நற்செய்தி வாசக மறையுரை (ஜூன் 08)

பொதுக்காலம் பத்தாம் வாரம்
திங்கட்கிழமை
மத்தேயு 5: 1-12
மலைப்பொழிவு, மண்ணகம் தழைத்தோங்குவதற்கான அருள்பொழிவு
நிகழ்வு
காந்தியடிகள் இலண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு, இந்தியாவிற்குத் திரும்பியிருந்த நேரம் அது.
காந்தியடிகளைப் பார்க்க, இந்தியாவின் முன்னாள் பிரதிநிதியான (Viceroy) இர்வின் பிரபு வந்தார். அவர் காந்தியடிகளிடம், “காந்தி ஜி! எங்களுடைய நாட்டிற்கும் உங்களுடைய நாட்டிற்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண எது சரியான வழியாக இருக்கும்” என்று கேட்டார். உடனே காந்தியடிகள் தன்னுடைய அறையில் இருந்த திருவிவிலியத்தை எடுத்து, அதில் மத்தேயு நற்செய்தி ஐந்தாம் அதிகாரத்தில் இடம்பெறும் இயேசுவின் மலைப்பொழிவைச் சுட்டிக்காட்டி, “இயேசு தன்னுடைய மலைப்பொழிவில் சுட்டிக்காட்டுகின்ற வழியைப் பின்பற்றி நடந்தால், நம்முடைய இரண்டு நாடுகளுக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் நடக்கும் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியும்” என்றார்.
ஆம், இயேசுவின் மலைப்பொழிவு, இந்த மனிதகுலம் தழைத்தோங்குவதற்கான வாழ்வியல் நெறிகள் அடங்கிய ஒரு பெட்டகம். நற்செய்தியில் ஆண்டவர் இயேசுவின் மலைப்பொழிவைக் குறித்து வாசிக்கின்றோம். இயேசுவின் இந்த மழைப்பொழிவு நமக்கு என்ன செய்தியைத் தருகின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
புதிய போதனை
நற்செய்தியில், இயேசு மக்கள்கூட்டத்தைக் கண்டு, மலைமேல் ஏறி, திருவாய் மலர்கின்றார். அவ்வாறு அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவைதான் இந்த மலைப்பொழிவு. அதிலும் குறிப்பாக இன்றைய நற்செய்தியில் இடம்பெறும் எட்டுவிதமான பேறுகள்.
ஏழையரின் உள்ளம், துயருறுதல், கனிவோடிருத்தல், நீதி நிலைநாட்டும் வேட்கைகொண்டிருத்தல் தூய்மையான உள்ளம், அமைதி ஏற்படுத்துதல், நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படல், இயேசுவின் பொருட்டு இகழ்ந்து துன்புறுத்தப்படல் ஆகிய இந்த எட்டுவிதமான பேறுகளும் இந்த உலகம் காட்டும் நெறிகளுக்கு முற்றிலும் எதிரானவை என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், இந்த உலகம் மற்றவருக்காகவும் கிறிஸ்துவுக்காகவும் துயருறுதல் என்பதற்குப் பதிலாக, மற்றவர்களைத் துயரப்படுத்திக் கொண்டு இருக்கின்றது. அதே போன்றுதான், இயேசு போதிக்கும் அமைதிக்குப் பதிலாக இந்த உலகம் வன்முறையைப் போதித்துக் கொண்டிருக்கின்றது. இப்படி ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டு போகலாம்.
இயேசு ஏன் இந்த உலகம் போதிக்கும் போதனைக்கு மாறாக அமைதியையும் இரக்கத்தையும் கனிவையும் போதித்து, அவற்றை நாம் கடைப்பிடித்து வாழவேண்டும் என்று சொல்கின்றார் என நமக்குக் கேள்வி எழலாம். இதற்கான பதிலை இயேசு யோவான் நற்செய்தியில் கூறுகின்றார். “நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாததுபோல், அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல” (யோவா 17: 14) என்று இயேசு கூறுவதிலிருந்த நாம் இந்த உலகம் காட்டும் போதனைகளின்படி வாழாமல், இயேசு காட்டும் போதனைகளின்படி, வாழ அழைக்கப்படுகின்றோம். புனித பவுலும் இதைத்தான், “நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுகள்” (கொலோ 3:1) என்று கூறுகின்றார். ஆகையால், நாம் இயேசுவின் சீடர்களாக இருக்க வேண்டுமெனில், அவருடைய இந்தப் புதிய போதனையைக் கடைப்பிடித்து வாழவேண்டும்.
மண்ணகத்தில் அல்ல, விண்ணகத்தில் கைம்மாறு கிடைக்கும்
இயேசுவின் இந்தப் புதிய போதனையை கடைப்பிடித்து வந்தால் ஒருவருக்கு என்ன கைம்மாறு கிடைக்கும் என்ற கேள்வி எழலாம். இயேசுவின் இப்போதனையைக் கடைப்பிடித்து வந்தால், மண்ணகத்தில் துன்பம் வரலாம்; பிறருடைய வெறுப்பைச் சம்பாதிக்கலாம் (யோவா 16: 33). ஆனால், விண்ணகத்தில் கைம்மாறு கிடைக்கும். இதைத்தான் இயேசு இன்றைய நற்செய்தியின் இறுதியில் இவ்வாறு கூறுகின்றார்: “…மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.”
ஆம், மனிதர்கள் தரும் புகழ்ச்சியான வார்த்தைகளோ, பாராட்டுகளோ புகைபோல மறைந்துவிடும். ஆனால், இறைவன் தரும் கைம்மாறு நீடித்து இருக்கும். ஆகையால், நாம் இந்த உலகம் காட்டும் வழியில் நடந்து, உலகைச் சார்ந்தவர்களாய் இராமல், இயேசு காட்டும் வழியில் நடந்து, அவருடைய உண்மையான சீடர்களாக இருப்போம்; அவர் தருகின்ற கைம்மாறினைப் பெற்று மகிழ்வோம்.
சிந்தனை
‘அழிவுக்குக் காரணமாக இருக்கும் அணுவைக் குறித்து அறிந்துகொண்டோம்; வாழ்வுக்குக் காரணமாக இருக்கும் இயேசுவின் மலைப்பொழிவைக் குறித்து இன்னும் அறிந்துகொள்ளவில்லை’ என்பார் அமெரிக்காவின் முன்னாள் இராணுவத் தளபதியான ஓமர் பிராட்லே. ஆகையால், நாம் வாழ்வுக்குக் காரணமாக இருக்கும் இயேசுவின் மலைப்பொழிவைக் குறித்து முழுமையாக அறிந்துகொண்டு, அதன்படி வாழ முயற்சி செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.