தேவமாதாவின் வணக்கமாதம் மே 24

தேவமாதா பூர்வீக கிறிஸ்தவர்களுக்குச் செய்த உதவியின் பேரில்!
அவர்களுக்குத் தூண்டுதலாய் இருந்தது.
சர்வ ஆராதனைக்குரிய உலக இரட்சகர் இவ்வுலகை விட்டு வெற்றி வீரராய் மோட்சத்துக்கு எழுந்தருளியபோது தம்மால் ஸ்தாபிக்கப்பட்ட திருச்சபைக்கு ஓர் தூண்டுதலாகவும், ஆலோசகராகவும் இருக்கவும் பூர்வீக கிறிஸ்தவர்கள் கொண்ட சந்தேகங்களைத் தீர்க்க ஞான ஒளியாய் இருக்கவும் செய்ய வேண்டிய புண்ணியங்களுக்கு போதனையாயிருக்கவும் தமது நேச அன்னையை இவ்வுலகில் நிலைநிறுத்த திருவுளங்கொண்டார்.
அக்காலத்திலிருந்த விசுவாசிகள் தங்களுடைய ஆண்டவளைப் போலவும் போதகியைப் போலவும், எண்ணி அன்னையிடத்தில் ஆலோசனைக் கேட்க வருவார்கள். அப்பொழுது அந்த திவ்விய நாயகி அவர்களுடைய சந்தேகங்களைத் தெளிவித்து அறியாமையை நீக்கித் தம்மிடமுள்ள அறிவு விவேகத்தின் ஞானச் செல்வங்களை மகா அன்போடு அவர்களுக்குத் தந்தருள்வார்கள். நீங்கள் படுகிற சந்தேகங்களில் உறுதியான நம்பிக்கையோடு தேவ மாதாவினிடத்தில் ஓடிவந்து, உங்கள் புத்திக்குப் பிரகாசம் கொடுத்து உங்களைக் காப்பாற்றுமாறு மன்றாடுவீர்களாகில் உங்களுக்கு வேண்டிய ஞானப் பிரகாசங்களையும் வரப்பிரசாதங்களையும் நீங்கள் நிச்சயம் அடைவீர்கள்.
அவர்களுக்கு மாதிரிகையாய் இருந்தது.
மனத்தாழ்ச்சி, ஒடுக்கம், தேவபக்தி, பிறர் சிநேகம் இவை முதலான சுகிர்த புண்ணியங்களையெல்லாம் மகாப்பிரகாசத்தோடு தேவமாதாவினிடத்தில் துலங்கிக் கொண்டிருந்தன. இந்தப் பரம நாயகியின் வாழ்வெல்லாம் பரிசுத்தத்தின் உத்தம மாதிரிகையாக இருந்தது, எவ் வயதும், எவ் வந்தஸ்து முள்ள கிறிஸ்தவர்களையும் புண்ணிய வழியில் தீவிரமாய் நடக்கச் செய்தது. பூர்வீக விசுவாசிகள் அன்னையிடத்தில் உன்னத சாங்கோபாங்கமாக இருக்கிறதைக்கண்டு அதிசயப்பட்டுத் தங்களால் இயன்ற மட்டும் அவர்களைப் பின்செல்லப் பிரயாசைப்பட்டார்கள். நீங்கள் அந்தத் தேவதாயாருடைய புண்ணியங்களைக் கண்டுபாவித்து அன்னையின் உத்தம மாதிரிகையைப் பின் சென்று நடக்கக்கடவீர்களாக. அன்னையுடைய நடக்கையையும் உணர்ச்சிகளையும் இடைவிடாது தியானித்து ஆராய்ந்து பார்ப்பீர்களாகில், சர்வேசுரனுக்குத் தக்க பிரமாணிக்கத்தோடு ஊழியம் பண்ணவும், புறத்தியாருக்குச் செய்ய வேண்டிய உதவி செய்யலாம். கற்பை நேசிக்கவும், பரிசுத்தமாய் வாழவும் அவசியமான வழி வகைகளை அறிந்துகொள்ளுவீர்கள். அப்படி எல்லாவற்றையும் பார்க்கச் சர்வேசுரனை அதிகமாய்ச் சிநேகித்து, உங்களுடைய சரீரத்தைப் பகைத்து, மனத்தாழ்ச்சியும் அடக்க ஒடுக்கமும் தேவ பக்தியும் உங்கள் கடமைகளைச் செலுத்துவதில் பிரமாணிக்கமும் உள்ளவர்களாய் இருக்க தேவமாதாவினிடமிருந்து கற்றுக் கொள்வீர்களாக.
