ஜுன் 8 : நற்செய்தி வாசகம்
ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-12
அக்காலத்தில்
இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர். அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை: “ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர். இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறு பெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு
——————————–
பொதுக்காலம் பத்தாம் வாரம்
திங்கட்கிழமை
மத்தேயு 5: 1-12
மலைப்பொழிவு, மண்ணகம் தழைத்தோங்குவதற்கான அருள்பொழிவு
நிகழ்வு
காந்தியடிகள் இலண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு, இந்தியாவிற்குத் திரும்பியிருந்த நேரம் அது.
காந்தியடிகளைப் பார்க்க, இந்தியாவின் முன்னாள் பிரதிநிதியான (Viceroy) இர்வின் பிரவு வந்தார். அவர் காந்தியடிகளிடம், “காந்தி ஜி! எங்களுடைய நாட்டிற்கும் உங்களுடைய நாட்டிற்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண எது சரியான வழியாக இருக்கும்” என்று கேட்டார். உடனே காந்தியடிகள் தன்னுடைய அறையில் இருந்த திருவிவிலியத்தை எடுத்து, அதில் மத்தேயு நற்செய்தி ஐந்தாம் அதிகாரத்தில் இடம்பெறும் இயேசுவின் மழைப்பொழிவைச் சுட்டிக்காட்டி, “இயேசு தன்னுடைய மலைப்பொழிவில் சுட்டிக்காட்டுகின்ற வழியைப் பின்பற்றி நடந்தால், நம்முடைய இரண்டு நாடுகளுக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் நடக்கும் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியும்” என்றார்.
ஆம், இயேசுவின் மலைப்பொழிவு, இந்த மனிதகுலம் தழைத்தோங்குவதற்கான வாழ்வியல் நெறிகள் அடங்கிய ஒரு பெட்டகம். நற்செய்தியில் ஆண்டவர் இயேசுவின் மலைப்பொழிவைக் குறித்து வாசிக்கின்றோம். இயேசுவின் இந்த மழைப்பொழிவு நமக்கு என்ன செய்தியைத் தருகின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
புதிய போதனை
நற்செய்தியில், இயேசு மக்கள்கூட்டத்தைக் கண்டு, மலைமேல் ஏறி, திருவாய் மலர்கின்றார். அவ்வாறு அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவைதான் இந்த மழைப்பொழிவு. அதிலும் குறிப்பாக இன்றைய நற்செய்தியில் இடம்பெறும் எட்டுவிதமான பேறுகள்.
ஏழையரின் உள்ளம், துயருறுதல், கனிவோடிருத்தல், நீதி நிலைநாட்டும் வேட்கைகொண்டிருத்தல் தூய்மையான உள்ளம், அமைதி ஏற்படுத்துதல், நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படல், இயேசுவின் பொருட்டு இகழ்ந்து துன்புறுத்தப்படல் ஆகிய இந்த எட்டுவிதமான பேறுகளும் இந்த உலகம் காட்டும் நெறிகளுக்கு முற்றிலும் எதிரானவை என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், இந்த உலகம் மற்றவருக்காகவும் கிறிஸ்துவுக்காகவும் துயருறுதல் என்பதற்குப் பதிலாக, மற்றவர்களைத் துயரப்படுத்திக் கொண்டு இருக்கின்றது. அதே போன்றுதான், இயேசு போதிக்கும் அமைதிக்குப் பதிலாக இந்த உலகம் வன்முறையைப் போதித்துக் கொண்டிருக்கின்றது. இப்படி ஒன்றாகச் சொல்லிக்கொண்டு போகலாம்.
Comments are closed.