்-19 தொற்றுநோயால், கல்விக்குரிய நிதி, மருத்துவ செலவுகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ளதும், ஏழ்மை அதிகரிப்பும் குழந்தைகள் கல்வியை தொடரமுடியாத நிலைக்கு முக்கிய காரணங்கள் என தெரிவித்துள்ளது, இந்த பிறரன்பு அமைப்பு.

ஏழை நாடுகளின் மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உண்மையெனினும், வளர்ந்த நாடுகளிலும், சிறார், வீட்டிலிருந்தே படிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பது, கல்வி பாதிப்புகள், அனைத்து நாடுகளுக்கும் பொது என்பதைக் காட்டுகிறது எனவும் தெரிவிக்கிறது, Save the Children அமைப்பு.

தொற்றுநோய் ஏற்படுத்தியுள்ள பொருளாதார பாதிப்புகளால், குழந்தைகளின் கல்வி நிறுத்தப்படுவது மட்டுமல்ல, அவர்களில் பலர், சிறுவயது முதலே, வேலைக்குச் செல்ல கட்டாயப்படுத்தப்படுவதுடன், சிறுமிகளுக்கு, இளவயது திருமணங்கள் இடம்பெறவும் வழிவகுக்கின்றது என தெரிவிக்கின்றது, இந்த அமைப்பு.

பல ஏழை நாடுகளில் அடுத்த 18 மாதங்களுக்கு கல்விக்கென ஒதுக்கப்பட்ட வேண்டிய நிதியில் 7,700 கோடி டாலர்கள் பற்றாக்குறை ஏற்படலாம் என்ற அச்சத்தையும் தெரிவிக்கும் Save the Children பிறரன்பு அமைப்பு, ஏழை நாடுகளின் கடன்கள் மன்னிக்கப்படுவதன் வழியாக இப்பிரச்னைக்கு ஓரளவு தீர்வு காணப்பட முடியும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்துள்ளது.

இதற்கிடையில், கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக கல்விநிலையங்களில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், 20 கத்தோலிக்க பள்ளிகளை மூட உள்ளதாகவும், மூன்று கல்வி நிலையங்களை ஒன்றாக இணைக்க உள்ளதாகவும் , அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூ யார்க் பேராயர், கர்தினால் Timoty Dolan அவர்கள் அறிவித்துள்ளார்

Comments are closed.