அவர்களுக்கு அடைக்கலமாய் இருந்தது.
தேவமாதா பூர்வீக கிறிஸ்தவர்களுக்கு அடைக்கலமாயிருந்தார்கள். அவர்கள் தாங்கள் அடைந்த கஸ்திகளிலும் திருச்சபைக்கு உண்டான துன்பங்களிலும் தங்களுக்கு அவசரமான காரியங்களிலும் தேவமாதாவின் அடைக்கலத்தைத் தேடி ஓடிவருவார்கள். அன்னை தங்கள் பேரில் மிகவும் பிரியமுள்ளவர்களாயும் தம்முடைய திருக்குமாரனிடத்தில் சர்வ வல்லபமுள்ளவர்களாயும் இருக்கிறதை அறிந்து கெட்டியான நம்பிக்கையுடன் அன்னையின் ஆதரவைத் தேடிக் கொண்டிருந்தார்கள். நீங்களும் இந்த நியாயங்களை கண்டுனுர்ந்து தேவமாதாவின் பேரில் தளராத நம்பிக்கைக் கொள்ளக்கடவீர்கள். நீங்கள் மேற்கொள்ளும் இலெளகீக இக்கட்டுகளிலும் உங்களுக்கு தேவையான ஞானக் காரியங்களிலும் உங்களுடைய திருத்தாயாரை நோக்கி அபயமிட்டு மன்றாடுங்கள். அந்தப் பூர்வீக கிறிஸ்தவர்கள் செய்ததைப்போல் பக்தியோடு மன்றாடுவீர்களாகில், உங்களுடைய மன்றாட்டுக்களுக்கு இரங்குவார்களென்பது நிச்சயம். சில சமயங்களில் நீங்கள் கேட்கிற காரியங்களை அடையாதிருந்ததினால் நீங்கள் பக்தியுடன் வேண்டிக்கொள்ளாமல் இருந்ததினால்தான் அவைகளை அடையவில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
செபம்.
பரிசுத்த மரியாயே! என் தஞ்சமே! எத்தனையோ பாவத்தைக் கட்டிக்கொண்டு பசாசுக்கு அடிமையாகி நித்திய நரகத்திற்குப் போவதற்குப் பாத்திரவானானேன்! நீர் என் பாவக்கட்டுகளை அவிழ்த்து என் எதிரிகளின் கையில் நின்று என்னை மீட்டீர். ஆனால் கெட்ட பசாசு என்னைக் கொடுக்க இடைவிடாது எனக்குச் சோதனை கொடுப்பதினால் அதற்குத் திரும்பி அடிமையாய்ப் போவேன் என்று மிகவும் பயப்படுகிறேன். பரிசுத்த கன்னிகையே! எனக்கு ஆதரவாயிரும். தஞ்சமாயிரும், உமது உதவியுடன் என் எதிரிகளை வெல்லுவேன் என்பதற்குச் சந்தேகமில்லை. ஆனால் எனக்கு வரும் தந்திர சோதனைகளிலும், விசேஷமாய் என் மரணவேளையில் பசாசு என்னுடன் தொடுக்கும் கடின யுத்தத்திலும் நான் உம்மை மறந்து போகாமல் உமது அடைக்கலத்தை உறுதியான விசுவாச நம்பிக்கையுடன் தேடும் பொருட்டு எனக்கு விசேஷ உதவி செய்தருளும். அப்பொழுது சேசுக்கிறிஸ்துநாதருடைய திருநாமத்தையும், உம்முடைய இன்பமான திருப்பெயரையும், ஜெபமாலையை பக்தியோடு சொல்லி இஷ்டப் பிரசாதத்தோடு நான் மரிக்கும்படிக்கு கிருபை செய்தருளும்.
ஆமென்
அர்ச். பெர்நந்து தேவமாதாவை நோக்கி வேண்டிக்கொண்ட செபம்.
மிகவும் இரக்கமுள்ள தாயே! உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்து உம்முடைய உபகார சகாயங்களை இரந்து உம்முடைய மன்றாட்டுக்களின் உதவியைக் கேட்ட ஒருவனாகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் கேள்விப்பட்டதில்லையென்று நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே! தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தை அண்டி வருகிறேன். பெருமூச்செறிந்தழுது பாவியாகிய நான் உமது தயாளத்துக்குக் காத்துக் கொண்டு உமது சமூகத்திலே நிற்கிறேன். அவதரித்த வார்த்தையின் தாயே என் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய்க் கேட்டுத் தந்தருளும். ஆமென்.

Comments are closed.